கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

கள்ளன் - சினிமா விமர்சனம்

கள்ளன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கள்ளன் - சினிமா விமர்சனம்

கே இசையில் பாடல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒரு குற்றம் எப்படி மற்ற குற்றங்களுக்குத் தாயாக இருக்கிறது, துரோகத்தின் பங்காளியாக மாறுகிறது என்பதைச் சொல்லும் கதை ‘கள்ளன்.’

வேட்டையையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட வேல ராமமூர்த்தியின் மகன் கரு.பழனியப்பன். தந்தை இறந்துபோக, அரசால் வேட்டைத்தொழிலும் தடைசெய்யப்பட, வாழ்வு தடுமாறிக் குற்றத்தின் திசைநோக்கி நடக்கிறார். கூட்டாளிகள் துணையுடன் நடத்தும் குற்றங்களின் காரணமாகச் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை. அங்கும் சில குற்றவாளிக் கூட்டாளிகள், இடையில் ஓர் எதிர்பாராத பெண் துணை - அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள் நாயகனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களே படம்.

நாயகனாக கரு.பழனியப்பன். படத்தின் எல்லாக் காட்சிகளிலும் ஒரேமாதிரியான உணர்வு வெளிப்பாடுகளையே அவர் காட்டுவது பெருங்குறை. நாயகனின் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நிகழும் மாற்றங்களை சரியாக நடிப்பில் பிரதிபலிக்காமல் இருப்பதே பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.

வேல ராமமூர்த்தி, சௌந்திரராஜன், நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், நிகிதா, செல்வி எனப் பலரும் போதுமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

கள்ளன் - சினிமா விமர்சனம்

கே இசையில் பாடல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன் இருவரின் ஒளிப்பதிவும் சிறைக்காட்சிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பெண் இயக்குநர்கள் என்றாலே மென்மையான மனவுணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதைகள் என்னும் பாதையிலிருந்து மாறி முதல் படத்திலேயே ஆக்‌ஷன் கதையைக் கையாண்ட விதத்தில் அறிமுக இயக்குநர் சந்திராவுக்கு வாழ்த்துகள். முற்றிலும் புதிதான வேட்டைப்பின்னணி, குற்றத்துக்கும் துரோகத்துக்கும் இடையிலான உறவு, சுவாரஸ்யமான கதை முடிச்சுகள், ஆர்வம் தூண்டும் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சிகள் ஆகியவை ஈர்க்கின்றன. ஆனால் திரைக்கதையைச் சொல்லும்போது இருக்கும் சுவாரஸ்யம் காட்சியமைத்தலில் இல்லாததே பலவீனம். கதையில் அடுத்தடுத்து திருப்பங்கள் வருவதும் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தாமல் கடக்கின்றன.

காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டி, திரைமொழியை இன்னும் கச்சிதமாகச் செதுக்கியிருந்தால் உள்ளம் கவர்ந்திருப்பான் இந்தக் கள்ளன்.