
இந்த தீபாவளிக்கு இன்னும் திட்டமிடல. `பொன்னியின் செல்வன்'ல மாமா சூப்பர்பா நடிச்சிருக்கார். பிரமிக்க வச்சிட்டார். அம்மம்மா வீட்டுல அத்தனை பேரும் ஒண்ணா அசம்பிள் ஆனாலே, கலர்ஃபுல் தீபாவளி ஆகத்தான் இருக்கும்.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
திரையுலகினர் மதிப்பும் மரியாதையுமாக அணுகும் குடும்பங்களில் எடிட்டர் மோகனின் குடும்பமும் ஒன்று. குழந்தை வளர்ப்பில் முன்னுதாரணமாக அவரது குடும்பத்தை ஆச்சரியமாகச் சொல்வார்கள். அவர் மகன்களில் மோகன் ராஜா இயக்குநராகவும், ஜெயம் ரவி ஹீரோவாகவும் ஸ்கோர் செய்கின்றனர். எடிட்டர் மோகனுக்கு ரோஜா என்கிற மகளும் உண்டு. அண்ணனும் தம்பியும் சினிமாவில் இருந்தாலும், ஒரு பல் மருத்துவராகப் புன்னகைக்கிறார் ரோஜா.
``உங்க குடும்பத்தைச் சந்திக்க வரலாமா?" என ஒன்லைனாகக் கேட்டால், ``விகடனுக்கு ஆல்வேஸ் வெல்கம்'' என முகம் மலர்கிறார் ரோஜா. கோடம்பாக்கத்தில் உள்ள ரோஜாவின் வீட்டிற்குச் சென்றால் கணவர் எல்.சசிகுமார், குழந்தைகள் த்ரிஷா, பிரதிக்ஷா என அத்தனை பேரும் வாசலில் ஸ்வீட்டுடன் வரவேற்கிறார்கள்.
``விகடனில் நடந்த (ஜெயம்) ரவியோட பிரஸ்மீட்ல நான் சர்ப்ரைஸ் விசிட் அடிச்சிருப்பேன். நான் முதன்முதலில் பேட்டின்னு பேசினது இங்கேதான். ரவியை நான் நல்லா கலாய்ச்சிட்டேன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, என் பேட்டியை என் ஃப்ரெண்ட்ஸ், ஆஸ்பிட்டல் வரும் பேஷன்ட்ஸ்னு எல்லாருமே பார்த்திருக்காங்க. `நீங்க நல்லா பேசியிருக்கீங்க... கலகலன்னு பேசுறீங்க'ன்னு பாராட்டுறாங்க. இவ்ளோ பாராட்டுகள் கிடைக்கும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல...'' இன்னமும் ஆச்சரியமும் ஆனந்தமுமாகப் பேசும் ரோஜாவை, பெருமிதமாகப் பார்க்கிறார் கணவர் சசிகுமார். ஒளிப்பதிவாளராக கரியரை ஆரம்பித்தவர். இன்று, நிர்வாகத் தயாரிப்பாளர். தவிர, பல முக்கியமான இந்தியப் படங்களில் இவர்களது டாப் எண்ட் கேமராக்கள்தான் பணியாற்றுகின்றன. சசிகுமாரின் அப்பா லட்சுமிகாந்தன், ஸ்டில் போட்டோகிராபர். நடிகர் திலகம் சிவாஜியில் ஆரம்பித்து பாரதிராஜா, ப்ரியதர்ஷன், ரஜினி, கமல் எனப் பலருக்கும் நெருக்கமானவர். ரோஜா - சசிகுமார் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். பெரிய பொண்ணு த்ரிஷா, பல் மருத்துவம் படிக்கிறார். சின்னவள் பிரதிக்ஷா, பள்ளியில் படித்துவருகிறார்.

``எங்களுக்கும் இதான் முதல் பேட்டி. என்ன பேசணும்னு தெரியல. மீடியாவில் இதுவரை எங்க முகம் வந்ததில்ல. எங்க ஸ்கூல், காலேஜ்லகூட எங்க மாமாதான் ஜெயம் ரவின்னு எங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தவிர யாருக்கும் தெரியாது'' என்ற த்ரிஷாவும் பிரதிக்ஷாவும் அப்பாவை அணைத்துக்கொண்டு நின்றார்கள். இரண்டு மகள்களும் அப்பா செல்லம்.
``எங்க வீட்ல என் பொண்ணுங்க ரெண்டு பேரும் அவங்க அப்பாவோடு இருக்க போட்டோஸ் நிறையவே இருக்கு. ஆனா, என்னோட காம்பினேஷன்கள் அவங்க போட்டோஸை மொபைல் கேலரியில தேடித்தான் பார்க்கணும்'' என்ற அம்மா ரோஜாவுக்குச் செல்லமாக முத்தம் கொடுத்தபடி, அம்மாவோடு விதவிதமாக போஸ் கொடுத்தார்கள் மகள்கள். போட்டோசெஷன் நடந்து கொண்டிருக்கும்போதே, எடிட்டர் மோகனும், வரலட்சுமி மோகனும் என்ட்ரி ஆக, அத்தனை பேர் முகமும் பிரைட்ஃபுல் ஆனது. த்ரிஷாவும் பிரதிக்ஷாவும் தாத்தா- பாட்டியைக் கொஞ்சி வரவேற்க... நெகிழ்ந்தார்கள்.
``ரோஜா எங்களுக்கு ரொம்ப செல்லம். ராஜா, ரவின்னு மட்டுமில்ல, அத்தனை பேரையும் அவ கண்ட்ரோல்ல வச்சிருப்பா. அப்படி ஒரு கண்ட்ரோலர். ஆனா, பாசக்காரப் பொண்ணு'' என அப்பா மோகன் குட் சர்ட்டிபிகேட் கொடுக்கவும், பேத்திகள் குஷியானார்கள்.
``பெரிய பேத்தி த்ரிஷாவுக்கு காலேஜ்ல ரொம்ப நல்ல பெயர். காலேஜ்ல அவளே ஒரு டூத் பேஸ்ட் கண்டுபிடிச்சு, அதுக்குப் பாராட்டும் வாங்கியிருக்கா. இப்ப அதுக்குக் காப்புரிமை வாங்கவும் விண்ணப்பிச்சிருக்கா. அம்மம்மாவா பெருமையா இருக்கு'' என்று பூரித்த வரலட்சுமி மோகன், தீபாவளி நினைவலைகளில் கரைந்தார்.
``இந்தச் சந்திப்பைப் பார்க்கறப்ப எனக்கு சின்ன வயசு தீபாவளி ஞாபகத்துக்கு வருது. சின்ன வயசிலேயே எனக்கு அம்மா கிடையாது. எங்க அப்பா ரொம்ப செல்லமா வச்சிருப்பார். தீபாவளிக்கு காஸ்ட்லியா டிரஸ் எடுத்துக் கொடுப்பார். எங்க தெருவிலேயே ரொம்ப காஸ்ட்லியா டிரஸ் போட்டிருக்கறது நானாகத்தான் இருக்கும். என் கணவர் எனக்கு டிரஸ் எடுத்துட்டு வர்றதே, புது யுக்தியா இருக்கும். பெரிய துணிக்கடைகளில் ஷோகேஸ் பொம்மைகளுக்கு என்ன போட்டிருக்காங்களோ அந்த டிரஸ்ஸை எனக்கு எடுத்துக்கொடுப்பார். மகன் ராஜாவுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. ரோஜாவுக்கு ரெண்டு பொண்ணுங்க... ரவிக்கு ரெண்டு பையன்கள்னு பேரன் பேத்திகளோடு இப்ப தீபாவளி கொண்டாடுறது இன்னும் சந்தோஷமா இருக்கு'' என வரலட்சுமி சிரித்துக்கொண்டே சொல்லவும், இடைமறித்தார் மோகன்.
``ஷோகேஸ் பொம்மை அணிந்திருந்த டிரஸ்ஸை ஏன் வாங்குவேன்னா, பொதுவா துணிக்கடையில அவங்ககிட்ட இருக்கற பெஸ்ட் டிரஸ்ஸைத்தான் ஷோகேஸ் பொம்மைக்கு வச்சிருப்பாங்க. அதான் நல்லாவும் இருக்கும். அதனால அதை வாங்கிடுவேன். நமக்கும் செலக்ட் பண்ற நேரம் மிச்சமாகும்'' எனக் கலகலத்தவர், ``என் பேத்திகளுக்கு `சந்தோஷ் சுப்ரமணியம்' ரொம்பப் பிடிக்கும். அதுவும், அதில் `எல்லா தப்பையும் நீங்கதானப்பா பண்ணுனீங்க'ன்னு ஒரு டயலாக் வரும். அந்த டயலாக்ல இவங்க எல்லாருமே கைதட்டினாங்க. அது என்னைக் கலங்கடிச்சிடுச்சு. அந்தப் படத்துல பிரகாஷ்ராஜ் நடிச்சிருந்தார். அந்த சீனை ஷூட் பண்ணினதும் அவர்கிட்ட இருந்து போன் வந்திடுச்சு. உங்க பையன் நடிப்பு என்னையே கலங்கடிச்சிடுச்சுன்னு சொன்னார். மறக்க முடியாத பாராட்டா பார்க்கறேன்'' என்றார் மோகன்.
``பேரன் பேத்திகள் வீட்ல இருந்தாலே ஆனந்தமா இருக்கும். ராஜாவின் மகள் வர்ணிகா அப்பா மாதிரி டைரக்ஷன் பண்ணுவா. செல்போன் எடுத்துட்டு ரவியோட பசங்க, ரோஜாவோட பொண்ணுங்கன்னு எல்லாரையுமே அவ நடிக்க வச்சு, ஷார்ட் பிலிம்ஸ் படமாக்குவா'' என வரலட்சுமி மோகன் பேத்திகளைப் பார்த்துச் சொல்லவும், த்ரிஷாவும் பிரதிக்ஷாவும் எனர்ஜியானார்கள்.
``ரவி மாமாவோட படங்கள்ல 'சந்தோஷ் சுப்ரமணியம்', `தனி ஒருவன்' ரொம்பப் பிடிக்கும். குறிப்பா ரவி மாமா எமோஷனல் நடிப்புக்கு நான் பெரிய ஃபேன்'' என த்ரிஷா சொல்லவும், ``அந்த ரெண்டு படங்களோட `தில்லாலங்கடி'யும் சேர்த்துக்குங்க. அதோட ஷூட்டிங்கிற்கும் நாங்க போயிருக்கோம்'' என்று சொன்ன பிரதிக்ஷாவிடம், ``நீ தமன்னா ரசிகையாச்சே. அதைத் தமன்னாவிடமே அவ சொல்லியிருக்கா'' என்ற த்ரிஷாவை ஆச்சரியமாகப் பார்த்த ரோஜா, தன் அண்ணன், தம்பி இருவர் பற்றியும் சுவாரசியங்களைப் பகிர்ந்தார்.
``ரவிக்கு டைரக்ஷன்ல ஆர்வம் இருக்கு. என் மகள் த்ரிஷாகிட்ட மூணு கதைகள் சொல்லியிருக்கார். ராஜாவும் ரவியும் அவங்க படங்கள் தொடங்கறப்ப வீட்ல உள்ள அத்தனை பேரையும் ஒண்ணா, உட்கார வச்சு கதைகள் சொல்வாங்க. அதிலும் இரவு எட்டு மணிக்கு ராஜா கதை சொல்ல ஆரம்பிச்சார்னா, அப்படியே விடியற்காலை ஆகிடும். எந்த இடத்திலும் போர் அடிக்காமல் சொல்லுவார். படம் என்னவோ இரண்டரை மணி நேரம்தான் இருக்கும். ஆனா, ராஜா ப்ரேம் பை ப்ரேம் எல்லா டயலாக்கும் சேர்த்து உணர்ச்சி மயமா சொல்வார். குழந்தைகளும் பெரியவங்களுமா நாங்க கேட்குறப்ப, எங்க சந்தேகங்களையும் க்ளியர் பண்ணுவார். அவர் கதை சொல்றப்ப நாங்க கரெக்ஷன்ஸ் சொன்னால், அது சரியா இருந்தால் கேட்டுக்குவார். இல்ல, அவர் கருத்துதான் சரி என்றால், எங்களை கன்வின்ஸ் செய்வார். இன்னொரு விஷயம், கதை கேட்கும்போது நம் முழுக்கவனமும் அவர்மீது இருக்கணும். மிலிட்டரி கண்ட்ரோல்ல வைப்பார்'' என ரோஜா சொன்னதைக் கேட்டு அத்தனை பேரும் தலையசைத்து ஆமோதித்தார்கள்.
இது சசிகுமாரின் டேர்ன். ``ராஜாவுக்கும் எனக்கும் ஒரே ஏஜ்னால, நாங்க நண்பர்களா இருப்போம். ஆனா, ரவி எனக்குக் குழந்தை மாதிரி. என் மீது ரொம்பப் பிரியமா இருப்பார். ரெண்டு பேரோட படங்கள் பார்க்கும்போது, ஒளிவுமறைவு இல்லாமல் என் கருத்தைச் சொல்லிடுவேன். நல்லா இல்லேன்னா நல்லா இல்லேன்னுதான் சொல்வேன். அந்த நேர்மை ரவிக்குப் பிடிக்கும். ரவி காலேஜ் படிக்கறப்ப ஷார்ட் பிலிம் எடுத்திருந்தார். அதை என்கிட்டதான் காட்டி சந்தோஷப்பட்டார்'' என உற்சாகமானார் சசிகுமார்.

அடுத்து டாபிக், எடிட்டர் மோகனின் சதாபிஷேகம் பக்கம் திரும்பியது. ``சமீபத்துல எங்க சதாபிஷேகம் நடந்தது. எங்க பிள்ளைங்க, பேரன், பேத்திங்க எல்லாரும் வேலையைப் பங்கிட்டு, சீரும் சிறப்புமா சதாபிஷேகத்தைக் கொண்டாடினது சந்தோஷமா இருக்கு'' என வரலட்சுமி மோகன் நெகிழ, ``நிஜமாகவே அதைப் பெரிய கொடுப்பினையா பார்க்கறேன். எத்தனை பிள்ளைங்களுக்கு பெத்தவங்களுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கற பாக்கியம் கிடைக்கும். எங்களுக்குக் கிடைச்சிருக்கு'' என ரோஜாவும் நெகிந்து மகிழ்ந்தார்.
``ரோஜாவைப் பார்த்து பிரமிக்கறேன். வீட்டையும் குழந்தைகளையும் நல்லா பாத்துக்கறா. சொந்தமா டென்டல் க்ளினிக் நடத்துறா. அடுத்தும் ஒரு க்ளினிக் தொடங்கியிருக்கா. இவ்வளவு வேலைகளுக்கிடையே தன் தொழில் தொடர்பா வெளிநாட்டுல உள்ள ஒரு உயர் படிப்பையும் படிச்சு பாஸ் பண்ணியிருக்கா. அவ விரும்பித் தேர்ந்தெடுத்த துறையில கவனம் செலுத்திட்டு இருக்கா'' என மோகனும் வரலட்சுமியும் பெற்றோராய்ப் பெருமிதம் கொள்ள, ``எங்க அப்பாகிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் எல்லாமே. அவர் எங்களை எப்படி வளர்த்தாரோ... அப்படி நாங்க எங்க குழந்தைகளை வளர்க்கறோம்'' என்றார் ரோஜா.
``சின்ன வயசில் பொன்னியின் செல்வன் நாவலை விரும்பி விரும்பி வாசிச்சிருக்கேன். பின்னாளில் அந்தக் கதையில் அருண்மொழி வர்மனாக என் மகன் நடிப்பான்னு நான் நினைச்சுப் பார்த்ததில்லை. என் வாழ்க்கையைப் பத்தி ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். நாம சாகும்போது எதையும் எடுத்துட்டுப் போறதில்லை என்பது எல்லாரும் சொல்றதுதான். ஆனா, நாம நிறைய விட்டுட்டுப் போறோம். அது நல்லதா இருக்கணும்னு நான் விரும்புறேன்'' என மோகன் நெகிழ, பேத்திகளின் பேச்சு தீபாவளிக்குப் போனது.
``இந்த தீபாவளிக்கு இன்னும் திட்டமிடல. `பொன்னியின் செல்வன்'ல மாமா சூப்பர்பா நடிச்சிருக்கார். பிரமிக்க வச்சிட்டார். அம்மம்மா வீட்டுல அத்தனை பேரும் ஒண்ணா அசம்பிள் ஆனாலே, கலர்ஃபுல் தீபாவளி ஆகத்தான் இருக்கும். அதிலும் ஒவ்வொரு தீபாவளியும் ரொம்பவே ஸ்பெஷல். மாமாக்கள் புதுத்துணி, சாக்லெட்ஸ்னு வாங்கி வச்சிருப்பாங்க... நினைக்கவே ஆனந்தமா இருக்கு'' என த்ரிஷாவும் பிரதிக்ஷாவும் தீபாவளியை வரவேற்க ரெடியானதில், ஆரம்பமானது ஆனந்த தீபாவளி.