
கில்லாடி கிரிமினல் - ஃபாரீன் போலீஸ் எனக் காலங்காலமாகத் தமிழ்சினிமா நடத்தும் எலி - பூனை விளையாட்டின் விக்ரம் வெர்ஷனே `கடாரம் கொண்டான்.’
கேகே - மலேசியக் காவல்துறையில் பயிற்சிபெற்று, பின் டபுள் ஏஜென்ட்டான கிரிமினல். அவரை ஒரு கும்பல் கொலைவெறியோடு துரத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கேயும் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. இளம் ஜோடியான அபி ஹாசனும் அக்ஷரா ஹாசனும் சம்பந்தமே இல்லாமல் இந்த ஆபத்தான சுழலின் உள்ளே இழுக்கப்படுகிறார்கள். விக்ரமை ஏன் அந்தக் கும்பல் துரத்துகிறது, இந்த மரண விளையாட்டில் அபி-அக்ஷரா ஜோடிக்கு என்ன பங்கு என்பதை யூகிக்க முடிந்த திரைக்கதையில் சொல்லி முடிகிறது ‘கடாரம் கொண்டான்.’
அவ்வளவு ஸ்டைலிஷ்ஷாக விக்ரம்... ஃப்ரேமில் வந்து நின்றாலே ஜிவ்வெனப் பற்றிக்கொள்கிறது எனெர்ஜி. அப்படியே தூக்கிப்போய் ‘007’ படங்களில் நடிக்கவைத்துவிடலாம் என்கிற அளவிற்கு பக்கா பாண்ட் மெட்டீரியல்! சில ஆண்டுகளாக சரியான ரோல் அமையாமல் போராடிக்கொண்டி ருந்தவருக்கு ஆசுவாசம் அளிக்கும் ஆக்ஸிஜன் இந்த கேகே.

அக்ஷரா ஹாசன் சிரிப்பில் சரிகாவை, குரலில் ஸ்ருதியை, நடிப்பில் ஆரம்பக்கால கமலை நினைவுபடுத்து கிறார். நாசரின் வாரிசு அபி ஹாசன் நடிப்பில் தேர்ச்சி அடைகிறார். வதவத வென வரும் போலீஸ் அதிகாரிகளில் லேனாவும், செர்ரி மர்டியாவும் மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள்.
ஒரு ஆக்ஷன் த்ரில்லரின் பரபரப்பைத் தன் இசைவழியே நமக்கும் தொற்றச் செய்கிறார் ஜிப்ரான். னிவாஸ் ஆர்.குத்தாவின் ஒளிப்பதிவு ஸ்டைலில் விக்ரமோடு நீயா நானா எனப் போட்டி போடுகிறது. சண்டைக் காட்சிகளில் தெறிக்கும் கனல்களில் தெரிகிறது அவரின் உழைப்பு.
டெக்னிக்கலாக கடாரம் கொண்டான், ராஜேந்திர சோழனைப் போல நிமிர்ந்து நிற்கிறான். ஆனால் கணிக்க முடிந்த திரைக்கதையும் லாஜிக் ஓட்டைகளும் கடாரங்கொண்டானின் கம்பீரத்தைக் குறைக்கிறது. பாடல்கள், தேவையில்லாத பன்ச்கள், வழவழ கொழகொழ வசனங்கள் ஆகியவற்றைத் தவிர்த்த இயக்குநர், காட்சிகளில் கொஞ்சம் வலுச் சேர்த்திருக்கலாம். என்னதான் பிரெஞ்சுப் படத் தழுவல் என்றாலும், தமிழுக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்க வேண்டாமா?

விக்ரமின் பின்னணி என்ன? பயங்கர அறிவாளியான விக்ரம் இப்படி எளிதாக ஒரு சதி வலைக்குள் விழுவாரா? நகரமே தேடும் ஒரு குற்றவாளி எப்படி போலீஸ் தலைமையகத்திற்குள் ஸ்டைலாக நடைபோட முடியும் போன்ற பல கேள்விகளுக்குப் பதிலே இல்லை...
மேக்கிங்கில் கவனம் செலுத்திய அளவிற்கு ரைட்டிங்கில் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா கவனம் செலுத்தி யிருந்தால் கேகே மிரட்டியிருப்பார்!