பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் சமீப காலமாகவே பயோபிக் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட `தலைவி' படத்தில் நடித்திருந்தார். பின் ஜான்சிராணியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `மணிகர்ணிகா' படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அரசியல் ஆளுமையான இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி `எமர்ஜென்சி' எனும் படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது பெங்காலி நாடகங்களில் நடித்துள்ள புகழ்பெற்ற நாடக நடிகையான பினோதினி தாஸியின் வாழ்க்கை கதையில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார்.

1862 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த பினோதினி தாஸி தனது 12 வயதிலிருந்தே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தனது அதீத நடிப்பு திறமையால் உலகம் முழுவதும் பிரபலமானார். ஆனால் 23வது வயதில் அவர் நடிப்பதை நிறுத்திக்கொண்டுள்ளார். நடிப்பு மட்டுமின்றி எழுதுவதிலும் ஆர்வம் கொண்ட வினோதினி தாஸி 1912 ஆம் ஆண்டு ‘அமர் கதா’ எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.
ஏராளமான நாடகங்களில் நடித்த இவரது வாழ்க்கை கதை தற்போது படமாக எடுக்கப்படவுள்ளது. இப்படத்தில் பினோதினி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார். பரிணிதா மர்தாணி போன்ற சிறந்த படங்களை இயக்கிய பிரதீப் சர்க்கார் இப்படத்தை இயக்கவுள்ளார். பினோதினி தாஸியின் பயோபிக்கை படமாக்க எடுக்க முனைந்த இயக்குநர் பிரதீப் சர்கார் முதலில் நடிகை வித்யா பாலனை தேர்வு செய்திருக்கிறார். ஆனால், கால்ஷீட் காரணமாக வித்யா பாலன் நடிக்க முடியாத காரணத்தினால் ஐஸ்வர்யா ராயிடம் கதையைச் சொல்லியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயும் இப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு வந்த நிலையில் கங்கனா ரணாவத் தற்போது இக்கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக பேசிய கங்கனா “நாடு போற்றும் பெருமை பெற்ற பினோதினி பயோபிக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் பிரதீப் சர்க்கார் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. இப்பொழுது அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.