சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: களவாணி - 2

விமல், ஓவியா
பிரீமியம் ஸ்டோரி
News
விமல், ஓவியா

இம்முறை அரசியல் களவாணித்தனம் செய்கிறான் இந்த `களவாணி -2’.

அறிக்கி, வேலை வேட்டி எதுவுமில் லாமல் ஊரைச் சுற்றும் வெள்ளை வேட்டி மைனர். அவர் செய்யும் களவாணித்தனங்களைப் பார்த்து ஊரே அலறுகிறது. ஊருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடக்கப் போவதற்கான அறிவிப்பு வர, அதை வைத்து ஒரு திட்டம் போடுகிறான் அறிக்கி. அந்தத் திட்டமும் அறிக்கியின் களவாணித்தனமும் எங்கெல்லாம் அவனை நகர்த்திச் செல்கின்றன என நகர்கிறது கதை.

சினிமா விமர்சனம்: களவாணி - 2

அறிக்கி (எ) அறிவழகன் (எ) ஏ.எம்.ஆர் ஆக விமல். முதல் பாகத்தில் பார்த்ததுபோல் அப்படியே இருக்கிறார், அப்படியே அசத்தியிருக்கிறார். மகேஷாக ஓவியா, கொஞ்சமே கொஞ்சமாய் வந்து கொஞ்சிவிட்டுப் போகிறார். ஒட்டுமொத்தப் படத்தையும் கலகலப்பாக்குவது `பஞ்சாயத்து’ கஞ்சா கருப்புதான். மனிதரைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது. அறிக்கியின் நண்பன் விக்கியாக விக்னேஷ்காந்த், அவரும் தன் பங்குக்குக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அப்பாவாக இளவரசு, அம்மாவாக சரண்யா, தோசையாக மயில்சாமி, வினோதினி என எல்லோரும் சிறப்பாய் நடித்திருக் கிறார்கள். படத்தில் ஹீரோவை சோதிக்க வேண்டிய வில்லன்கள் துரை சுதாகரும், ராஜும், நிஜத்தில் நம்மையே சிறப்பாக சோதித்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முற்றிலும் வேறொரு கதை சொல்லியிருக்கிறார் சற்குணம். ஆனால், நடிகர்களையும் அவர்களின் பெயர்களையும், `களவாணி’யில் இருந்து அப்படியே கலர் ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார். `களவாணி’யில் இருந்த மண் மணமும் மனிதர்களின் மனமும் `களவாணி-2’ல் நிறையவே மிஸ்ஸிங். அறிக்கியின் பாத்திர வடிவமைப்பு ஈர்த்தாலும், அவன் செய்யும் களவாணித்தனங்களில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை. ஆனால் ஆரம்பத்தில், மாட்டு வண்டியாய் ஊரும் திரைக்கதை, கடைசி அரைமணி நேரத்தில் ராக்கெட்டாய்ப் பறக்கிறது. தேர்தல் அத்தியாயங்கள் எல்லாம் அடிப்பொளி ரகம்! வசனங்கள், உடல்மொழிகள் இல்லாது சம்பவங்களையே நகைச்சுவையாக எழுதுவது சற்குணத்தின் ஸ்டைல், அதை இப்படத்திலும் பல இடங்களில் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுத்திருக்க வேண்டிய இக்கதையை, ஏன் வேறொரு கதையாக எடுத்தார் என்பது சற்குணத்திற்கே வெளிச்சம்.

விமல், ஓவியா
விமல், ஓவியா

ஆரம்பத்தில் கண்களை உறுத்தும் மாசாணியின் ஒளிப்பதிவு, போகப் போகதான் கண்களைக் குளிர்விக்கிறது. ராஜா முகமதுவின் படத்தொகுப்பும் அப்படியே. நடராஜன் சங்கரனின் பின்னணி இசை ஓகே. மணி அமுதவன், வி2, ரொனால்ட் ரீகன் இசையில் பாடல்கள் மண் வாசனை வீசினாலும், அவை இடம்பெற்றிருக்கும் இடம் அவற்றில் மண் அள்ளிப்போடுகிறது.

இந்தக் களவாணியும் நம் இதயங்களைக் களவாடுகிறான். என்ன... சீனியர் அறிக்கி அளவுக்கு இல்லை.