சினிமா
Published:Updated:

களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம்

அருள்நிதி - ஜீவா
பிரீமியம் ஸ்டோரி
News
அருள்நிதி - ஜீவா

மொத்தப் படத்தையும் தாங்கிப்பிடிப்பது ஜீவா-அருள்நிதி கெமிஸ்ட்ரிதான். மீண்டும் முழுக்க முழுக்க கலகலப்பான கதாபாத்திரத்தில் ஜீவா.

‘அடிச்சாலும் புடிச்சாலும் விட்டுக்கொடுக்காத நண்பேன்டா’ என மார்தட்டும் இரண்டு நண்பர்களின் கதை ‘களத்தில் சந்திப்போம்.’

கல்யாணத்தைத் தவிர்க்கும் அருள்நிதி, ‘எப்படா கல்யாணம் ஆகும்’ என்று ஏங்கும் ஜீவா. ஒருவருக்கு இன்னொருவர் பெண் தேட, பல திருப்பங்களுக்குப் பிறகு இவர்கள் நாயகிகளின் கரம் பிடித்தனரா என்பதே படம். பல நாள்களுக்குப் பிறகு ஜாலியான டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டைக் கையிலெடுத்து அதில் இருவருக்குமே சம வாய்ப்பு கொடுத்து காமெடியில் ரவுண்டு கட்டிக் கலக்கியதில் கவர்கிறார் இயக்குநர் ராஜசேகர்.

மொத்தப் படத்தையும் தாங்கிப்பிடிப்பது ஜீவா-அருள்நிதி கெமிஸ்ட்ரிதான். மீண்டும் முழுக்க முழுக்க கலகலப்பான கதாபாத்திரத்தில் ஜீவா. தனக்கான ஏரியா என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார். ரௌத்திரம் பழகும் உடல்மொழி, கண்களின் ஓரத்தில் எப்போதும் மென்சோகம் என நண்பனுக்காக எதையும் செய்யும் கதாபாத்திரமாக மனதில் பதிகிறார் அருள்நிதி. இரண்டு நாயகிகளில் ஓரளவுக்காவது வாய்ப்பு இருப்பது மஞ்சிமா மோகனுக்கே. பிரியா பவானிசங்கர் அவ்வப்போது மட்டும் ‘ஆஜர் சார்’ சொல்கிறார். பாலசரவணன் - ரோபோ சங்கர் கூட்டணி பட்டாசு காமெடியில் கலக்குகிறார்கள். இளவரசு, ‘ஆடுகளம்’ நரேன், மாரிமுத்து, வேல ராமமூர்த்திக்கு அவர்கள் முந்தைய படங்களில் நடித்த அதே அப்பா கார்பன் காப்பி கதாபாத்திரங்கள்.

களத்தில் சந்திப்போம் - சினிமா விமர்சனம்

படத்தின் இன்னொரு முக்கிய பலம் டான் அசோக் வசனங்கள். நட்பு, காதல், சென்டிமென்ட், காமெடி என எல்லா ஏரியாவிலும் அதற்கேற்ற மீட்டரில் வசனங்கள் எழுதி ஸ்கோர் செய்திருக்கிறார். கதையின்போக்கில் ஆங்காங்கே வரும் அரசியல் நையாண்டிகளும், செம!

‘பழைய யுவன் இசை மிஸ்ஸிங்’ என்ற ரசிகர்களின் மைண்ட்வாய்ஸ் யுவனுக்குக் கேட்டுவிட்டது போல! தன்னிடம் இருப்பிலிருந்த பழைய ட்யூன்களை சற்றே பட்டி டிங்கரிங் பார்த்து இறக்கியிருக்கிறார். பாடல்கள் படத்துடன் பெரிதாக ஒட்டவும் இல்லை. ஆனால், பின்னணி இசை படத்திற்குத் துணை நிற்கிறது. பரபர கபடி காட்சிகளை அதே சூட்டுடன் படம்பிடித்ததால் கவர்கிறது அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு. ஒரு பொழுதுபோக்குப் படமாகக் கலகலப்பும் விறுவிறுப்பும் குறையாமல் கட் செய்திருக்கிறார் தினேஷ் பொன்ராஜ்.

பழக்கப்பட்ட களம், யூகிக்கக்கூடிய திரைக்கதை என்றாலும் கலகலப்பாகக் கதைசொல்லியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸுக்கு முன்பே படம் முடிந்துவிடுகிற உணர்வு, சீரியஸான இடங்களில் காமெடி வசனங்கள் போன்ற சில விஷயங்களைத் தவிர்த்திருந்தால் களம் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.