சினிமா
Published:Updated:

“முதல்முறையா ரஜினியுடன் நடிக்கப் போறேன்!”

மகள்களுடன் ஜீவிதா ராஜசேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
மகள்களுடன் ஜீவிதா ராஜசேகர்

முதல் படத்தை மறக்க முடியுமா என்ன! நல்லா ஞாபகம் இருக்கு. அப்ப எனக்கு ரொம்ப சின்ன வயசு. பதினொன்னாவது படிச்சிட்டிருந்தேன்னு நினைக்கறேன்.

தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலகட்டங்களில் இயல்பான கதாநாயகியாகக் கவர்ந்திழுத்தவர் ஜீவிதா ராஜசேகர். டி.ராஜேந்தரின் ‘உறவைக் காத்த கிளி’, விஜயகாந்தின் ‘நானே ராஜா நானே மந்திரி’ சத்யராஜின் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ உட்பட பல படங்களின் நாயகியான ஜீவிதா, இயக்குநரும் ஹீரோவுமான டாக்டர் ராஜசேகரைத் திருமணம் செய்துகொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆனார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்க வருகிறார். ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’ படத்திற்காக அவரை அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

``தெலுங்கில் இயக்குநராகவும் பெயர் வாங்கின நீங்க, இப்ப ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்க வந்திருக்கீங்க...’’

‘‘எதையும் நாம திட்டமிட்டுப் பண்ணுறதைவிட, வாழ்க்கை நம்மை எந்தப் பாதையில் அழைச்சிட்டுப் போகுதோ, அந்த வழியில் பயணிச்சா அழகான பயணமா அமையும்னு நம்புறேன். தமிழில் வெளியான ‘சேது'வைத் தெலுங்கில் ராஜசேகர் சார் நடிப்பில் ‘சேஷு’னு ரீமேக் பண்ணுறப்ப திடீர்னு அதை நானே இயக்கற சூழல் அமைஞ்சது. அப்படியே நாலு படங்கள் இயக்கினேன். அதைப்போல, தெலுங்கில் நான் நடிச்ச ‘மகாடு’, தமிழ்ல ‘மீசைக்காரன்’னு டப் ஆச்சு. நல்லா ஓடுச்சு. நான் கடைசியாக நடிச்ச படம் அதுதான்.

1991-ல எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. கணவர், குடும்பம், குழந்தைகள்னு பொறுப்புகள் அதிகமாகிடுச்சு. நடிப்பில் கவனம் செலுத்த முடியல. இனிமே நடிக்கக்கூடாதுன்னு முடிவு எடுக்கவும் இல்ல. ஏன்னா, சினிமாவுல இருக்கறது பாக்கியம். அதனால நடிக்க யார் கூப்பிட்டாலும் நடிக்க மாட்டேன்னு ஒருபோதும் சொன்னதில்ல. ஆனா குழந்தைகள் படிப்பு, கணவரின் பிஸியான வேலைகள்... இப்படியான சூழல்களால நடிப்பிற்கு என்னால நேரம் ஒதுக்கவே முடியாமல் இருந்தது.

மகள்களுடன் ஜீவிதா ராஜசேகர்
மகள்களுடன் ஜீவிதா ராஜசேகர்

இப்ப ரெண்டு பொண்ணுகளும் வளர்ந்துட்டாங்க. இந்தச் சூழல்லதான் ஐஸ்வர்யா அவங்க இயக்குற படத்துல என்னை நடிக்கக் கேட்டாங்க. இந்தப் படத்துக்கு முன்னாடியே அவங்க ராஜசேகர் சாரை வச்சு ஒரு படம் தொடங்கறதுக்கான பேச்சு போயிட்டிருந்தது. ஆனா, காலம் கனிந்து வரல. அப்போதிலிருந்து ஐஸ்வர்யா நட்பானாங்க. அடிக்கடி நாங்க பேசிக்குவோம். அவங்களோட ‘லால் சலாம்’ பட பூஜையின்போது என்கிட்ட மறுபடியும் நடிக்கக் கேட்டாங்க. சென்னை வந்தப்ப அவங்கள சந்திச்சேன். ‘இந்த கேரக்டர்ல நீங்க நடிச்சா ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு பலரும் சொல்றாங்க’ன்னு சொன்னாங்க. படத்தின் கதையையும் சொன்னாங்க. உடனே என் கணவர்கிட்ட சொன்னதும் அவரும் ‘நடிக்கலாம்'னு உற்சாகப்படுத்தினார். அதனால ஐஸ்வர்யாகிட்ட ஓக்கே சொல்லிட்டேன்.

‘லால் சலாம்'ல முக்கியமான ஒரு கதாபாத்திரம். ரஜினி சாரோட சேர்ந்து நடிக்கப்போறேன். முதன்முறையா அவரோட நடிக்கறேன். அதுவே சந்தோஷமா இருக்கு. நான் ஹீரோயினா தமிழ்ல இருந்த காலகட்டத்துல அவரோட சேர்ந்து நடிக்கற வாய்ப்பு கிடைக்கல. தவிர, இந்தப் படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசை, லைகா, ரெட் ஜெயண்ட் தயாரிப்புனு நல்ல டீமும் அமைஞ்சிருக்கு. உடனே படப்பிடிப்புக்கு வரச் சொல்லியிருக்காங்க.’’

மகள்களுடன் ஜீவிதா ராஜசேகர்
மகள்களுடன் ஜீவிதா ராஜசேகர்

``உங்க முதல் படம் ‘உறவைக் காத்த கிளி’ வெளியாகி 40 வருஷத்தை நெருங்குது. சினிமாவுக்குள் நீங்க வந்த கதையைச் சொல்லுங்களேன்..?’’

‘‘ஆமாங்க. முதல் படத்தை மறக்க முடியுமா என்ன! நல்லா ஞாபகம் இருக்கு. அப்ப எனக்கு ரொம்ப சின்ன வயசு. பதினொன்னாவது படிச்சிட்டிருந்தேன்னு நினைக்கறேன். எங்க பூர்வீகம் ஆந்திரான்னாலும், நான் சென்னையில உள்ள ஜி.என்.செட்டி தெருவில்தான் தாத்தா, பாட்டி வீட்டுல இருந்து ஸ்கூல் படிச்சிட்டிருந்தேன். அப்ப வாணிமஹால்ல நடந்த ஒரு விழாவுக்கு டி.ராஜேந்தர் சார் வந்திருந்தார். அந்தப் பக்கமா நான் ரோட்டுல நடந்து போயிட்டிருந்தப்ப என்னை அவர் பார்த்தார். ‘நான் டி.ராஜேந்தர். உன் பெயரென்னம்மா? என்ன படிக்கறே?’ன்னு கேட்டார்.

அந்தச் சமயத்துல ‘உயிருள்ளவரை உஷா’ வெளியாகி அவர் உச்சத்துல இருந்ததால, அவரை எளிதா அடையாளம் தெரிஞ்சுக்கிட்டேன். ‘நான் படம் பண்ணுறேன். நீங்க நடிப்பீங்களா?’ன்னு கேட்டார். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. எதுவும் பேச முடியல. அமைதியா நின்னேன். ‘உன் வீடு எங்கே இருக்குது’ன்னு கேட்டார். பக்கத்துலதான் என் வீடு இருந்ததால, என் வீட்டைக் காண்பிச்சேன்.

மகள்களுடன் ஜீவிதா ராஜசேகர்
மகள்களுடன் ஜீவிதா ராஜசேகர்

அதன்பிறகு ஒரு வருஷம் கழிச்சு, அதாவது நான் 12-வது படிக்கறப்ப ஞாபகம் வச்சிருந்து வீட்டுக்கு வந்தார். ‘உறவைக் காத்த கிளி’யில் நடிச்சேன். படிப்பையும் பாதியில விட்டுட்டேன். அந்தப் படத்துக்குப் பிறகு ஒரே நேரத்துல நாலஞ்சு படங்கள் ஒப்பந்தமானேன். நடிகர் திலகம் சிவாஜி சாரோட நடிக்கற வாய்ப்பையும் கடவுள் கொடுத்திருந்தார். ‘ராஜமரியாதை’ படத்துல அவரோட சேர்ந்து நடிச்சது சந்தோஷமான தருணங்கள். அதன்பிறகு தெலுங்கிலும் நடிக்கறதுக்கான வாய்ப்பு அமைஞ்சது. தெலுங்கில் முதல் படமே ராஜசேகர் சார் ஹீரோ. சில்வர் ஜூப்ளி ஹிட் ஆனது. அதன்பிறகு அவரோடவே பத்து படங்கள்ல நடிச்சேன். அதுல ‘இதுதாண்டா போலீஸ்’ படமும் ஒண்ணு. தமிழ்லேயும் அது நல்லா ஓடுச்சு. நான் நடிக்க வந்த சில வருஷத்துக்குள்ளேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.’’

குடும்பத்துடன் ஜீவிதா ராஜசேகர்
குடும்பத்துடன் ஜீவிதா ராஜசேகர்

``கணவர் டாக்டர் ராஜசேகர், மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா எப்படி இருக்காங்க? ரெண்டு பேருமே ஹீரோயின்கள் ஆகிட்டாங்க...’’

‘‘சந்தோஷம்தான். என் மகள்கள் சின்ன வயசில இருந்தே, சினிமா சூழல்லதான் வளர்ந்தாங்க. அவங்க அப்பாவோட படப்பிடிப்புக்கு வந்துடுவாங்க. வெளியூர் படப்பிடிப்புக்கு எங்க போனாலும் என் பொண்ணுங்களை அழைச்சிட்டுப் போயிடுவார் அவர். பொண்ணுங்க ஸ்கூலுக்குப் போகாமல், படப்பிடிப்புக்குப் போனதால, பள்ளிக்கூடத்துல இருந்து என்னைக் கூப்பிட்டுத் திட்டுவாங்க. அவங்களுக்காக ஒவ்வொரு வாட்டியும் நான்தான் திட்டு வாங்குவேன். இதைத் தாங்கமுடியாமல், அப்புறம் நானே ஸ்கூல் ஆரம்பிச்சிட்டேன். எங்க ஸ்கூல்லேயே அவங்க ரெண்டு பேரும் ப்ளஸ் டூ வரை படிச்சு வளர்ந்தாங்க.

ஒருநாள், ‘நாங்க சினிமாவில நடிக்கணும்’னு அப்பாகிட்ட சொன்னாங்க. நாங்க தடை போடல. ‘நடிங்க. ஆனா, படிப்பை விட்டுட வேணாம்’னு சொன்னோம். எங்க பேச்சைக் கேட்டு, படிப்பிலும் கவனம் செலுத்துறாங்க; சினிமாவிலும் நடிக்கிறாங்க. ஷிவானி இப்ப எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படிக்கறா. சின்னவ ஷிவாத்மிகா மெடிக்கல் சயின்ஸ் படிக்கறா. சினிமாவுல நல்ல வாய்ப்புகள் வரும்போது, நடிப்பிலும் கவனம் செலுத்துறாங்க. வாழ்க்கை நம்மை எந்தப் பாதையில் அழைச்சிட்டுப் போகுதோ, அந்தப் பாதையில் அவங்க பயணமும் சிறப்பானதா அமையும்னு நம்புறேன்.''