கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

கலகத் தலைவன் - சினிமா விமர்சனம்

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி

கதாநாயகனாக உதயநிதிக்கு இந்தப் படம் செம மைலேஜ். அதிகம் பேசாமல் தன் அடையாளங்களை மறைத்து வாழும் திரு பாத்திரத்தில் கோபம், அழுகை, காதல், ஆக்‌ஷன் எனப் பல பரிமாணங்களில் மிளிர்கிறார்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றியபடி, அந்த கார்ப்பரேட் நிறுவனம் சமூகத்துக்கு இழைக்கும் அநீதிகளை அம்பலப்படுத்துபவனே ‘கலகத் தலைவன்.'

பல துறைகளிலும் கால் பதித்துள்ள முன்னணி நிறுவனமான வஜ்ரா, மைலேஜ் அதிகம் கொடுக்கும் ஒரு லாரியை அறிமுகம் செய்கிறது. ஆனால் அந்த லாரி வெளியேற்றும் புகை, அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுற்றுச்சூழலை அதிகம் மாசுபடுத்தும் ரகசியம் வெளியாகி, பங்குச்சந்தையில் வஜ்ராவின் மதிப்பு சடசடவென்று சரிகிறது. தொடர்ச்சியாக வஜ்ராவின் ரகசியங்களை வெளியிடுவது யார் எனக் கண்டுபிடிக்கும் பணியை ஆரவ்விடம் கொடுக்கிறார் நிறுவன உரிமையாளர். கொடூர சித்திரவதைகள் செய்து உண்மைகளைக் கறக்கும், கார்ப்பரேட் அடியாள் ஆரவ், ‘கலகத் தலைவனை'க் கண்டுபிடித்தாரா என்பதை விறுவிறுப்பும் பரபரப்புமாகச் சொல்கிறது மீதிப்படம்.

கலகத் தலைவன் - சினிமா விமர்சனம்

கதாநாயகனாக உதயநிதிக்கு இந்தப் படம் செம மைலேஜ். அதிகம் பேசாமல் தன் அடையாளங்களை மறைத்து வாழும் திரு பாத்திரத்தில் கோபம், அழுகை, காதல், ஆக்‌ஷன் எனப் பல பரிமாணங்களில் மிளிர்கிறார். அவருக்கு ஏற்ற மிக இயல்பான ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருப்பது, அந்தப் பாத்திரத்தின் நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயகியாக நிதி அகர்வால். காதல் தடுமாற்றங்கள் கொண்ட இளம் பெண்ணாக, எளிய மனிதர்களுக்கான சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மருத்துவராக என்று இரண்டு பரிமாணங்களிலும் இயல்பாக ஸ்கோர் செய்கிறார். உதட்டோரம் வழியும் சிறுபுன்னகையுடன் அபார வில்லத்தனம் காட்டுவதில் அசத்தியிருக்கிறார் ஆரவ். கலையரசன், அனுபமா குமார் என எல்லாப் பாத்திரங்களும் கச்சிதம்.

படம் முழுக்க கேன்டிட் உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவாளர் தில்ராஜின் கேமரா. ஆக்‌ஷன் காட்சிகளுக்குத் தேவையான ஃபாஸ்ட்-கட் எடிட்டிங்கில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த். ஒரு ரேஸிங் த்ரில்லருக்குத் தேவையான பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா வழங்க, இரண்டு பாடல்களில் அரோல் கரோலி மனதை வருடுகிறார்.

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான படம் என்றால் நேரடியாக கார்ப்பரேட் முதலாளியே கோட் சூட் போட்டு, கையில் இரும்புத்தடியுடன் வந்து சண்டை போடும் அபத்தத்தை உடைத்ததற்காகவே இயக்குநர் மகிழ்திருமேனியைப் பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனத்துக்கு வேலை பார்க்கும் தொழில்முறை அடியாட்கள், அவர்களுக்கு ஒத்துழைக்கும் அரசு அதிகாரம், காவல்துறை, ஒரு தொழிற்சாலை தனியார் மயமாகும்போது அது எப்படி அதைச் சார்ந்துள்ள சிறுகுறு தொழில்களையும் தொழிலாளர் களையும் மோசமாகப் பாதிக்கிறது என்பதை இவ்வளவு அழுத்தமாகச் சொன்ன முதல் படம் இதுதான். ‘‘எனக்குப் பணம் முக்கியமில்லை. வேட்டை எனக்குப் பிடிக்கும்’’ போன்ற வசனங்கள் கவர்கின்றன. காதல் காட்சிகள் சுவாரஸ்யம் என்றாலும் விறுவிறு வேட்டைக்கு ஸ்பீடு பிரேக். க்ளைமாக்ஸில் சொல்லும் ‘ரஷ்யன் மாபியா'வில் நம்பகத்தன்மையில்லை. பெண்கள்மீதான சித்திரவதைக் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.

கலகத் தலைவன் - சினிமா விமர்சனம்

சின்னச்சின்ன லாஜிக் குறைகளைத் தாண்டி எடுத்துக்கொண்ட விஷயத்திலும் அதைச் சொன்னவிதத்திலும் கவர்கிறான் ‘கலகத் தலைவன்.’