ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம், 'கடாரம் கொண்டான்'. நாசருடைய மகனான அபி, அக்ஷரா ஹாசன் போன்றவர்களும் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கமல் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை லீலா பேலஸில் நடந்தது. அதில் படக்குழுவோடு படத்தின் நாயகன் விக்ரம் மற்றும் கமல்ஹாசன் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய விக்ரம், "நான் ஏற்காடுல படிச்சுக்கிட்டிருந்தப்போ ஹாஸ்டல்ல ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு இங்கிலீஷ் படம் போடுவாங்க. தமிழ் படம் எப்போவாவதுதான் போடுவாங்க. சில சமயம் கேப்டனாகிய எங்களுக்கு சிடி வாங்கிப் படம் போடுற வாய்ப்பு வரும். அப்படி ஒருநாள் மூணு கேப்டன்களும் படம் வாங்கப்போனோம். எங்க மூணு பேருக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியாது. ஒரு கேப்டன் 'வறுமையின் நிறம் சிவப்பு' இன்னொரு கேப்டன் 'டிக் டிக் டிக்', நான் 'வாழ்வே மாயம்'னு எல்லோரும் யதேச்சையா கமல் சார் படங்களைத்தான் வாங்கினோம். பார்த்ததுக்கு அப்புறம் இந்தப் படம் நல்லா இருக்கா, அந்தப் படம் நல்லாயிருக்கானு எங்களுக்குள்ளே சண்டை வரும். இந்த மாதிரியான ஒரு தாக்கத்தைத்தான் கமல் சார் எங்க ஜெனரேஷனுக்குக் கொடுத்திருக்கார். என்னை மாதிரி லட்சக்கணக்கான ரசிகர்களுக்குக் கமல் சார்தான் இன்ஸ்பிரேஷன். சிவாஜி சார், கமல் சார் மாதிரியான நடிகர்களாலதான் எங்களை மாதிரியான ஆள்களுக்கு நடிகராகணும்னு ஆசை வந்திருக்கு.
கமல் சாருடைய எல்லாப் படங்களும் எனக்குப் பிடிச்சாலும், அவர் நடிச்ச 'பதினாறு வயதினிலே' படம் என்னுடைய ஃபேவரைட். ஏதாவது ரீமேக் பண்ணலாம்னு கேட்டா, நான் அந்தப் படத்தைத்தான் சொல்வேன்.விக்ரம்
இந்தப் படம் நான் பண்றதுக்குக் முக்கியக் காரணமே, கமல் சார்தான். ஒருநாள் போன் பண்ணி, 'கமல் சார் தயாரிப்புல படம் பண்றீங்களா'னு கேட்டாங்க. உடனே ஓகே சொல்லி ஆரம்பிச்சதுதான், 'கடாரம் கொண்டான்'. கதையைக் கேட்கும்போதுதான் இது ரொம்பவே வித்தியாசமான படம்னு உணர்ந்தேன். சர்வதேச ஸ்டைல்ல, நம்ம ஊர் நேட்டிவிட்டி மிஸ் ஆகாம பண்ணோம். படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. அண்ணன் நாசருடைய பையன் அபிதான் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ. படத்துல எங்க ரெண்டுபேருக்குள்ளேயும் சின்னப் போட்டி இருந்துட்டே இருக்கும்.
அக்ஷரா இந்தப் படத்தின் பூ மாதிரி. ஆக்ஷன், டார்க், த்ரில்லர்னு ஒரு பக்கம் போயிட்டிருந்தா, அது எல்லாத்தையும் மென்மையாக்குறது அக்ஷரா ஹாசன்தான். ரொம்பவே நல்லா நடிச்சிருக்காங்க. டப்பிங் அப்போ படத்துல முக்கியமான காட்சிகளைப் பார்த்தேன். பின்னணி இசையில ஜிப்ரான் ரொம்பவே சூப்பரா வொர்க் பண்ணியிருக்கார். சண்டைக் காட்சிகளும் ஹாலிவுட் தரத்துல வந்திருக்கு. இந்தப் படத்துல வொர்க் பண்ண எல்லோரும் அவங்களுடைய பெஸ்ட்டைக் கொடுத்திருக்காங்க. இந்தப் படத்துல ராஜேஷும் ஹீரோதான். எல்லாக் காட்சிகளுமே பார்த்துப் பார்த்து பண்ணார். கமல் சார் இருக்கும்போது சொல்லக் கூடாது. படம் சீரியஸா போனாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்தோம்." என்று பேசி முடித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கமல், "இது ராஜ் கமல் நிறுவனத்துடைய 45-வது படம். இந்த நிறுவனத்தைத் துவங்கும்போது அக்ஷரா பிறக்கல. ஆனா, இந்த மாதிரியான விழா நடக்கணும்னுதான் அந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். என்கூட நடித்தவர்களுக்குத் தெரியும். இது கமல் ஹாசனுடைய கரியரைக் காப்பாற்றும் வண்டி கிடையாது என்று. நல்ல சினிமாவை உலக தரத்துக்குக் கொண்டுபோகும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம். ஒருநாள் இயக்குநர் என்கிட்ட ஒரு படம் காட்டினார். படம் பார்த்துட்டு, 'யார்யா அந்த ஆளு'னு கேட்டேன். 'பிடிச்சிருக்கா'னு கேட்டார். 'ரொம்ப தன்னம்பிக்கையோட நடிக்கிறார், நல்லா வருவான்யா ஒரு நாள்'னு சொன்னேன். படத்துடைய பெயர், 'மீரா'. அந்த ஆள் இந்தாதான் உட்கார்ந்திருக்கார்.

கேமரா லென்ஸை நேரா பார்க்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும். அது பயிற்சி எடுத்தெல்லாம் வராது. அது உள்ளே இருக்கணும். பொதுவா சினிமா இன்டஸ்ட்ரி ஒருத்தருக்குப் பொங்கல் போடும், ஒருத்தருக்குப் பிரியாணி போடும், சிலரைப் பட்டினி போடும். இவர் 'சியான்' விக்ரமா ஆகுறதுக்கு ஏற்பட்ட தாமதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. இன்னும் வேகமா இவர் இந்த உயரத்தை எட்டியிருக்கணும். 'சேது' படம் ரொம்ப வருடங்களுக்கு முன்னாடியே வந்திருக்கணும். இது கமல் ஹாசன் எனும் நடிகன் படும் வருத்தம் இல்லை. கமல்ஹாசன் எனும் கலைஞன், இயக்குநர், எழுத்தாளன் படும் வருத்தம். அதுக்கு அப்புறம் நிறைய படங்கள் அவருக்கு வெற்றியா அமைஞ்சது. இனிமேல் நம்ம எதுக்கு அவரைப் பத்தி கவலைப்படணும். ஊரே சேர்ந்து அவரைத் தூக்கித் தோள்ல போட்டுச்சு.
இவர் 'சியான்' விக்ரமா ஆகுறதுக்கு ஏற்பட்ட தாமதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. இன்னும் வேகமா இவர் இந்த உயரத்தை எட்டியிருக்கணும். 'சேது' படம் ரொம்ப வருடங்களுக்கு முன்னாடியே வந்திருக்கணும்.கமல்ஹாசன்
'கடாரம் கொண்டான்' படம் பார்த்தேன். நான் இளைஞனா இருக்கும்போதும் சரி, நடிகனா இருக்கும்போது சரி, நல்ல நடிப்பைப் பார்த்தா கண்டிப்பா பாராட்டிடுவேன். ஆனா, பொறாமையும் வரும். இது என்னுடைய படம்ங்கிறதால சொல்லல. ஒரு ரசிகனாக நான் இந்தப் படத்தை ரொம்பவே ரசித்தேன். கலைஞனாகும் முன்பு நான் ஒரு ரசிகன். அதுதான் என்னுடைய முதல் அந்தஸ்து. ஒரு தயாரிப்பாளரா எனக்கும், ரவிக்கும் என்ன கிடைக்கணுமோ கிடைக்கட்டும்.
ஆனா, இந்தப் படத்தை நீங்க விக்ரமுக்காகவே பார்க்கலாம். படப்பிடிப்புத் தளத்துக்கும் நான் இரண்டு நாள்கள்தான் போயிருப்பேன். எனக்கு எந்தவிதப் பதற்றமும் ஏற்படல. அதுக்கு முழுக் காரணமும் ராஜேஷ் அவர்கள்தான். ஏன்னா, எந்தப் பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் திறைமையை நாங்கள் கொடுத்திருக்கிறோம். ஒரு அரசாங்கமே துரத்தும் அளவுக்குப் படம் எடுக்கக் கூடியவர்கள் நாங்கள். மொத்தப் படக்குழுவுமே, 'எதை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்' என்று எதிர்கொள்ளும் ஆள்கள். நான் சொல்றதெல்லாம் உங்களுக்கு ஜூலை 19-ஆம் தேதி தெரியும். படம் அன்று வெளியாகும்." எனப் பேசி முடித்தார்.