சினிமா
Published:Updated:

கணம் - சினிமா விமர்சனம்

கணம் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கணம் - சினிமா விமர்சனம்

90களின் இறுதியை குட்டிக் குட்டிப் பொருள்கள் தொடங்கி பிரமாண்ட பேனர் வரை எல்லாவற்றிலும் காண்பித்து நம்மை நாஸ்டாலஜியாவிற்குள் தள்ளுகிறார்

உணர்ச்சிகளுக்குப் பெரிதாய் இடம் கொடுத்திடாத அறிவியல் புனைவில் அம்மா சென்டிமென்ட் கலந்து நெகிழ வைத்தால் அதுதான் ‘கணம்.'

இசைக்கலைஞனாக சாதிக்கவேண்டும் என்பது சர்வானந்தின் விருப்பம். ஆனால் கூட்டத்தைக் கண்டாலே தடுமாறும் அவருக்கு அதன் காரணமாகவே வாய்ப்புகளும் வர மறுக்கின்றன. ‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட அம்மாதான் தன் ஒரே தார்மிக ஆதரவு, அவரின் துணை இல்லாததால்தான் சாதிக்க முடியவில்லை' என நினைத்து நினைத்து மருகும் அவருக்கு விஞ்ஞானியான நாசரின் அறிமுகம் கிடைக்கிறது. ‘இது உனக்கு இரண்டாம் வாய்ப்பு' என சர்வானந்த் தன் அம்மாவைச் சந்திக்க டைம் டிராவலுக்கு நாசர் ஏற்பாடு செய்ய, உடன் இணைகிறார்கள் சர்வானந்தின் நண்பர்களான சதீஷும் ரமேஷ் திலக்கும். இவர்கள் மூவரும் வெற்றிகரமாய் காலப்பயணம் மேற்கொண்டு தங்கள் கடந்த காலத்தை மாற்றினார்களா, நாசருக்கு இவர்களை இப்படி அனுப்புவதால் என்ன பயன் என்பதையெல்லாம் நட்பு, பாசம், கண்ணீர் கலந்து சொல்கிறது மீதிக்கதை.

கணம் - சினிமா விமர்சனம்

சர்வானந்த் - ஏக்கம், ஆதங்கம், நேசம் என கதைக்குத் தேவையான உணர்வுகளை சரியாகக் கடத்தி ரசிக்க வைக்கிறார். ஒரு பெரிய இடைவெளிக்குப் பின் சதீஷ் தன் காமெடியால் சிரிக்க வைக்கிறார். துடுக்கும் மிடுக்குமாக ரமேஷ் திலக் பக்கா பொருத்தம். எளிதில் போரடித்துவிடக்கூடிய அறிவியல் தளத்தில் கதையை ஜாலியாய் நகர்த்திச் செல்வதில் மூவரின் பங்கும் முக்கியமானது. இவர்களின் ஜூனியர் வெர்ஷன்களாக வரும் ஜெய், நித்யா, ஹிதேஷ் ஆகியோரும் வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு நடித்து கவனிக்க வைக்கிறார்கள். ரிது வர்மாவுக்கு மட்டும் வழக்கமான ஹீரோயின் வேடம். நாசரும் க்ளிஷேவான சயின்டிஸ்ட்!

தாய்ப்பாசம் பேசும் படத்தின் ஆதாரமே பலமான அம்மா வேடம்தானே! முப்பது ஆண்டுகளுக்குப் பின் திரையில் தோன்றி நம்மையும் அன்பிற்காக ஏங்க வைக்கிறார் அம்மா அமலா. வாஞ்சையும் வெகுளித்தனமுமாய் இரண்டாம்பாதி நெடுக ஓடும் அவரின் தாலாட்டுதான் கதையின் ஜீவனே.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சதீஷ் குமாரின் கலை இயக்கம். 90களின் இறுதியை குட்டிக் குட்டிப் பொருள்கள் தொடங்கி பிரமாண்ட பேனர் வரை எல்லாவற்றிலும் காண்பித்து நம்மை நாஸ்டாலஜியாவிற்குள் தள்ளுகிறார். ஜேக்ஸ் பிஜோயின் அம்மா பாடல் நெகிழ்ச்சி. குழப்பமில்லாமல் சரியாய் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் கோத்திருக்கிறார் எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்.

கணம் - சினிமா விமர்சனம்

சயின்ஸ் பிக்‌ஷன் என்றாலே சாமானியர்கள் ரசிக்க முடியாத கதைக்களம் என்பதை உடைத்து, ‘யாராக இருந்தாலும் ஆதார உணர்வுகள் ஒன்றுதான்' என நிரூபித்து வெற்றி பெறுகிறார் அறிமுக இயக்குநர்ஸ்ரீ கார்த்திக். காமெடி, இடைவேளையில் ஒரு ட்விஸ்ட் என எல்லா ஏரியாக்களையும் சரியாகத் தொட்டிருக்கிறார்.

லாஜிக் உறுத்தல்கள் இல்லாமலில்லை. ஆனால் அதையும் தாண்டி நமக்குள் ஆழ உறைந்துபோன நினைவுகளையும் உணர்வுகளையும் கிளறி அழுத்தமான முயற்சியாக மாறுகிறது இந்த ‘கணம்.’