
முதலில் பாடலாசிரியராக பாலிவுட்டில் இயக்குநர் மகேஷ் பட்டின் அன்பினால் களமிறங்கினேன். ‘ஜிஸும்’, ‘ஓ லம் ஹே’ படங்களில் எழுதிய பாடல்கள் ஹிட்டானதால் எனக்கு சல்மான் கான் வாழ்த்து மெசேஜ் அனுப்பியிருந்தார்
பேட்டி என்ற பெயரில் பிரபலங்களின் போட்டியை (குடலை) உருவும் வடக்கத்திய மீடியா ஆட்களிடமிருந்து ஆயிரம் மடங்கு வித்தியாசமாக இருக்கிறார் நீலேஷ் மிஸ்ரா. பத்திரிகையாளர், சினிமாப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், ‘முடிவற்ற கதைகள்’, ‘Yaadon ka idiot box’ என்ற பெயரில் ரேடியோவில் கதை சொல்லும் கதைசொல்லி... இப்படிப் பல முகங்களைக் கொண்டவர். தற்போது யூடியூபில் இவர் பிரபலங்களை நேர்காணல் செய்த ‘ஸ்லோ இன்டெர்வியூ’ எனப்படும் பாலிவுட் பிரபலங்களின் பேட்டிகள் ‘ஸ்லோ பாய்சன்’ ரகம். ஆனால், நேர்மறையாய்...வித்தியாசமாய் மனதைக் கரைக்கிறது, கவனம் ஈர்க்கிறது. ‘ஸ்லோ மூவ்மென்ட்’ என்ற பெயரில் சமூகப் பணியிலும் பிஸியாக இருக்கும் நீலேஷ் மிஸ்ரா லக்னோ அருகே ஒரு கிராமத்தில் வசிக்கிறார்.
“வணக்கம் சார்... உங்களுடைய ஸ்லோ இன்டெர்வியூக்களின் ரசிகன் நான். உங்களின் பாட் காஸ்ட் ஒலிபரப்பான ‘கஹானி எக்ஸ்பிரஸ்’ பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். எப்படிப் பேசியே இத்தனை பேரை வசியப்படுத்திவிடுகிறீர்கள்?’’
“பிஸியான நகரவாழ்க்கையில் நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாளில் ஜென் கவிதை ஒன்றை வாசித்தேன். அது இப்படி அர்த்தம் தரும்... நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் கடந்த காலத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் கவலையில் இருந்தால் எதிர்காலத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் மன அமைதியிலிருந்தால் நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள். நாம் எப்போதும் கவலையிலோ மன அழுத்தத்திலோதான் வாழ்கிறோம். தினமும் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சிக்கும்கூட நேரமில்லாமல், சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். எவ்வளவோ ஓடியோடி சம்பாதிக்கலாம். ஆனால், வாழ்கிறோமா என்றால், இல்லை என்பேன். அதனால்தான் நிகழ்காலத்தில் ஏன் நாம் வாழக்கூடாது என யோசித்தபோது உருவானதுதான் கதை சொல்லல். கதை சொல்லும்போதும் கேட்கும்போதும், ஓர் உலகத்தை, அந்தத் தருணத்தை உருவாக்க முடிகிறது. அந்த உலகத்துக்குள் பயணம் செய்ய முடிகிறது. எனவே கதைகளாக, சம்பவங்களாக என் மனதுக்கு இதமளிக்கக்கூடிய விஷயங்களைத் தேடித்தேடிப் பேசுகிறேன். ஒருவகையில் அது என் ஆன்மாவின் தேடல். ஆனால், உலகம் என்னை எல்லோருக்குமான மென்மையான மனிதனாக மாற்றி வைத்திருக்கிறது. என் கதைகள் எனக்கு நானே சொல்லிக்கொள்பவை. ஆனால், மயிலிறகால் வருடியதைப்போல இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வதை நானே நம்ப முடியாமல்தான் இருக்கிறேன். ஜென் கவிதைகளை ஆழமாக வாசியுங்கள். உங்களுக்குள்ளும் இப்படி ஒரு பேரனுபவம் கிடைக்கும்!’’

``Goan connection என்ற பெயரில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக விழிப்புணர்வுக்காக லோக்கல் நியூஸ் பேப்பர் ஒன்றையும் லக்னோவில் நடத்திவருகிறீர்கள்...எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?’’
‘`என் பேச்சைக் கேட்டு இணைந்த நண்பர்களில் பலர் இப்போது அந்தப் பத்திரிகைக்காக வேலை பார்க்கிறார்கள். இந்தியாவின் முதல் டிஜிட்டல், பிரின்ட், வீடியோ மற்றும் நேரடி களப்பணிக்கான ஒரு ஹப்தான் `கோன் கனெக்ஷன்.’ இதை சமூகக் கடமையாகவே செய்துகொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகளை ஒருங்கிணைக்கவும், இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும் நாமெல்லோரும் ஓரணியாகத் திரள்வதும் அவசியம் என்று நினைக்கிறேன். ஜனரஞ்சகமாக அதே சமயத்தில் மக்களிடம் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும் கோன் கனெக்ஷனில் நீங்களும்கூட எழுதலாம்! அதுதான் அதன் சிறப்பே!’’
``சினிமாவிலும் பணிபுரிகிறீர்கள். சமூகப் பணிக்கு நேரம் கிடைக்கிறதா..?’’
‘`அது சல்மான் கானின் அன்பினால் சாத்தியமானது. முதலில் பாடலாசிரியராக பாலிவுட்டில் இயக்குநர் மகேஷ் பட்டின் அன்பினால் களமிறங்கினேன். ‘ஜிஸும்’, ‘ஓ லம் ஹே’ படங்களில் எழுதிய பாடல்கள் ஹிட்டானதால் எனக்கு சல்மான் கான் வாழ்த்து மெசேஜ் அனுப்பியிருந்தார். தொடர்ந்து பயன்படுத்துவதாக வாக்குக் கொடுத்திருந்தார். ரெட் சிட்டியில் ஆர்.ஜே-வாக நான் இருந்தபோது, கோன் கனெக்ஷன் பத்திரிகைக்கான யோசனை எனக்குள் வந்தது. பணத் தேவைக்காக சினிமாவிலும் இயங்கலாம் என முடிவு செய்தேன். சல்மான் கானால் இயக்குநர் கபீர் கானோடு 2012-ல் `ஏக் தா டைகர்’ படத்தின் திரைக்கதையை எழுதினேன். அதன்பிறகு ‘டைகர் ஜிந்தாபாத்’, ‘டைகர்-3’ வரை திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றினேன். இப்போது பத்திரிகை களப்பணி, யூடியூப் வீடியோக்களுக்கு நேரம் அதிகம் செலவிடுவதால் மும்பையிலிருந்து லக்னோ அருகே ஒரு கிராமத்தில் வந்து தங்கி விட்டேன். உலகத்துக்கு அட்வைஸ் பண்ணும் நானே பிஸியாக வேலைபார்த்துக் கொண்டிருந்தால், மாறுபாடான கருத்தினைக் கொண்டிருந்தால், தவறாகப் போய்விடும் அல்லவா..?’’
‘`நீங்கள் உருவாக்கிய ‘slow movement’ இப்போது பரவலாகப் பல மாநில இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. எல்லாவற்றையும் ஸ்லோவாகப் பண்ணச் சொல்கிறீர்கள். இன்றைய பரபர காலகட்டத்தில் ஸ்லோவாக வாழச் சொல்வது நடைமுறையில் சாத்தியமான ஒன்றா? பலனளிக்குமா?’’
‘`ஸ்லோவாக வாழ்ந்துதான் பாருங்களேன். ஒரு நாளில் ஒவ்வொரு மணித்துளியும் அனுபவித்து வாழுங்கள். ஒரு தேநீரைக்கூட அவசர அவசரமாக ஆற்றிக் குடிக்கிறோம். தேநீரைக் கண்டுபிடித்ததே சுவைக்காக மட்டுமல்ல, ஒரு விஷயத்தை உலகத்தின் பார்வையிலிருந்து விலகி இன்னொரு பருகுதல் என்ற அனுபவத்தை நுகர்ந்து உணரத்தான். வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் அனுபவித்து வாழ்வதில் நமக்கென்ன சிக்கல் வந்துவிடப் போகிறது. சரி... என்னைவிட நீங்கள் நிறைய வேகமாக வேலை பார்க்கிறீர்கள். ஆனால், அதனால் என்ன பலன் உங்களுக்குக் கிட்டிவிட்டது? ஃபாஸ்ட் ஃபுட்டைப் போல நம் வாழ்க்கையை ஃபாஸ்ட் லைஃப்பாக மாற்றி வைத்துவிட்டோம். இன்றைய செல்போன், கணினி நம் நேரத்தை மிச்சப்படுத்தியிருந்தாலும் நாம் அதிகம் நேரத்தைச் செலவிடுவதும் அதில் தானே..? நான் பதற்றமில்லாமல் தியானம் செய்கிறேன், காலையில் எழுந்து வாக்கிங் போகிறேன், மரம் நடுகிறேன், விவசாயம் செய்கிறேன், எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதனால்தான் எனக்கு மெசேஜ் அனுப்புபவர்களுக்கு நான் ஓப்பனாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் பதில் அளிக்கவில்லை என்றால், படிக்கவில்லை என்று அர்த்தம். அதனால் இன்னொருமுறைகூட மெயில் அனுப்பி வையுங்கள்! படித்துவிட்டால் நிச்சயம் உங்களைத் தொடர்புகொள்வேன். ஏனென்றால், எனக்கு உங்களைவிட நிறைய நேரம் இருக்கிறது!’’

‘`நீங்கள் எடுத்த ஸ்லோ இன்டெர்வியூக்களில் பிரபலங்களிடம் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம் ஏதேனும் இருக்கிறதா..?’’
‘`ஆரம்பத்தில் பரபரபரப்பாக ஓடி வருவார்கள். என் கிராமத்தையும் வீட்டையும் பார்த்துவிட்டு லேசாக திடுக்கிடுவார்கள். அதன்பிறகு என் கேள்விகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். நான் யாரையும் முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளைக் கேட்க மாட்டேன். தோளில் கைபோட்டு, பேசு என்று சொல்வதைப்போல என் கேள்விகள் மிருதுவாக இருக்கும். `வாழ்க்கையின் இறுதியில் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் யாரிடம் கேட்பீர்கள், கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது உங்களை எப்படி உணர்கிறீர்கள்’ போன்ற எளிமையான கேள்விகளுக்கே அவர்கள் என்னிடம் அவர்களை ஒப்புக்கொடுப்பார்கள். ஆயுஷ்மான் குரானா, டாப்சி பன்னு, மனோஜ் பாஜ்பாயி, பங்கஜ் த்ரிபாதி, சஞ்சய் மிஸ்ரா, நவாஜுதீன் சித்திக், அனுராக் காஷ்யப் போன்றோர் ஆரம்பத்தில் கறாராக இவ்வளவு நேரம்தான் இருக்க முடியும் எனச் சொல்லி பேட்டிக்கு வந்திருந்தார்கள். நான் அவர்களை வயற்காட்டில், சிறு ஓடையின் ஓரத்தில், புளியமரத்தின் அடியில், மூங்கில் தோட்டத்தில், கரும்புத் தோட்டத்தில், நூலகத்தில் என வித்தியாசமான இடங்களில் உட்கார வைத்தேன். நார்க் கட்டிலில் அமர்ந்தபடி நடிகர் சஞ்சய் மிஸ்ரா, தான் பிறந்த கிராமத்துக்கே போனதாகப் பேச ஆரம்பித்தார். ரொம்பவே சிம்பிளான ஒரு உத்திதான். அவர்களின் வாழ்க்கைக் கதையை நானறிந்த வரையில் அவர்கள் உணர்ந்த இடங்களை அங்கு உணரச் செய்ய அதேபோன்ற நில அமைப்பில் பேட்டி எடுத்தேன். இந்த நிலவியலை அவர்கள் பேட்டிக்கு முன் உணர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. அனுராக் காஷ்யப் என் தோட்டத்தில் காய்ந்த சாணக் குப்பை இருக்கும் இடத்துக்கு அருகில் உட்கார்ந்து பேட்டி கொடுத்தார். வாரணாசியில் அவர் வாழ்ந்த வீட்டின் கொல்லைப்புறம் மாடுகளோடு அவரின் பால்யத்தில் முகர்ந்த அதே வாசத்தை அன்று உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் குரானாவுக்கு நன்கு கிதார் வாசிக்கத் தெரியும். நன்கு பாடுவார் என்பதால் அதேபோல கேஷுவலாக ஒரு கல்லூரி வளாகத்தினுள் பேட்டி எடுத்தேன். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பேட்டி முடித்த பிறகு அன்று இரவு என்னுடன் பேசியபடி தங்கிவிட்டு மறுநாள் கிளம்பிச் சென்றார். இப்படி ஒவ்வொரு வி.ஐ.பிக்கும் ஒவ்வொரு அனுபவம்!’’
‘`உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது உங்களை எப்படி உணர்கிறீர்கள்? இன்ஸ்பிரேஷனாக சிறுவயதில் யாரும் இருந்தார்களா?’’
‘`வாழ்க்கையை நான் எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை. அதேபோல டார்கெட்டும் வைத்துக்கொண்டு ஓடுவது இல்லை... இதை என் வாழ்வியல் முறையாகக் கடைப்பிடிக்கிறேன். 2020-ல் மறைந்த சுஷாந்த் ராஜ்புத் என் நெருங்கிய நண்பர்தான். அவரைப்போல பாசிட்டிவான மனிதரை நான் பார்த்ததே இல்லை. அவரைப் போல பதற்றத்தோடு ஓடிக்கொண்டிருந்த மனிதரையும் நான் பார்த்ததில்லை. நிதானமாக இந்த வாழ்க்கையை ஒரு நத்தையைப்போலக் கடப்பது ஒன்றுதான் என் லட்சியம். நீங்களும் அப்படி வாழ்வது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது! பால்யத்தில் என் வீட்டில் பாட்டி சொன்ன வித்தியாசமான கதைகள்தான் எனக்குக் கதை சொல்ல இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. பாட்டிக்கு நன்றி!’’