வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள `விடுதலை' திரைப்படம். இந்த மாதம் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசியுள்ள தயாரிப்பாளர் எஸ். கலைப்புலி தாணு, வாடிவாசல் திரைப்படம் குறித்தும் வெற்றிமாறன் குறித்தும் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய தாணு, "இந்தியத் திரையுலகில் இருக்கும் பெரிய நட்சத்திரங்கள், நடிகர்கள் எல்லாம் வெற்றிமாறன் தம்பியிடம் படம் பண்ணலாம் என்று சொல்கிறார்கள். என்ன உயர் நிலை வந்தாலும் தன்னிலை மாறாதவர் வெற்றிமாறன். அப்படி மிகப்பெரிய நடிகர்கள் படம் பண்ணலாம் என்று கூப்பிடும்போதும் வாடிவாசல் முடிச்சுட்டு வரேன்னுதான் சொன்னார். அதுதான் வெற்றிமாறன். இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் ராஜமெளலி. அவர்கூட எனக்குப் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன் என்று கூறுகிறார்.
குறிப்பாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ராஜமெளலியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே வெற்றிமாறனை பிடித்த இயக்குநர் என்றும் அவருடன் அடுத்தப் படம் பண்ண விரும்புகிறோம் என்று கூறுகிறார்கள்" என்று கூறினார். மேலும், "இளையராஜா நிறையப் படங்கள் பண்ணியிருக்கார். ஆனால் அவரின் இசை தாகத்திற்கு எந்தவொரு இயக்குநராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. இளையராஜாவின் வேள்விக்கு நெய் ஊற்றி பிரகாசமாக எரிய விட்டிருக்கிறார் வெற்றிமாறன்" என்று கூறினார்.