சினிமா
Published:Updated:

கடைசி விவசாயி - சினிமா விமர்சனம்

கடைசி விவசாயி
பிரீமியம் ஸ்டோரி
News
கடைசி விவசாயி

வேகமும் பரபரப்புமாய் மாறிவிட்ட தமிழ்சினிமா கதைக்களத்தில் மணிகண்டனின் திரைமொழி இதமாய் ஆறுதலளிக்கிறது.

‘எதார்த்தம் தாண்டிய புனைவே சினிமா’ என்பார்கள் பொதுவாய். அதே சினிமா அரிதினும் அரிதாக இயல்பு வாழ்க்கையை, ரத்தமும் சதையுமான நிஜ மனிதர்களை நம் கண் முன் உலவ விடும். அப்படியானதொரு படைப்பே ‘கடைசி விவசாயி.’

அறிவியலின் முன்னேற்றம் எதுவும் பாதித்திடாத, இயற்கையோடு இயைந்த வாழ்வைத் தன்போக்கில் வாழ்ந்துவருகிறார் மாயாண்டி. நீர் பாய்ச்ச கழனி, மேய்ச்சலுக்குக் காடு, பொழுது சாய்ந்தால் வீடு என எளிதாய் நாள்களைக் கழிக்கும் குறுநில விவசாயி. அப்படிப்பட்ட மனிதருக்கு ஒரு சிக்கல் நேர்கிறது. ஊரின் மூத்தகுடியான அவருக்கு நேர்ந்த துயரத்தைத் தங்களுக்கு நேர்ந்ததாகவே ஊரார் கருத, அதன்பின் என்ன ஆனது என்பதுதான் கதை.

கதை என வழக்கமான வரையறைக்குள் நாம் கடைசி விவசாயியை அடக்க முயன்றாலும் அது கரையைத் தாண்டிப்பாயும் கண்மாயைப் போல வழக்கங்களை உடைத்துப் புதிய இலக்கணம் படைக்கிறது. அதன் ஒரு சோற்றுப் பதம் மாயாண்டியாய் வரும் நல்லாண்டி.

கடைசி விவசாயி - சினிமா விமர்சனம்

சினிமா வாடையே படாத, எழுபத்து சொச்ச வயதில் ஒருவரை பிரதான கதாபாத்திரமாகத் திரையில் பார்ப்பது இதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை. ‘மயிலு செத்துப்போச்சுய்யா’ என முட்டி நிற்கும் கண்ணீரோடு, ‘போகச் சொல்லிட்டாங்களா? போலாமா?’ என நடையைக் கட்ட முனையும் வெள்ளந்தி மனதோடு, ‘அந்த மரத்துல இருந்து நெருப்பா விழுதுய்யா’ எனச் சிரிப்பு மூட்டும் குறுகுறுப்போடு ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாகத் தன் தடம் பதித்துப் போகிறார் நல்லாண்டி. அவரை இனி தமிழ்த்திரையில் பார்க்க முடியாது என்கிற நினைப்பே இன்னும் ஆழக் கீறுகிறது.

விஜய் சேதுபதி - குழைவும் நெகிழ்வுமான இந்தக் கலைஞனைப் பார்க்கத்தானே காத்திருந்தோம். தர்க்கத்திற்கும் மிகை எதார்த்தவாதத்திற்குமிடையிலான அவரது கதாபாத்திர வரைவே புத்துணர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இறுதியாய் கடவுளைக் கண்டுகொள்ளும் அந்தக் காட்சியில் வி.சே-வின் பாவனைகள் - சிலிர்ப்பு. ஒன்றிரண்டு காட்சிகள்கூடப் போதும், ஒரு தேர்ந்த கலைஞனுக்குத் தன் திறனைக் காட்ட என நிரூபித்துச் செல்கிறார் விஜய் சேதுபதி.

கடைசி விவசாயி - சினிமா விமர்சனம்

நக்கல், நையாண்டி, ஏக்கம், வெகுளித்தனம் என கிராமத்து மண்ணுக்கே உரிய அசலான குணங்களைத் திரைமுழுக்க விரவிச் செல்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். முனீஸ்வரன், காளிமுத்து, சாப்ளின் சுந்தர், காளைப்பாண்டியன் என மேற்குத் தொடர்ச்சிமலை மடியில் பிறந்து வளர்ந்தவர்கள் அவர்களாகவே வருவது கடைசி விவசாயியின் பெரும்பலம்.

யோகிபாபுவும் கதைமாந்தர்களோடு பொருந்திப்போனாலும் அவரிடமிருந்து பெரிய பங்களிப்பு இல்லை. நடுத்தரப் பின்னணியிலிருந்து நீதி சொல்லும் இடத்திற்கு உயரும் பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறார் ரேச்சல் ரெபேக்கா.

சந்தோஷ் நாராயணன், ரிச்சர்ட் ஹார்வி என இசைக்கு இருவர். கதையின் கனத்திற்கு இசை நியாயம் செய்யவில்லையோ என்னும் ஆதங்கம் எழுகிறது. தோட்டா தரணியின் கலை இயக்கம் உசிலம்பட்டி கண்மாய்ப் பரப்புகளுக்கே நம்மைக் கைபிடித்துக் கூட்டிப்போகிறது.

பரந்த பாலையில் இன்னும் தன் பிடியை விடாது பிடித்திருக்கும் கொஞ்சம் பச்சையம், வாழ்வதற்கும் மாள்வதற்கும் இடையேயான போராட்டத்திற்குச் சாட்சியாய் உட்கார்ந்திருக்கும் குட்டிக் குட்டிக் குன்றுகள் என கேமரா வழியே கதைக்குள்ளே பல கதைகள் சொல்கிறார் மணிகண்டன்.

கடைசி விவசாயி - சினிமா விமர்சனம்

தமிழ்சினிமாவில் பெரிதாய் வெளிப்பட்டிராத ‘நாட்டார் வழிபாடு’ மேல் கொஞ்சம் வெளிச்சம் சிந்தியிருப்பது பாராட்டுக்குரிய முயற்சி. மணிகண்டனின் பலம் அவரின் நகைச்சுவைத்திறன். நகரமயமாக்கலின் ஆபத்தான பின்விளைவுகள், பாமரர்கள்மீதான சட்டத்தின் சோம்பலான அணுகுமுறை என தீவிரமான விஷயங்களை எடுத்துக்கொண்டாலும் அத்தனைக்கும் அடியில் மெலிதாய் இழையோடுகிறது அவரின் நையாண்டி. யானை கட்டிப் போரடித்த விவசாயி வயலைவிட யானை அதிக வருமானம் தரும் என அதையே வாங்குவது என நடைமுறை அவலத்தைத் தன்பாணியில் சுருக்கெனப் பேசி ரசிக்க வைக்கிறார்.

வேகமும் பரபரப்புமாய் மாறிவிட்ட தமிழ்சினிமா கதைக்களத்தில் மணிகண்டனின் திரைமொழி இதமாய் ஆறுதலளிக்கிறது. ஓட்டங்கள் இல்லாத கிராமத்து வாழ்வைத் திரைக்கதை பாணியிலும் அவர் புகுத்தி வெற்றி பெற, நமக்கும் நம் வேரைத் தேடிப் பயணம் மேற்கொண்ட நிறைவு எழுகிறது.

சோகமான முடிவே அழுத்தமான படைப்பிற்கு ஆதாரம் என்பதையும் மாற்றி ஒரு நல்லுணர்வுத் திரைப்படமும் நமக்குள் கேள்விகளை எழுப்பலாம் என நிறுவியிருக்கிறார் மணிகண்டன். நிஜத்தில் நல்லாண்டிக்கு இதைவிடச் சிறப்பான விடைகொடுத்தல் இருந்திருக்கமுடியாது.

கடைசி விவசாயி - சினிமா விமர்சனம்

சாதியத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் கிராமப்புறம் சட்டென ஒன்றுபடுவது, தேவைக்கும் அதிகமாய் வழக்கை இழுத்தடிப்பது போன்ற வலிந்து திணிக்கப்பட்ட சமரசங்கள் படத்தின் சின்னச் சின்னக் குறைகள்.

பூச்சுகள் இல்லாத தமிழ் மாந்தர்களைக் காட்டிய வகையில், மண் மேல் செலுத்தப்படும் ஆதிக்க அரசியலைப் பேசிய வகையில் பலகாலம் நிலைத்திருப்பார் இந்த ‘கடைசி விவசாயி.’