பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி!

karthi
பிரீமியம் ஸ்டோரி
News
karthi

லோகேஷ் கனகராஜ்... தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர். மூன்றாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

‘மாநகரம்’ மூலம் மிரட்டல் அறிமுகம் கொடுத்தவர், அடுத்து ‘கைதி’யோடு வருகிறார். மாலை வேளையில் மட்டும் மழை பெய்யும் சென்னையின் வித்தியாச வானிலையில் லோகேஷைச் சந்தித்தேன்!

ஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி!

“ ‘மாநகரம்’ படம் முடிச்சதும் சூர்யா சாரை வெச்சு அடுத்த படத்தைப் பண்ணலாம்னு எஸ்.ஆர்.பிரபு சாருக்கு கமிட் பண்ணினேன். ‘மாநகரம்’ படத்துக்கு முன்னாடியே நான் யோசித்த கதை அது. அந்த ஸ்க்ரிப்ட்டை ஃபைனல் பண்ண டைம் ஆச்சு. அதை பிரபு சார்கிட்ட சொன்னதும், அதுக்கு நடுவுல சின்னதா ஒரு படம் பண்ணலாம்னு பிளான் பண்ணி ஆரம்பிச்சதுதான் ‘கைதி.’ முதலில் இந்தப் படத்துக்கு மன்சூர் அலிகான் சாரைத்தான் ஹீரோவா நடிக்க வைக்கலாம்னு நினைச்சேன். ஆனா, இந்தப் படத்துக்கான ரிசர்ச் வொர்க் போகப்போக, பெரிய படமா மாறுச்சு. ஒரு நாள் கார்த்தி சாருக்கு இந்தக் கதையோட ஒன்லைன் தெரியவர, முழுக்கதையைக் கேட்கணும்னு சொன்னார். கதை சொன்னதும் அவருக்குப் பிடிச்சிருச்சு. கார்த்தி சார் இந்தப் படத்துக்குள்ள வந்ததும் இது இன்னும் பெரிய படமாகிடுச்சு. அவருக்காகச் சில விஷயங்களைச் சேர்த்துட்டு, படத்தை ஆரம்பிச்சோம்!’’ - ‘கைதி’ படம் உருவான கதையோடு உரையாடலை ஆரம்பித்தார் லோகேஷ்.லோலோ

“ ‘மாநகரம்’ படம் பண்ணும்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மாஸ் ஹீரோக்கள் நடிக்கணும்னு சொல்லியிருந்தீங்க. ஆனால், மாஸ் ஹீரோ படத்துக்குள்ள வரும்போது ஸ்க்ரிப்ட்டில் மாற்றங்கள் செய்வது ஏன்?’’

‘`என்னைப் பொறுத்தவரை படத்தின் கன்டென்ட் பாதிக்காத அளவுக்கு ஸ்க்ரிப்ட்டில் மாற்றங்கள் பண்ணலாம். கார்த்தி சார் கமிட்டாகுறதுக்கு முன்னாடியும் கமிட்டானதுக்குப் பின்னாடியும் கன்டென்ட்டில் எந்தவித மாற்றத்தையும் நான் பண்ணலை. கார்த்தி சாருக்காக நான் ஹீரோயின் கேரக்டரைச் சேர்க்கலை; பாடல்களைச் சேர்க்கலை. மெயின் கன்டென்ட் என்னவோ அது அப்படியேதான் இருக்கு. ஏன்னா, இந்தப் படம் இப்படித்தான் இருக்கணும்னு சொன்னேன். அதை அவரும் ஏத்துக்கிட்டார். கார்த்தி சாருக்காக நான் சேர்த்தது, அவர் நடிப்புக்குத் தீனி போடுற மாதிரியான சில விஷயங்கள் மட்டுமே.’’

ஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி!

‘`எதனால் இந்தப் படத்தில் ஹீரோயினே இல்லை? உங்களோட முதல் படத்திலும் ஆண்கள்தான் அதிகமா இருப்பாங்க...’’

“பர்சனலா தவிர்க்கணும்னு பண்றது இல்லை. ‘கைதி’ படத்தோட மெயின் எமோஷனே ஒரு பெண்ணை மையப்படுத்தித்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு எமோஷனை அந்தப் பெண் கேரக்டர் இல்லாமலே கொண்டு வரணும்கிறது என் ஐடியா. பெண்களை வெச்சு எமோஷனலா நிறைய படங்கள் எடுத்துட்டாங்க. ஆனா, அவங்களைக் காட்டாமலேயே ஒரு எமோஷனல் படம் எடுக்கணும்கிற சவாலை, எங்களுக்கு நாங்களே கொடுத்துக்கிட்டு, ‘கைதி’யை எடுத்திருக்கோம்.’’

“ ‘மாநகரம்’ படம் மற்றும் ‘கைதி’ டீசர்... இரண்டையும் வெச்சுப் பார்க்கும்போது, உங்க படங்கள் அதிகம் இரவிலேயே நடக்கிற கதையா இருக்கு... உங்களுக்கு நைட் லைஃப்தான் பிடிக்குமா?’’

“இரவில் எடுக்கும்போது மேக்கிங் நல்லா வரும்கிறது என்னோட நம்பிக்கை. அதையும் தாண்டி ‘மாநகரம்’ பண்ணும்போது, சென்னையின் இரவை இதுவரை யாரும் காட்டாத மாதிரி காட்டணும்னு திட்டமிட்டு எடுத்தோம். `மாநகரம்’ மாதிரி `கைதி’யும் ஒரு இரவில் நடக்கிற கதைதான். இந்தப் படத்தோட ஒரு ஷாட்டைக்கூடப் பகலில் எடுக்க முடியாது. அப்படியான ஸ்க்ரிப்ட் இது. ஒரு காட்டின் இரவு எப்படி இருக்கும்னு காட்டத்தான், இந்தப் படம் முழுக்க காட்டிலேயே எடுத்திருக்கோம்.’’

ஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி!

“நீங்க யார்கிட்டவும் உதவி இயக்குநரா வேலை பார்க்காமல் இயக்குநரானவர். கார்த்தி, மணிரத்னத்திடம் உதவி இயக்குநரா இருந்தவர். ஸ்பாட்டில் டைரக்‌ஷன் சம்பந்தமான உதவிகள் அவர்கிட்ட இருந்து எதுவும் கிடைக்குமா?’’

“ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே நானும் கார்த்தி சாரும் பேசும்போது, பல விஷயங்களை டிஸ்கஸ் பண்ணினோம். எதெல்லாம் சரியா வரும்; எதையெல்லாம் மாற்றிப் பண்ணணும்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். அதனால் ஸ்பாட்டில் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால், ஒவ்வொரு நாள் காலையில் ஷூட்டிங் கிளம்பும் போதும் எல்லா யூனிட்டும் சரியா இருக்கான்னு நான் செக் பண்ற மாதிரி, அவரும் செக் பண்ணுவார். எல்லாமே நேர்த்தியா நடக்கணும்னு எதிர்பார்ப்பார்.’’

“படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் பற்றிச் சொல்லுங்க...”

‘`முக்கியமான ரோல்ல, நரேன் நடிச்சிருக்கார். அவருக்கு இது சரியான கம்பேக் படமா இருக்கும். நகைச்சுவை நடிகர் ஜார்ஜ் ஒரு முக்கியமான ரோல் பண்ணியிருக்கார். ‘கலக்கப்போவது யாரு’ தீனா நடிச்சிருக்கார். அவரோட நிறைய ப்ராங்க் போன்கால் வீடியோஸ் பார்த்திருக்கேன். இதுல அவரோட வாய்ஸ் தனியாத் தெரியும். அப்படி ஒரு வாய்ஸ் இந்தப் படத்தோட ஒரு கேரக்டருக்குத் தேவைப்பட்டது. அதனால அவரை நடிக்க வெச்சேன். அர்ஜுன் தாஸ்னு ஒரு புதுமுகம் வில்லனா பண்ணியிருக்கார். ரொம்ப நல்லா நடிச்சிருக்கார்.’’

ஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி!

“அடுத்து விஜய் படம் பண்ணப்போறீங்க; தீபாவளிக்கு ‘பிகில்’ படத்தோடு ‘கைதி’ படத்தை ரிலீஸ் பண்றீங்க. எப்படி இருக்கு இந்தப் புது அனுபவங்கள்?”

‘`ஒரு படத்தை முடிச்சு, அதைத் தயாரிப்பாளரின் கையில் கொடுக்கிற வரைக்கும்தான் இயக்குநரோட வேலை. அதை எப்போ ரிலீஸ் பண்ணணும்கிறது தயாரிப்பாளரோட முடிவு. ‘கைதி’யை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யணும்னு பிளான் பண்ணிட்டுதான் ஷூட்டிங்கை ஆரம்பிச்சோம். கிராஃபிக்ஸ் வேலைகளால் கொஞ்சம் டைம் ஆச்சு. அப்புறம் படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆவதால் தீபாவளி நேரம்தான் சரியா இருக்கும்னு சொன்னாங்க.’’

ஓர் இரவு... ஒரு காடு... ஒரு கைதி!

‘`உங்களோட 3வது படம் ‘விஜய் 64.’ இதில் எந்தளவுக்கு விஜய்யை வித்தியாசமா காட்டப்போறீங்க?’’

“ ‘விஜய் 64’ படத்தைப் பத்தி இப்போ நான் பேசுறது, ரொம்ப சீக்கிரம்னு நினைக்கிறேன். படத்தைப் பத்தியோ, அது எந்த மாதிரியான ஜானரா இருக்கும்னோ இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது. ஆனா, என்னால ஒரு விஷயத்தை மட்டும் உறுதியா சொல்ல முடியும். இதுவரைக்கும் பார்க்காத விஜய்யா, பார்க்காத விஜய் படமா அது இருக்கும். அதுக்கு நான் கியாரன்ட்டி.’’

உற்சாகமாய்க் கைகுலுக்குகிறார்.