
ஒரு பக்கம் ஊருக்கே சோறுபோடும் விவசாயி, இன்னொரு பக்கம் மாமனிதப் பண்பாளர் பிரதமர்.
இருவரையும் காத்து, சிலபேரை அழித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றும் மெய்க்‘காப்பான்.’
பிரதமரின் மெய்க்காப்பாளனும் பகுதிநேர இயற்கை விவசாயியுமாக சூர்யா. செம ஸ்மார்ட்டாக, ஸ்டைலாக இருக்கிறார். ஆனால், வழக்கம்போல விறைப்பும் முறைப்புமாகவே வலம்வருகிறார். மோகன்லாலே ஒரு காட்சியில் ‘`ஏன் ரோபோ மாதிரி இருக்கீங்க?” என்கிறார். கொஞ்சம் குறைக்கலாம் சூர்யா!
பிரதமராக மோகன்லால். தேவையான இடங்களில் தேவையான உணர்ச்சிகளை வெளிப் படுத்திவிட்டு நகர்கிறார். பொறுப்பான பிரதமரின் பொறுப்பற்ற குறும்பு மகனாக ஆர்யா. முதல்பாதியில் இரண்டு, மூன்று காட்சிகளில் மட்டும் தலைகாட்டுபவர்க்குப் பின்பாதியில் தலையாய வேலை. ஹீரோயின் இருக்கவேண்டும் என்பதற்காக, சாயிஷா! கார்ப்பரேட் வில்லனாக பொம்மன் இரானி. முதலாளித்துவத்தின் கொடூரமுகம் காட்டியிருக்கிறார்.

‘ஒற்றை ஆளாய் இந்தியாவின் எந்த மூலையில், என்ன பிரச்னை நடந்தாலும் நான் போய் எப்படி நிற்பேன்?’ என, கதைகேட்கும்போது சூர்யா கேட்டிருக்க வேண்டிய கேள்வி படம்பார்ப்பவர் களின் மனசுக்குள் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. படம் முழுக்க பலூன்களைப்போல் சர்வ சாதாரணமாய் வெடிகுண்டுகளை வெடித்துத் தீர்த்திருக்கிறார்கள். பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் அரதப்பழசு. ‘நூறுபேரைக் காப்பாத்த ஒருத்தரைக் கொல்லலாம் என்பது மனுதர்மம். அதுதான் மனித தர்மம்’ என்ற வசனம் அபத்தம் மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.மனிதர்களின் சாதிப்பிரிவினைகளையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தும் மனுதர்மம் குறித்துக் கடுமையாக விமர்சித்த தமிழ்நாட்டிலேயே மனுதர்மத்தைக் கொண்டாடுவது நியாயமில்லை.
எம்.எஸ்.பிரபுவின் கேமரா இந்தியா முழுக்க நம்மையும் அழைத்துச்செல்கிறது. படத்தைப் பரபரக்க வைக்க, படத்தொகுப்பாளர் ஆண்டனி எவ்வளவோ முயன்றிருக்கிறார். சம்பந்தமே இல்லாமல் பின்னணி இசையில் ரஹ்மானின் ‘ரோஜா’ பாடல் தொடங்கிப் பல இசைத்துண்டுகள் வந்துபோகின்றன. இசையமைத்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஆக்ஷன் காட்சிகளில் அனலைக் கூட்டியிருக்கிறார்கள் பீட்டர் ஹெய்ன் மற்றும் திலீப் சுப்பராயன் டீம்!
பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர் என்னும் போது ‘மறுபடியுமா?’ என்று கண்ணைக்கட்டுகிறது. பிறகு கதைப்போக்கு வேறு திசையில் நகரும்போது ‘பரவாயில்லையே’ என்று கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால், இரண்டு வருடத்துச் செய்தித்தாள்களை மொத்தமாய்ப் படித்ததைப் போல் எல்லாவற்றையும் ஒரே படத்தில் கொட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் தொடங்கும்போதே எப்படி முடியப் போகிறது என்றும் தெரிந்துவிடுகிறது.
இவ்வளவு பிரமாண்டம், இத்தனை நடிகர்கள் வரைக்கும் யோசித்தவர்கள் சுவாரஸ்யமான திரைக்கதைக்கு ஏன் யோசிக்கவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி.