கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“14 நாள்களில் படம் எடுத்து முடித்தேன்!”

கொன்றால் பாவம் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
கொன்றால் பாவம் படத்தில்...

நான் விழுப்புரத்துக்காரன். பிறந்தது வளர்ந்தது எல்லாம் விழுப்புரத்துல. அப்பா ஈ.பி-ல வேலை பார்த்தப்போ இறந்துட்டார். சின்னவயசுல அப்பாவைப் பறிகொடுத்த குடும்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தோம்.

`தமிழில் இது என் முதல் இன்டர்வியூ சார்..!' - உற்சாகம் வார்த்தைகளில் பீறிட கேள்விகளை எதிர்கொள்கிறார் தயாள் பத்மநாபன். கர்நாடகா கொண்டாடும் ஹிட் படங்களின் இயக்குநர். கன்னட சினிமாவில் 18 படங்களை இயக்கியிருக்கிறார். 8 படங்களைத் தயாரித்திருக்கிறார். 5 படங்களில் நடித்துமிருக்கிறார்.

2018-ல் இவர் இயக்கிய ‘ஆ கரால ராத்ரி' என்ற கன்னட ஹிட் த்ரில்லர் லாக்டௌனில் மொழிகள் கடந்து, மாநிலங்கள் கடந்து, ஓ.டி.டி-யில் ஹிட்டடித்து கர்நாடக அரசின் மாநில விருதுகளை வாரிக் குவித்தது. அதே படத்தைத் தமிழில் ‘கொன்றால் பாவம்' என்ற பெயரோடு ரீமேக் செய்துவிட்டு பிஸியாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறார். இயக்குநர் தயாள் பத்மநாபனுடன் பேசுவது நீண்ட நாள் நண்பரைச சந்திப்பது போன்று மனதுக்கு இதமானதாக இருக்கிறது.

தயாள் பத்மநாபன்
தயாள் பத்மநாபன்

‘‘நல்லா தமிழ் பேசுறீங்க... எந்த ஊர் சார் நீங்க?''

‘‘நான் விழுப்புரத்துக்காரன். பிறந்தது வளர்ந்தது எல்லாம் விழுப்புரத்துல. அப்பா ஈ.பி-ல வேலை பார்த்தப்போ இறந்துட்டார். சின்னவயசுல அப்பாவைப் பறிகொடுத்த குடும்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தோம். ஒரு துப்புரவுப்பணியாளரா தனக்குக் கிடைச்ச வேலையை வெச்சுதான் எங்க அம்மா என்னையும் என் அண்ணனையும் படிக்க வெச்சாங்க... அக்காவையும் கட்டிக் கொடுத்தாங்க. இப்ப நான் கன்னட சினிமாவுல பிசியான டைரக்டரா ஆகிட்டேன். அண்ணன் பேங்க் ஆஃப் பரோடாவுல சீனியர் மேனேஜரா இருக்கார். சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக்லதான் சிவில் இன்ஜினீயரிங் முடிச்சேன். எனக்குக் கதை எழுதுறதுன்னா அவ்ளோ புடிக்கும். ஆனந்த விகடன்ல என் கதை வெளிவந்திருக்கு சார். ஜூனியர் விகடன்லகூட க்ரைம் சம்பவம் ஒரு ரைட்-அப் எழுதியிருக்கேன்.''

‘‘மகிழ்ச்சி சார்... தமிழ்நாட்டுல பிறந்திருக்கீங்க... படிச்சிருக்கீங்க... அப்புறம் எப்படி கர்நாடக சினிமா இன்டஸ்ட்ரில சாதிச்சீங்க..?''

‘‘ஒரு ரீவைண்ட் போகலாம் சார்...சிதம்பரத்துல டிப்ளோமா முடிச்ச கையோடு 18 வயசுல பெங்களூரு வந்த ஆளு சார் நான். 1988-ல மத்திய அரசு நிறுவனமான இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ்ல லேப் அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். எனக்கு சினிமாக் கனவு சின்ன வயசுல இருந்தே இருந்தது. நடிகனா ஆகணும்கிறதுதான் என் லட்சியம். என்னை அரசாங்க வேலைல உட்கார வச்சுப் பார்க்கணும்னு ஆசைப்பட்ட அம்மாவுக்காக 12 வருஷம் மத்திய அரசு வேலைல இருந்துட்டு அப்புறமா நடிக்க வரலாம்னு முடிவெடுத்தேன். நடுவுல இங்கே என்கூட வேலை பார்த்த மீனாவைக் கரம்பிடித்து குடும்பஸ்தனாவும் ஆனேன். மிடில் க்ளாஸ் வாழ்க்கைக்கும் பழக்கப்பட்டுட்டேன். அப்படியே வருஷங்கள் ஓடுச்சு. என் மனைவிதான், ‘உங்க மனசு எதைத் தேடுதோ அதையே முழு மனசோட செய்யுங்க... உங்களால சினிமால சாதிக்க முடியும்!'னு அனுப்பி வெச்சாங்க.

“14 நாள்களில் படம் எடுத்து முடித்தேன்!”

2003-ல வேலையை தைரியமா விட்டுட்டேன். அப்போ பாப்புலரா ஓடிட்டு இருந்த ‘மர்ம தேசம்’ சீரியல் ரொம்பப் பிடிச்சிருந்தது. அதன் இயக்குநர் நாகா சாரிடம் போய் நடிக்க வாய்ப்பு கேட்டேன். ‘நீ எங்கிட்ட ரைட்டரா இருந்து கதை எழுது. பிறகு நடிப்பைப் பார்க்கலாம்'னு மடை மாற்றி எழுத வெச்சார். எனக்கு ரொம்ப ஆச்சர்யம். அவரோடு ‘மர்ம தேசம்’ல பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது. நிறைய கத்துக்கொடுத்தார். அப்போதான் ‘மர்மதேசம் ஸ்ரீ' என்ற பெயரில் அவர் இயக்கிய ஹிஸ்டாரிக்கல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் தொடரில் எழுதவும் உதவி இயக்குநராகவும் வாய்ப்பு கொடுத்தார். ஆனா அது வெளிவரலை. ‘மர்மதேசம்’ல ஹீரோவா நடிச்ச சேத்தன் மூலமா எனக்குக் கன்னட சினிமாவின் தொடர்புகள் கிடைச்சுது. நிறைய கன்னடப் படங்களில் கோஸ்ட் ரைட்டரா பணி செய்தேன். நடிகர் உபேந்திரா சார் என்னை H2O போன்ற படங்களில் தமிழ் போர்ஷனுக்குக் கதை எழுத வைத்தார். அப்படியே டேக்-ஆஃப் ஆகி மதன் மல்லு என்ற நண்பரின் மூலம் ஈஸியா டைரக்டராவும் அறிமுகம் ஆகிட்டேன். கன்னட சினிமா என்னை ஏத்துக்கிச்சு. என்னால் ஸ்டார்களுக்குக் கதை பண்ண முடியாது. ஆனால், கொடுத்த பட்ஜெட்டில் குறைந்த நாள்களுக்குள்ள படத்தை முடிச்சுக் கொடுக்குறேன்கிற பெயர் எனக்குக் கிடைச்சதாலும், பெரிய ஹீரோக்களைச் சுற்றாமல், கதைகளை மையப்படுத்தி என் சினிமாக்கள் இருந்ததாலும், கொஞ்சம் நாடகம், சிறுகதை என கன்னட இலக்கியங்களை மையப்படுத்திய கதைகளா இருந்ததாலும் கன்னட சினிமா கொண்டாடுற ஆளா மாறிட்டேன். தயாரிப்பாளரா ஆனதோடு நடிகராவும் வாய்ப்பு கிடைக்குறப்போ நடிக்கிறேன். இரண்டு ஸ்டேட் அவார்டு, ஒரு நேஷனல் அங்கீகாரம் இதான் சார் என் கதைச்சுருக்கம்!''

“14 நாள்களில் படம் எடுத்து முடித்தேன்!”

‘‘தமிழில் அறிமுகமாக இவ்ளோ கால தாமதம் ஏன்?’’

‘‘கொரோனாவால கொஞ்சம் தாமதம் ஆகிருச்சு. மத்தபடி ரொம்ப நாளாவே என் தாய்மொழில படம் இயக்க நேரம் பார்த்திட்டே இருந்தேன். ‘ஆ கரால ராத்ரி' தந்த வரவேற்பு ரொம்பவே சந்தோஷத்தைக் கொடுத்துச்சு. தமிழில் வந்தா ஸ்டார்களுக்குப் பண்ணாமல் கதையம்சம் உள்ள படங்களைக் கொடுக்கணும்னு நேரம் பார்த்திட்டு இருந்தேன். ‘கொன்றால் பாவம்' மூலம் லேட்டா நான் வந்தாலும் எனக்கான ஓர் இடம் தமிழில் கிடைக்கும்னு நம்புறேன். அடுத்த படம் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனை’யும் ஆஹாவுக்காகத் தமிழில் எடுத்து முடிச்சுட்டேன். அடுத்தடுத்து இரண்டு படங்களோடு தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கேன். என்னை வாழ்த்துங்க சார்!''

‘‘ஏற்கெனவே ஹிட்டடித்த த்ரில்லர் ‘ஆ கரால ராத்ரி’. தமிழ்நாட்டில் ரொம்பப் பேர் பார்த்திருப்பாங்க. அப்புறம் ஏன் தமிழில் ரீமேக் பண்ணுறீங்க..?''

‘‘அவினாஷ் ஷெட்டிங்கிற என் கன்னட நண்பர்தான் இந்த நாடக வடிவிலான கன்னட இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவருக்கு முன்பே என் குடும்ப நண்பர் பாவண்ணன், கன்னட இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். எனக்குக் கன்னடம் எழுதப்படிக்கத் தெரியாதென்றாலும் நன்கு பேசுவேன். நண்பர்களை வாசிக்கச் சொல்லிக் கதைகள் கேட்பேன். கன்னட இலக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் ஆர்வம் எனக்கு உண்டு. எனக்கு அதன் மையக்கருவும், அதை வெவ்வேறு கலாசாரத்தோடு கொடுத்த விதமும் பிடித்திருந்தது. என்னைப் பொறுத்தவரை நல்ல இலக்கியத்தை இன்னொரு மொழியிலிருந்து கொண்டு வந்து கொடுக்கலாம். ‘ஆ கரால ராத்ரி'யை நான் திரை இலக்கியமாகவே பார்க்கிறேன். தமிழுக்காக நிறைய வாசித்து, நம் நாட்டார் வழக்குகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து கவனத்தோடு சினிமாவாகப் பண்ணியிருக்கிறேன். நிச்சயம் ‘ஆ கரால ராத்ரி' பார்த்தவர்களுக்கும் புது அனுபவத்தைக் கொடுக்கும் இந்தப் படம்.''

“14 நாள்களில் படம் எடுத்து முடித்தேன்!”

‘‘இப்பதான் ஷூட் ஆரம்பிக்கிறதா அறிவிச்சீங்க. அதுக்குள்ள முடிச்சிட்டீங்களே..?''

‘‘இதைச் சொல்லலாமா, வேணாமான்னு தெரியலையே. நான் பக்காவா திட்டமிடலோடு படம் இயக்கும் ஆள். என்னுடைய தயாரிப்புல கன்னடத்துல 13 நாள்ல இந்தப் படத்தை எடுத்தேன். தெலுங்குல அல்லு அரவிந்த் சார் தயாரிப்புல 17 நாள்ல முடிச்சேன். தமிழ்ல 14 நாள்ல ஷூட்டிங் முடிச்சுட்டேன். மிகக்குறைந்த நாள்களில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் குவாலிட்டில காம்ப்ரமைஸ் செய்ய மாட்டேன். என் படங்கள் பார்த்தவங்களுக்கும், என்னுடைய தயாரிப்பாளர்களுக்கும் என் வேகம் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும்னு உறுதியா நம்புறேன். ஒரு ஷாட்கூட கூடக்குறைய இருக்காது. அதனாலதான் அல்லு அரவிந்த் சார் அடுத்த பட வாய்ப்பையும் உடனே கொடுத்திட்டார்!''

‘‘கொன்றால் பாவம் படத்துக்குள்ள வரலட்சுமி-சந்தோஷ் பிரதாப்ல ஆரம்பிச்சு மொத்த டீம் எப்படி வந்தாங்க..?''

‘‘எனக்கு பெரிய ஸ்டார் தேவையில்லை. ஆனால், நல்ல சவாலா நடிக்கிற ஆட்கள் தேவைப்பட்டாங்க. வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப்பும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. நார்மலா கிராமத்து அப்பாவி அப்பான்னா தம்பி ராமையாவை நடிக்க வைப்பாங்க. நான் ‘மாநகரம்’ பார்த்துட்டு சார்லி சாரை ஃபிக்ஸ் பண்ணிட்டேன். அதேபோல அம்மா கேரக்டருக்கு சரண்யா பொன்வண்ணன், ராதிகா சரத்குமார்னு எல்லோரும் சொன்னப்போ என் சாய்ஸ் ஈஸ்வரி ராவா இருந்தாங்க. செழியன் சாரோட உலக சினிமா அறிவும் ஒளிப்பதிவு நேர்த்தியும் பிடிக்கும்கிறதால அவர் ஒளிப்பதிவு செஞ்சிருக்கார். சாம் சி.எஸ் மியூசிக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நானே சிச்சுவேஷனுக்கு இரண்டு பாட்டு எழுதியிருக்கேன். ப்ரீத்தி மோகன் என்ற பெண் எடிட்டர் வேலை செஞ்சிருக்காங்க. மனோஜ் குமார் - பிரதாப் என்ற இருவர் பெங்களூருல பி.பி.ஓ கம்பெனி வெச்சிருக்காங்க. தயாரிப்பாளர்களா அவங்களுக்கு இது முதல் படம். நான் இணைத் தயாரிப்பாளரா இருக்கேன்.''

“14 நாள்களில் படம் எடுத்து முடித்தேன்!”

‘‘ஒரு தமிழரான நீங்கள் கர்நாடகாவுல வியாபார ரீதியா பிரச்னைகளைச் சந்திக்கலையா..?''

‘‘என்னை கன்னடிகாவா மக்கள் ஏத்துக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன். என்னோட படங்கள் கன்னட இலக்கியங்களைப் பிரதிபலிக்குது. இதுவரை என்னைத் தமிழனா அவங்க ஒருநாளும் பாகுபாட்டோட நினைச்சதில்லை. நிறைய கன்னட இலக்கியங்களைக் கன்னட நண்பர்கள் மூலமா தெரிஞ்சுக்குறேன். ‘ரங்கநாயகி'ங்கிற என் படத்தை நான் கன்னடத்துல நாவலாத்தான் என் கன்னட உதவியாளர் மூலம் எழுதினேன். இப்போ அந்த நாவல் கர்நாடகாவின் அனைத்து நூலகங்களிலும் இருக்கு. 18 வயசுல இருந்து பெங்களூருல இருக்கேன். பேசும்போது, ‘நம்ம நாடு'ன்னுதான் ஆரம்பிக்கிறேன். எனக்குச் சோறு போட்ட ஊர் பெங்களூரு. அதுமட்டுமல்லாம, கர்நாடக மக்களுக்கான பிரச்னைகளுக்கு முதல் ஆளா குரல் கொடுக்கிறேன். சமீபத்துலகூட மல்ட்டிபிளக்ஸ்ல தியேட்டர் கட்டணத்துக்கு எதிராக பொதுநல வழக்கு போட்டு டிக்கெட் விலையைக் குறைச்சேன். மக்கள் அதனால என்னை அவங்கள்ல ஒருத்தராத்தான் என்னைப் பார்க்குறாங்க. அதல்லாம பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளரா கலந்துக்கிட்டு மூலை முடுக்கெல்லாம் கர்நாடக வீடுகளுக்குள்ள போய் சேர்ந்துட்டேன்.''

“14 நாள்களில் படம் எடுத்து முடித்தேன்!”

‘‘குரங்கு பொம்மை படத்தை அங்கே ‘ஒம்பதனே திக்கு' என்ற பெயரில் ரீமேக் பண்ணுனீங்க... சமீபத்துல எந்தத் தமிழ்ப்படத்தை ரீமேக் பண்ணினால் நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க? தமிழில் இனி நிறைய வாய்ப்புகள் வந்தால் இங்கேயே செட்டில் ஆகிடுவீங்களா?''

‘‘ஜெய்பீம்ல ஆரம்பிச்சு பொம்மை நாயகி வரை நிறைய இருக்கு சார். ஆனால், வியாபார ரீதியாவும் பல விஷயங்களை யோசிச்சே ஆகணும். தமிழில் இனி நிறைய படங்கள் பண்ணுவேன். அதையேகூட கன்னடத்துக்கும் கொண்டு போக வாய்ப்பு இருக்கு. எல்லாமே கமர்ஷியலாகவும் ஹிட் ஆகணும். என்னுடைய ஸ்டைலான ஆர்ட் ஃபார்ம்லயும் அது இருக்கணும். எல்லைகள் தாண்டி படங்கள் பேசப்பட நல்ல கதை இருந்தால் போதும். அதுவே உங்களை அழைச்சிட்டுப்போகும். அப்படிப்பட்ட கதைகள் என்னிடம் இருக்கு. பெங்களூருல வீடு இருந்தாலும் மனைவி அங்கே இருக்காங்க. சென்னையிலும் சிங்கிள் பெட்ரூமோட வீடு வாங்கிட்டேன். என் மகனும் நானும் இங்கேதான் இருக்கோம். அவர் கௌதம் வாசுதேவ் மேனன்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா இருக்கார். என் மகளை சென்னைலதான் கட்டிக் கொடுத்திருக்கேன்.''

“14 நாள்களில் படம் எடுத்து முடித்தேன்!”

‘‘தமிழில் யார்லாம் உங்க ஃபேவரைட்? சமீபத்தில் உங்களை யார் ரொம்ப ஈர்த்தாங்க?''

‘‘நான் ஒரு தமிழ்ப் படத்தையும் விடுறதில்லை. எனக்கு ஸ்ரீதர் படங்கள்னா அவ்ளோ பிடிக்கும். அவரோட ஸ்டைல் இல்லாம என் படங்கள் இருக்காது. நாகா சார் தாண்டி பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன்னு நிறைய பேர் படங்களை அவ்ளோ ரசிச்சுப் பார்ப்பேன். இப்போ ராம் படங்கள் அவ்ளோ பிடிக்கும். அவரைப்போல சுதந்திரமான படங்களை இயக்கவே ஆசை. வெற்றிமாறன், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் பிடிக்கும். நடிகர்களில் கமல், தனுஷ், விஜய் சேதுபதியை ரொம்பப் பிடிக்கும்!''

“14 நாள்களில் படம் எடுத்து முடித்தேன்!”

‘‘ஸ்டார்களுக்குப் படம் பண்ண மாட்டேன்னு சொன்னீங்க... ஒருவேளை உங்க ஸ்டைல் பிடிச்சு ரஜினியோ கமலோ படம் பண்ணக் கூப்பிட்டா?''

‘‘என் கதைகளுக்கு அவங்க நடிச்சா பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுச்சுனா நிச்சயம் அவங்களை அப்ரோச் பண்ணுவேன். அவங்க இமேஜை வெச்சு என்னால ஒரு கதை பண்ண முடியுமான்னா, முடியாது. ஆனால், அப்படி ஒண்ணு நடந்தா வித்தியாசமான என் ஸ்டைல் கதைகளில் வித்தியாசமான கமல், ரஜினியை நீங்கள் பார்க்கலாம்!''