
நம்மளே சின்ன பட்ஜெட்ல ஒரு இண்டிபெண்டென்ட் படம் எடுக்கலாம்னு யோசிச்சப்போ தோணின ஐடியாதான் இந்தக் கதை.
‘கடைசீல பிரியாணி’ என்று ஒரு படத்தின் டீசரை Y NOT X நிறுவனம் வெளியிட்டது. அதனை க்ளிக் செய்தால் விஜய் சேதுபதியின் குரல். நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லோரும் மக்களுக்குப் பரிச்சயமில்லாத முகங்கள். ஆனால், புதுமையான கதைக்களத்தால் பலரையும் ஈர்த்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் நிஷாந்த் களிதிண்டியிடம் பேசினேன்.

``படம் எப்படி ஆரம்பமானது? விஜய் சேதுபதி எப்படி படத்துக்குள்ள வந்தார்?’’
‘‘நான் இதுக்கு முன்னாடி சில ஆவணப்படங்கள் இயக்கியிருக்கேன். சினிமாவில் இயக்குநராகணும்னு நானும் என் நண்பர்களும் முயற்சி பண்ணிட்டிருந்தோம். நம்மளே சின்ன பட்ஜெட்ல ஒரு இண்டிபெண்டென்ட் படம் எடுக்கலாம்னு யோசிச்சப்போ தோணின ஐடியாதான் இந்தக் கதை. நாங்களே இந்தப் படத்தை ஆரம்பிச்சு முடிச்சுட்டோம். Y NOT X நிறுவனம் இந்தப் படத்தைப் பார்த்துட்டு நாங்களே வெளியிடுறோம்னு சொன்னது ரொம்ப மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் படத்துடைய மியூசிக் டைரக்டர் வினோத்தின் நண்பர் மூலமா விஜய் சேதுபதி சார்கிட்ட டீசரைக் காட்டினோம். அவர் டீசரைப் பார்த்தவுடன் படம் பார்க்கணும்னு கேட்டார். படத்தைப் போட்டுக் காட்டினோம். ரெண்டு, மூணு முறை பார்த்தார். அவருடைய சொந்தப் படம் மாதிரி அவ்வளவு அக்கறையா நிறைய இன்புட்ஸ் கொடுத்தார். ‘டீசர்ல ஒருத்தர் இந்தக் கதையைப் பத்திச் சொன்னா நல்லாருக்கும். அதை நானே பண்றேன்’னு சொன்னதும் அவர் ஐடியாதான். அந்த வசனத்தை நாங்க எழுதி எடுத்துட்டுப் போனோம். அவரும் ஒரு டிராஃப்ட் ஐடியாவுடன் இருந்தார். இதெல்லாம் பண்ணணும்னு அவருக்கு அவசியமே இல்லை. Y NOT X நிறுவனமும் விஜய் சேதுபதி சாரும் உள்ள வந்த பிறகுதான், எங்களுக்கே படத்தின் மேல நம்பிக்கை வந்தது.’’

``என்ன பின்னணியில் கதை நடக்கும்?’’
‘‘இது மூணு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதை. தன் அப்பாவைக் கொன்னதுக்காக அண்ணன் தம்பிங்க சேர்ந்து பழி வாங்கத் துடிக்கிறதுதான் கதை. ஆனா, இவங்களுக்குள்ளேயே நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கும். இவ்வளவு ஆக்ரோஷமா இருக்கிற இவங்களுடைய திட்டம் நிறைவேறுதா இல்லையாங்கிறதுதான் படம். சிம்பிளாச் சொன்னா, பழிவாங்கல் கதைதான்.அதை நாங்க க்ரைம் காமெடி ஜானர்ல அணுகியிருக்கோம். பார்க்கிறவங்களை நிச்சயம் என்டர்டெயின் பண்ணும். தவிர, அடுத்த சீன் இதுதான்னு பார்க்கும்போது கணிக்க முடியாத அளவுக்குத் திரைக்கதையில மெனக்கெட்டிருக்கோம். இந்தப் படத்தைக் காட்சிப்படுத்தினது டாக்குமென்ட்ரி ஃபீல்ல இருக்கும். ஆனா, நடக்குற விஷயங்கள் எல்லாம் டிராமாவா இருக்கும். படம் முழுக்க இந்த பேட்டர்ன்லதான் இருக்கும். இதுதான் மத்த படங்களுக்கும் இதுக்கும் இருக்கிற வித்தியாசம்னு நினைக்கிறேன். இதுல வர்ற கதாபாத்திரங்கள் எதுக்கும் ஹீரோ, வில்லன்னு பில்டப் கொடுக்காமல் இயல்பா, மனிதத்தன்மையா உண்மையா இருக்கிற மாதிரி வடிவமைச்சிருக்கோம்.’’


`` ‘கடைசீல பிரியாணி’ன்னு தலைப்பு வைக்கக் காரணம்?’’
‘‘நம்ம ஊர்ல இப்போ பிரியாணியை ஒரு உணவு வகையா மட்டும் பார்க்காமல் அதை ஒரு எமோஷனா பார்க்குறாங்க. ‘கடைசீல பிரியாணி’ - இந்தத் தலைப்புக் காரணம் என்னன்னு படம் பார்த்து முடிக்கும்போது தெரியும். காலையில இருந்து செம ப்ரஷர்ல இருந்துட்டு மதியம் பிரியாணி சாப்பிடும்போது எப்படி சந்தோஷமான ஒரு ரிலாக்சேஷன் கிடைக்குமோ அப்படி இந்தப் படத்தைப் பார்க்கும்போது இருக்கும்னு உறுதியாச் சொல்ல முடியும்.’’