
இந்தப் படத்துல இருந்துதான் விஜய் `நடிக்க' ஆரம்பிச்சிருக்கார்னு சொல்றாங்களா?!
காதல், பாசம் - ஒரு காக்டெய்ல் பார்ட்டி!சினிமாவில் உன்னதமான காதலைச் சுவையாகவும் உருக்கமாகவும் சொன்னாலே மெய் சிலிர்க்கும். அதேபோல் பாசத்தை மட்டும் தனிப்படுத்திப் பிழிந்து கொடுத்தாலும் பரவசமான அனுபவம்தான்!இந்த இரண்டுமே கச்சிதமாகக் கலந்த `காக்டெய்ல் பார்ட்டி' என்றால் கேட்கவும் வேண்டுமா?! டைரக்டர் பாசில் தந்திருப்பது அந்த வகைதான்!

காதலின் வீரியத்துக்குமுன் எல்லா சக்திகளும் ஆயுதங்களும் வாயடைத்துப் போய் செய்வதறியாது நிற்க, க்ளைமாக்ஸில் ஆஸ்திரேலிய பெளலர் வார்னே பந்துவீச்சு மாதிரி இயக்குநர் ஆடியன்ஸை `மெஸ்மரைஸ்' செய்வது உண்மை!கதைக்குக் கிடைத்துவிட்ட அழுத்தம் திருத்தமான முடிவு மட்டுமே இலக்காக அமைந்து விட்டதாலோ என்னவோ, ஒட்டுமொத்தத் திரைக்கதைப் பற்றி, அதில் திருப்பங்கள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை டைரக்டர்!அவளை அவன் காதலிக்கிறான்... அவளும் அப்படியே... அவளுடைய உடன்பிறப்புகளிடம் இருந்து அவன் அடி வாங்குகிறான். காதல் தொடர்கிறது. மீண்டும் அடி... காதல்... அடி... காதல்... என்று திரைக்கதையின் மையப் பகுதியை ஜெராக்ஸ் எடுத்துத் தள்ளிவிட்டார்கள்! மற்றபடி `அட' என்று நிமிரவைக்கும் அர்த்தமுள்ள கிளைச் சம்பவங்கள் எதுவும் இல்லை! `ஜங்ஷன் எப்போ வரும்?' என்று காத்திருப்பது மாதிரி இடையில் ஏற்படும் லேசான தொய்வுக்கு இதுவே காரணம்!குழந்தைப் பருவத்திலே நடிப்பில் புகுந்து விளையாடிய ஷாலினிதான் இதில் காதலி. முதல் தமிழ் படம்! சும்மா சொல்லக்கூடாது. பிய்த்து உதறிவிட்டார்! ஆரம்பத்தில் புத்தகக் கடையில் தன்னை மீறி அவர் படபடப்புடன் வீசும் காதல் பார்வைகளால் வீழ்த்தப்படுவது விஜய் மட்டுமா..? படம் பார்ப்பவர்களும்தான்! `வேறு எல்லாவற்றையும்' காட்டுகிற இன்றைய வரவுகளிலிருந்து மாறுபட்ட புதுவரவு ஆன ஷாலினியே வருக... வருக..!
மேலும் ஒரு படி முன்னேறி, `நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் ஹீரோக்கள் அகாடமி'யில் உறுப்பினர் கார்டு பெற்றுவிட்டார் விஜய்! ஷாலினியிடம் காதலை வெளிப்படுத்தும்போதும் அம்மா ஸ்ரீவித்யாவிடம் அன்பைப் பொழியும்போதும் மென்மையாக ஷாலினியை நினைத்து மனதுக்குள் அசைபோடும்போதும் தமிழ் சினிமாவுக்கு இதோ ஒரு கங்குலி!

மிகவும் அமைதியான, யேசுபிரானிடம் பக்தி கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராதாரவிக்கும் அவரது சகோதரர்களுக்கும் தங்கை ஷாலினியின் காதல் விவகாரத்தில் மட்டும் அப்படி ஒரு வெறி ஏன்? விஜய்யைப் பார்க்கும்போதெல்லாம் அடித்துப் புரட்டி எடுக்கிறார்கள். இதற்கு ஏதோ நெருடலான மனோதத்துவ காரணம் இருக்கிறது என்று நினைக்க வைக்கும் அளவுக்கு... டூ மச்!

பாசிலுக்குப் பலமான வலக்கரம் இளையராஜா! இனிமையான `தாலாட்ட வா...' பாடல் மட்டுமில்லாமல் வெவ்வேறு சூழ்நிலைகளின் எமோஷன்களுக்கு ஏற்ப தீம் மியூஸிக்கை அவர் கையாண்டிருக்கும் விதமும் அசத்தல்! தவிர, படம் முழுக்கவே பின்னணி இசையில் இந்த ஜீனியஸிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் ஜீவநதி டைரக்டருக்கு ஜீவநாடி! முக்கியமாக, கடைசியில் ஸ்ரீவித்யா, `உங்க பொண்ணைக் குடுத்துடுங்க...' என்று கேட்ட விநாடியில், பின்னணியில் ராஜா கொடுக்கும் சிலிர்ப்பான இன்ப அதிர்ச்சி நிறைந்த ஒரு ஸ்ட்ரோக், ஒரே ஒரு ஸ்ட்ரோக் - காட்சியின் முழுதீவிரத்தை என்னமாய் வெளிப்படுத்துகிறது!பெரியவர்கள், டீன் ஏஜர்கள் இரு தரப்பினரையும் உணர்ச்சிபூர்வமாகக் கலங்கடிக்கும் இந்தப் படத்தில் விஜய் பெற்றோராக மிடுக்குடன் சிவகுமார் - பவர்ஃபுல் கண்களோடு ஸ்ரீவித்யா, ஷாலினியின் கண்டிப்பான அம்மா, துடிப்பான நண்பர்கள் சார்லி, தாமு, குப்பத்து மணிவண்ணன் எல்லோருமே நச்!இதோ, காதலுக்கு இன்னொரு மரியாதை கலந்த `ஜே'!
- விகடன் விமரிசனக் குழு