அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

காதல் கொண்டேன்!

காதல் கொண்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
காதல் கொண்டேன்!

இவரா ஹீரோ?-னு கேட்டவங்கள, இவரு தான்யா 'ஹீரோ'னு சொல்லவச்ச படம்..!

லகல பாதி..கிளுகிளு - கம் - கிடுகிடு மீதி என்று இரண்டாக வகிரப்பட்ட கதை.விட்டேத்தித் திரிதல்கள். அத்துமீறிய ரவுசுகள் காதல் என்ற பெயரில் கண்றாவி சாகசங்கள் என்று போகிற ஒரு கல்லூரிப் பட்டாளத்தின் இடையே கதாநாயகன் தனுஷ், பரமசாதுவாக, சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் அநாதை ஜீனியஸ்!கிளாஸின் மற்ற மாணவர்கள் அத்தனை பேரும் தன்னை அருவருப்போடு ஒதுக்க. ஆறுதலாக நட்பு பாராட்டும் சக மாணவி சோனியா அகர்வால் (மும்பை புதுசு) மீது அவ்வப்போது நன்றிப்பார்வை வீசுகிற தனுஷ், அந்தப் பரிவை காதல் என்று தப்பாகப் புரிந்துகொள்வது எதிர்பார்க்கக்கூடிய திருப்பம்தான்.ஆனால், இன்னொரு மாணவர் சுதிப்புக்கும் சோனியாவுக்கும் காதல் என்று டிராக் மாறி.. பூங்கொத்தோடு போன தனுஷ், போஸ்ட் மேனாக மாறுவதும்.. 'அவசரப்பட்டு என்ன பரிதாப முடிவை எடுத்துத் தொலைக்கப் போகிறாரோ' என்று நினைக்கிற நேரத்தில், தன்னையும் அறியாமல் தனக்குள் ஒளிந்திருக்கும் சைக்கோ சுயரூபத்தைக் காட்டுவதும் தொண்டைக்குழியை ஏற்றி இறக்குகிற திருப்பம்!'உன் காதலனோடு சேர்த்து வைக்கிறேன் வா' என்று சோனியாவைக் காட்டுக்குள் கூட்டிப்போகிற வரை எல்லாம் ஓகேதான். அப்புறம்தான், 'அபிராமி..அபிராமி' என்று கிறு கிறுக்கிற 'குணா'வும் 'அம்மா.. அம்மா' என்று அரற்றுகிற ஆளவந்தானும் கலந்து செய்த கலவையாகிப் போகிறது கதை.

காதல் கொண்டேன்!
காதல் கொண்டேன்!

வியர்வையும் அழுக்கும் தோய்ந்த முகம், கசங்கல் ஆடை, தாழ்வுமனப்பான்மை போட்டு அழுத்துவதால் ஒரு கோணல் நடை என்று படுகச்சிதமாக தனது நடிப்பைத் துவக்கி.. இந்த நரம்பான உடம்புக்குள் இத்தனை வன்மமும் வெறியுமா என்று வாய் பிளக்க வைத்துவிடுகிறார் தனுஷ். குழந்தைத் தொழிலாளர்களுக்கு மொஸைக் கம்பெனியில் நடக்கிற பல்நோக்குச் சித்திரவதைகளைப் படம்பிடித்துக் காட்டி அதிர்ச்சி தர ஆசைப்பட்டிருக்கிறார்கள்.தடதடவென பின்னியெடுக்கிற பின்னணி இசைக்காக யுவன்சங்கர் ராஜாவுக்கும் அசாதாரண கோணங்களில் அணுகியிருக்கிற ஒளிப்பதிவுக்காக அர்விந்த் கிருஷ்ணாவுக்கும் சரிபாதி சபாஷ்கள்.மழையிலும் காட்டாற்றிலும் நாயகியைத் தொப்பலாக நனையவிட்டு, வில்லங்கமான காமிரா கோணங்கள் மூலம் உரித்துக்காட்டி.. குடும்பஸ்தர்களை நெளிய விட்டிருக்கிறார்கள்.

காதல் கொண்டேன்!
காதல் கொண்டேன்!

குளிக்கையில், துணி மாற்றுகையில், அசந்து தூங்குகையில் சோனியாவைக் காமவெறியோடு தனுஷ் அணுகுகிற காட்சிகளும் அந்த ரகமே!ஸீனுக்கு ஸீன் 'க்ளாப்ஸ்' வாங்குகிற முதல் பாதியில் ரொம்பவே வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.தரமான போக்கிலே நகர்ந்து முடியக்கூடிய ஒரு கதைக்குள் 'கிளுகிளு' அத்துமீறல்களைப் புகுத்தியதன் மூலம் வெற்றிக்கோட்டைத் தொடும் தூரத்துக்கு வந்தாலும் படைப்பு காயப்பட்டுவிட்டது.

 - விகடன் விமரிசனக் குழு 

(20.07.2003 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)