சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

காரி - சினிமா விமர்சனம்

சசிகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகுமார்

வழக்கமான கிராமத்துக்கதையில் வழக்கமான சசிகுமார். ஊருக்கு நல்லது சொல்லி அட்வைஸ் செய்யும் கேரக்டருக்கு மாறாக சராசரி இளைஞர் கேரக்டர்.

ஒரு கிராமத்துக்கோயிலின் நிர்வாகம் யாருக்கு என்பதில் இரண்டு ஊர்களும் போட்டி போடுகின்றன. ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் ஊருக்குத்தான் கோயில் நிர்வாகம் என்ற நிபந்தனையின்கீழ், வென்றது யார் என்பதே ‘காரி.'

ராமநாதபுரத்தில் இருக்கும் காரியூர், சிவனேந்தல் ஊர்களுக்கு பொதுவாக ஒரு கருப்பணசாமி கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் நிர்வாக அதிகாரம் எந்த ஊருக்கு என்பதைத் தீர்மானிக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க சென்னையிலிருந்து அழைத்து வரப்படுகிறார் குதிரைப்பந்தய ஜாக்கி சசிகுமார். இந்தக் கிராமத்துப்போட்டிக் கதையில் ஜல்லிக்கட்டு, தமிழர் பாரம்பரியம், கிராமத்துப் பெருமைகள், கார்ப்பரேட் வில்லன் ஆகியவற்றைத் தூவிவிட்டால் ‘காரி' தயார்.

காரி - சினிமா விமர்சனம்

வழக்கமான கிராமத்துக்கதையில் வழக்கமான சசிகுமார். ஊருக்கு நல்லது சொல்லி அட்வைஸ் செய்யும் கேரக்டருக்கு மாறாக சராசரி இளைஞர் கேரக்டர். ஆனாலும் தன் நடிப்பில் சின்னப்புள்ளியைக்கூட மாற்றாமல் அப்படியே நடித்திருக்கிறார் சசிகுமார். சில காட்சிகளில் தன்னையும் மீறி அட்வைஸ் செய்யவும் ஆரம்பிக்கிறார். குதிரைப் பந்தயத்தை ரசிக்கும், உயிர்களை நேசிக்கும் வள்ளலார் பக்தர், ஊர் நன்மைக்காகத் தன்னந்தனியாகப் போராடும் சமூக சேவராக ‘ஆடுகளம்' நரேன். தன்னுடைய கேரக்டர் என்னவென்று அவருக்கும் புரிந்து நமக்கும் புரிவதற்குள் பாவம் இறந்துவிடுகிறார். தன் தந்தையின் பொறுப்பின்மையைக் கண்டு குமுறுவது, தன் உயிரான காளையை விற்றுவிட்ட அப்பாவிடம் அழுது அடம்பிடிப்பது, இறுதிக்காட்சியில் தன் அன்பான காதலனா, அபிமான காளையா என்று பரிதவிப்பது என அறிமுக நாயகி பார்வதி அருண் சிறப்பாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லன் ஜே.டி.சக்கரவர்த்தி வரும் காட்சிகள் எல்லாமே படத்துக்கு அந்நியமாய்த் துருத்தி நிற்கின்றன. பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, சம்யுக்தா என்று பலரது பாத்திரங்கள் நிறைவாக இல்லை.

காரி - சினிமா விமர்சனம்

வாடிவாசலையும் கிராமத்து இராப்பொழுதுகளையும் அழகாகப் படம்பிடித்திருக்கிறது கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு. அதேபோல் க்ளைமாக்ஸ் காட்சியைக் கச்சிதமாகத் தொகுத்துள்ளார் எடிட்டர் சிவாநந்தீஸ்வரன். இமானின் இசை ஓகே ரகம்.

ஒரு குதிரை ஜாக்கி ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டால் என்ன நடக்கும் என்ற ஒன்லைனை அறிமுக இயக்குநர் ஹேம்நாத் யோசித்தது வரை சரி. ஆனால் அதை சுவாரஸ்யமான திரைக்கதை ஆக்காமல் நாம் ஏற்கெனவே பலமுறை பார்த்த காட்சிகளைத் தோரணம் கட்டியிருக்கிறார். சென்னை என்றாலே குப்பைமேடு, கிராமம் என்றால் அன்பு வழியும் இடம் போன்ற க்ளிஷேவான காட்சிகள், மாட்டிறைச்சி, உலக வணிகம் போன்றவை குறித்த எந்தப் புரிதலுமில்லாத ஜே.டி.சக்கரவர்த்தி தொடர்பான காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன.

வழக்கமான காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, வாடிவாசல் காட்சியில் இருக்கும் விறுவிறுப்பைப் படம் முழுவதும் கொண்டுவந்திருந்தால் சீறிப்பாய்ந்திருக்கும் இந்த ‘காரி.'