
காதலானாலும், ஆபத்தில் சிக்கிக்கொண்ட பதற்றமானாலும் எல்லாவற்றுக்கும் ஆரம்பத்தில் இருந்து ஒரே ரியாக்ஷனையே தருகிறார் உதயநிதி.
ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார், ஏன் கொலை நடந்தது என்பதைத் தேடும் வழக்கமான த்ரில்லர் கதைதான் ‘கண்ணை நம்பாதே.'
உதயநிதி புதிதாக ஒரு வீட்டில் குடியேறுகிறார். ஏற்கெனவே அங்கு குடியிருக்கும் அறை நண்பரான பிரசன்னா மற்றும் இன்னொரு நண்பர் சதீஷுடன் ஒரு மதுபான விடுதிக்குச் செல்கிறார். டாஸ்மாக் வாசலில் கார் ஓட்ட முடியாமல் சிறு விபத்தில் சிக்கும் பூமிகாவை அவரது வீட்டில் விட்டுவிட்டுக் காரை எடுத்துவருகிறார். மறுநாள் காலையில் அந்த காரின் டிக்கியில் பூமிகாவின் பிணம். பூமிகாவைக் கொலை செய்தது யார், என்ன காரணம் என்பதை நம்பகத்தன்மையற்ற சம்பவங்கள் மூலம் தலையைச் சுற்றிக் காதைத் தொட்டுச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.

காதலானாலும், ஆபத்தில் சிக்கிக்கொண்ட பதற்றமானாலும் எல்லாவற்றுக்கும் ஆரம்பத்தில் இருந்து ஒரே ரியாக்ஷனையே தருகிறார் உதயநிதி. அவருக்கும் சேர்த்து எல்லா ஃபிரேம்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் பிரசன்னா. காந்த்தும் பூமிகாவும் வருவது சில காட்சிகள் என்றாலும் பரவாயில்லை ரக நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஹீரோயினாக ஆத்மிகா, பாவம் எதற்கென்றே தெரியாமல் சில காட்சிகள் வந்துபோகிறார். முதல் பத்து நிமிடங்கள் வந்துவிட்டுக் காணாமல்போகும் சதீஷும் காமெடி என்ற பெயரில் என்னென்னவோ முயற்சி செய்கிறார். ஆனால் அதைக் காமெடி என்று நம்பாதே என்று நம் ஆறாம் அறிவு சொல்கிறது.
பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே படமாக்கப்பட்டுள்ளன. அதற்கு, ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு ஓரளவிற்கே கைகொடுத்திருக்கிறது. படத்தொகுப்பில் சான் லோகேஷ் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். திரைக்கதை தொய்வடையும் இடங்களில் தன் பின்னணி இசையால் சரி செய்ய முயன்றிருக்கிறார் சிந்து குமார். இதில், ஒரு சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒரு பாக்கெட் நாவல் கதையைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர் மு.மாறன், அதற்குத் தகுந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைக்காதது பலவீனம். க்ரைம் த்ரில்லர் கதையில் ஒன்றிரண்டு லாஜிக் மீறல்கள் இருக்கலாம். ஆனால் எக்கச்சக்க லாஜிக் சொதப்பல்கள் கதையின் நம்பகத்தன்மையையே குலைத்துவிடுகின்றன. ‘நம்பாதே’ என்று தலைப்பு வைத்ததற்காக இப்படியா?
ஒரு த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றவர்கள் ‘கதையை நம்பாதே' என்று களமிறங்கியதுதான் பெரும் சிக்கல்.