Published:Updated:

`முடக்கிய விபத்து, விஜய்யின் அன்பு, குடும்பத்தினரின் பாசம்!' - மகன் குறித்து கமீலா நாசர்

குடும்பத்தினருடன் கமீலா நாசர்

நடிகர் நாசர் மகனின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறியிருக்கிறார் நடிகர் விஜய். ஒரு நாள் சர்ப்ரைஸ் விசிட் அடித்த விஜய், நூருலை சந்தோஷப்படுத்தியுள்ளார். அந்த விபத்து மற்றும் அதற்குப் பிறகான விஜய்யின் அன்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பகிர்கிறார் கமீலா நாசர்.

Published:Updated:

`முடக்கிய விபத்து, விஜய்யின் அன்பு, குடும்பத்தினரின் பாசம்!' - மகன் குறித்து கமீலா நாசர்

நடிகர் நாசர் மகனின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறியிருக்கிறார் நடிகர் விஜய். ஒரு நாள் சர்ப்ரைஸ் விசிட் அடித்த விஜய், நூருலை சந்தோஷப்படுத்தியுள்ளார். அந்த விபத்து மற்றும் அதற்குப் பிறகான விஜய்யின் அன்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பகிர்கிறார் கமீலா நாசர்.

குடும்பத்தினருடன் கமீலா நாசர்

ஒரு நொடி போதும்... ஒருவரின் வாழ்க்கையை முடக்கிப்போடுவதற்கு!

துடிப்புடன் களமாடிக்கொண்டிருந்த நடிகர் நாசரின் மூத்த மகன் நூருல் ஹசன் ஃபைசலை முடக்கிப்போட்ட ஒரு விபத்து, அவரின் கனவுகளையும் நொறுக்கியது. வீல்சேரில் முடங்கிய நூருலின் உடல்நிலை முன்னேற்றத்துக்கு, நடிகர் விஜய்யும் காரணமாகியுள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் நாசர் பேசியிருந்தார். அந்த வீடியோ க்ளிப்பிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நாசரின் மனைவி கமீலா, ``விஜய்யை எங்கள் வாழ்நாளில் மறக்க மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

நூருலுடன் விஜய்
நூருலுடன் விஜய்

நூருலுக்கு இளம் வயதில் இருந்தே கலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம். பத்தாம் வகுப்பு முடித்ததுமே, வெளிநாட்டில் கேம் ஆர்ட்ஸ் படிப்பை முடித்தார். கேம் டிசைனிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கியவர், `சைவம்’ படத்திலும் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் பணியாற்றினார். இந்த நிலையில், 2014-ல் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடந்த சாலை விபத்தில், நூருலுக்கு பலத்த காயம். மூளையின் செயல்திறன் பாதிக்கப்பட்டு, வீல்சேரில் முடங்கினார். அதன் பின்னர், மொத்த குடும்பத்துக்கும் நூருல் குழந்தையானார். கடந்த ஏழு ஆண்டுகளில், நூருலின் வாழ்க்கையில் நடிகர் விஜய்யும் ஓர் அங்கமாகவே மாறியிருக்கிறார்.

``ஓவியர் டிராட்ஸ்கி மருது சார், நூருலுக்கு குரு மாதிரி. இவன் பெரியாளா வருவான்னு அடிக்கடி சொல்லுவார். ஸ்கூல் படிப்பை முடிக்குறதுக்கு முன்னாடியே, தன்னோட இலக்கை நிர்ணயிச்சுட்டான். ஆக்டிங்ல பையனுக்கு விருப்பம் இல்ல. ஆனா, தன்னோட கேமிங் தொழில்நுட்பத் திறன் சினிமாத்துறைக்குப் பயன்படணும்னு ஆசைப்பட்டான். `சைவம்’ படத்துக்குப் பிறகு, `அஞ்சான்’ படத்துல வேலை செய்ய கமிட் ஆனான். அதுக்கான பேச்சு வார்த்தைகளை முடிச்சுட்டு வந்த மறுநாளே அந்த விபத்தால..."

குடும்பத்தினருடன் கமீலா
குடும்பத்தினருடன் கமீலா

- மகனுக்கு நேர்ந்த துயரம், மேற்கொண்டு பேச முடியாமல் கமீலாவின் குரலை அடைக்க, கண்ணீருடன் அழைப்பைத் துண்டித்துக்கொண்டார்.

ஆசுவாசமாகி சற்று நேரம் கழித்து அழைத்தவர், ``விபத்துக்குப் பிறகு, பையனுக்குப் பேச்சுப் பயிற்சிகள் கொடுத்தோம். `விஜய்’ங்கிற பெயரை அடிக்கடி உச்சரிச்சான். அவனோட ஃப்ரெண்டு விஜய் ஆனந்த் பெயரைத்தான் சொல்றான்னு நினைச்சோம். சின்ன வயசுல இருந்தே நூருல், நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகர். விபத்துக்குப் பிறகான ஆரம்பகாலத்துல, டிவி-யில விஜய்யின் படங்கள், பாடல்கள் வந்தா ரொம்பவே குஷியாகிடுவான். அவர் பெயரைச் சத்தம்போட்டு உச்சரிப்பான். அதன் பிறகுதான், விஜய்யின் படங்கள் பையனுக்குள்ள துள்ளலான உணர்வை ஏற்படுத்துறதைத் தெரிஞ்சுகிட்டோம். விஜய்யின் படங்களையும் பாடல்களையும் தொடர்ந்து பையனுக்குக் காட்டுறோம். தம்பி விஜய்க்கு ரொம்பவே கடமைப்பட்டுள்ளோம்" என்பவரின் பேச்சில் வலிகளைத் தாண்டிய மகிழ்ச்சி எதிரொலிக்கிறது.

எஸ்.பி.பி உடன் நூருல்
எஸ்.பி.பி உடன் நூருல்

தங்களுடைய வீட்டில் புகைப்படங்கள் எதையும் வைத்திருக்கும் வழக்கம் இல்லாதவர்கள், மகனுக்காக விஜய்யின் படங்கள், பட போஸ்டர்களை நூருலின் அறையில் அதிகளவில் இடம்பெறச் செய்துள்ளனர். விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றையும் பலநூறு முறை சலிப்பின்றி பார்த்து ரசிக்கும் நூருலுக்கு, விஜய்யின் ஆரம்பகால பட கேசட்டுகளையும் தேடிப்பிடித்து வாங்கிப் பார்க்க ஏற்பாடு செய்கின்றனர். விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் `பீஸ்ட்’ படத்தின் அப்டேட்ஸ்வரை அறிந்திருக்கிறார் நூருல். இதற்கிடையே, தன்மீது நூருலுக்கு இருக்கும் அன்பை அறிந்த நடிகர் விஜய், ஒருநாள் சர்ப்ரைஸ் விசிட் அடித்து நூருலை சந்தோஷப்படுத்தியுள்ளார். பின்னர், பலமுறை விஜய்யைச் சந்தித்துள்ள நூருல், அவ்வப்போது விஜய்க்கு செல்போனில் மெசேஜ் செய்து அன்பை வெளிப்படுத்துகிறார்.

``அந்த விபத்துக்குப் பிறகான நாலரை வருஷங்கள் பையனே உலகமா இருந்தேன். பீச், பார்க், தியேட்டர்னு வெளியிடங்களுக்கு அவனைத் தொடர்ந்து அழைச்சுகிட்டு போவோம். அரசியல்ல இருந்து விலகிட்டதால, பையனைக் கவனிச்சுக்க இப்போ கூடுதலா நேரம் கிடைக்குது. கணவரின் கால்ஷீட் வேலைகளைக் கடந்த 20 வருஷங்களா நான்தான் கவனிச்சுக்கிறேன். அந்த வேலையுடன், குடும்பத்துக்கான நேரம் போக, எப்போதுமே நூருலுடன்தான் இருப்பேன். பையனோட நலனுக்காக, கடந்த ஏழு வருஷங்களாவே சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறதையும் குறைச்சுகிட்டேன்.

விபத்துக்கு முன்னர் நூருல்
விபத்துக்கு முன்னர் நூருல்

கணவரும் இளைய மகன்கள் ரெண்டு பேரும் சினிமாவுல வேலை செய்யுறாங்க. இவங்களும் நூருலுக்காகத் தங்களோட வேலைச் சூழல்களை மாத்திகிட்டாங்க. நாங்க நால்வருமே அவனுக்கான எல்லாத் தேவைகளையும் செய்யுறதோடு, அவனுடன் விளையாடவும் பேசவும் முக்கியத்துவம் கொடுப்போம். இதனுடன், முறையான தொடர் பயிற்சிகளால நூருலோட உடல்நிலையில நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. ஒருத்தர் உதவியுடன் கைத்தாங்கலா நடக்குறான். ஓரளவுக்குப் பேசுறான்; தன்னைச் சுத்தி நடக்குறதைப் புரிஞ்சுக்கிறான். நூருலின் தற்போதைய உடல்நிலை முன்னேற்றத்தை நடிகர் விஜய் நேர்ல பார்த்தார்னா ரொம்பவே சந்தோஷப்படுவார். விபத்தால் முடங்கியவங்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. அந்த வகையில, என்னோட மகனைச் சமூகத்துக்குப் பயனுள்ள நபரா மாத்திக்காட்டுறதுதான் என் இலக்கு" - வைராக்கியத்துடன் கூறும் கமீலா, மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் எதிர்கொளும் சிரமங்களையும் ஆதங்கத்துடன் விவரிக்கிறார்.

``எங்களைப் போன்ற பெற்றோர், தங்களோட பிள்ளையின் உடல்நிலை எந்த நிலையில இருந்தாலும், ஆரம்பகட்டத்துல இருந்தே பிள்ளைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தணும். வலி மிகுந்த இதுபோன்ற தருணத்துல, பாசிட்டிவ்வான எண்ணங்களுடன் மனசை ரொம்பவே உறுதியாக்கிக்கணும். பிள்ளைகளின் உடல்நிலை முன்னேற்றத்துக்கு உதவும் விஷயங்களில் கூடுதல் கவனம் கொடுக்கணும். நூருலுக்கு சினிமான்னா ரொம்ப இஷ்டம். தியேட்டர்ல படம் பார்க்க ஆசைப்படுவான். நிறைய சிரமங்கள் இருந்தாலும், பையனோட இந்த ஆசையையும் சாத்தியப்படுத்துறோம்.

விபத்துக்கு முன்னர் நூருல்
விபத்துக்கு முன்னர் நூருல்

தமிழ்நாட்டுல பெரும்பாலான தியேட்டர்கள்லயும் மாற்றுத்திறனாளிகள் போறதுக்குனு சாய்வுதள மேடை, லிஃப்ட், பிரத்யேக கழிப்பறை வசதிகள் கிடையாது. இதனாலேயே, முழுசா படம் பார்க்க முடியாமதான் பல நேரங்கள்ல வீடு திரும்புவோம். என்னைப் போல ஒவ்வொரு பெற்றோரும் தங்களோட பிள்ளைகளை, வணிக வளாகம், கடற்கரை, தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்களுக்குக் கூட்டிட்டுப்போய்ட்டு வர்றது எவ்வளவு சிரமமானதுனு எங்களுக்குத்தான் தெரியும். மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்குப் போக ஆசைப்படுவாங்க. ஆனா, அதுக்கான சிறப்பு வசதிகளை வருஷத்துல ஒருநாள் மட்டுமே அரசாங்கம் ஏற்பாடு செய்யுது. இதுக்கான நிரந்தர வசதியை ஏற்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இல்லையா?

சிறப்புக் குழந்தைகளுக்கும் விபத்தில் முடங்கிப்போனவங்களுக்கும் பிசியோதெரபி உள்ளிட்ட உரிய சிகிச்சைகளைக் கொடுக்கவும், அவர்களின் குடும்பத்தினருக்கு கவுன்சலிங் கொடுக்கவும் எல்லா கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியிலும் தனிப்பிரிவு அமைக்கப்படணும். தங்களோட பிள்ளை, சிறப்புக் குழந்தையா இருந்தாலோ, எதிர்பாராத விபத்தால முடங்கிட்டாலோ அதை மனதளவுல ஏத்துக்கவே பெரும்பாலான பெற்றோருக்கு ரொம்ப காலம் தேவைப்படும். அந்த நேரங்கள்ல அவங்களுக்கு மன தைரியமும், அடுத்தகட்ட நகர்வுக்கான நம்பிக்கையைக் கொடுக்கவும் இதுபோன்ற கவுன்சலிங் மையங்கள் கைகொடுக்கும்.

விபத்துக்கு முன்னர் நூருல்
விபத்துக்கு முன்னர் நூருல்

மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகள்ல மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறப்புக் குழந்தைகளுக்குமான வசதிகள் முறையா கிடைக்குது. ஆனா, இதுபோன்ற பிரிவினர் நம்ம நாட்டுல அதிகளவுல இருந்தாலும், இவங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் மிகக் குறைவான அளவுலதான் செய்யப்படுது. இந்தச் சிக்கல்களையெல்லாம் சரிசெஞ்சு, மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்புக் குழந்தைகளுக்கும் தற்போதைய தமிழக முதல்வர் நம்பிக்கையை ஏற்படுத்துவார்னு நம்புறேன்" என்று அக்கறையுடன் முடித்தார் கமீலா.