சினிமா
Published:Updated:

“வியாபாரமான அரசியல் வேண்டாம்!”

கருணாஸ் - ரித்விகா
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாஸ் - ரித்விகா

பாலாண்ணே, ‘இவன் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். அவனை காமெடியனா அறிமுகப்படுத்திட்டேன்’னு சொன்னார்.

சினிமாவில் 20-ம் ஆண்டைக் கொண்டாடுகிறார் கருணாஸ். இடையே அரசியல் பக்கம் ஒதுங்கியவர், இப்போது அதை ஓரங்கட்டி வைத்துவிட்டு மீண்டும் சினிமாவில் முழுக்கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இப்போது கதை நாயகனாக ‘ஆதார்’ தவிர, கார்த்தி, சசிகுமார், விஷ்ணுவிஷால் எனப் பலரின் படங்களில் நடித்துவரும் கருணாஸிடம் பேசினேன்.

“வியாபாரமான அரசியல் வேண்டாம்!”

``அரசியலை விட்டு ஒதுங்கி.. இப்ப முழு நேர நடிகராகிட்டீங்கபோல?’’

‘‘அரசியல்னாலே மக்கள் சேவைதான். ஆனா, அது வியாபாரம் ஆகிடுச்சே! அப்படி இல்லைன்னு டி.வி விவாதத்துலவேணா பேசலாம். ஆனா, அரசியல் இப்ப சேவையா இல்லை என்பதே உண்மை. என் குணாதிசயத்துக்கும் அது சரிப்பட்டு வரலைன்னு அனுபவத்துல புரிஞ்சுக்கிட்டேன். அதனாலேயே நடிப்பில கவனம் செலுத்துறேன். நான் நடிக்க வந்த முதல் பத்தாண்டுகள்ல நிறைய படங்கள் பண்ணியிருப்பேன். அதன் பிறகு கொஞ்ச கொஞ்சமா படங்களைக் குறைச்சேன். போன வருஷம்தான் ‘சூரரைப் போற்று’. ‘சங்கத் தலைவன்’னு ரெண்டு படங்கள் பண்ணினேன். இப்ப ‘ஆதார்’, ‘விருமன்’னு நிறைய படங்கள் நடிச்சிட்டிருக்கேன். இப்ப எனக்குப் பிடிச்ச மாதிரி நடிக்கறது, பாடுறது, இசையமைக்கறதுன்னு பயணிக்கறது மனசுக்கும் சந்தோஷமா இருக்கு.

சமீபத்துல ‘விருமன்’ படப்பிடிப்பில சூரி என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார். ‘அண்ணே, சினிமாவுல இருந்து கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தாலே எல்லாரும் மறந்திடுவாங்க. அப்படிப்பட்ட படவுலகில் இப்ப நீங்க மறுபடியும் நடிக்க வந்ததும், உங்களுக்கு இவ்வளவு பட வாய்ப்புகள் குவியுது. எல்லாருமே உங்களை விரும்பிக் கூப்பிடுறது ஆச்சரியமா இருக்கு. ‘கற்றது தமிழ்’ மாதிரி நல்ல படங்கள் நிறைய தயாரிச்சிருக்கீங்க. விநியோகஸ்தரா இருந்திருக்கீங்க. சம்பாதிச்ச பணத்தை நீங்க இழந்திருக்கறதாலதான் மறுபடியும் இந்த சினிமா உங்களைத் தேடி வந்திருக்குண்ணே’ன்னு ஆச்சரியமா சொன்னார். எனக்கும் அதான் தோணுச்சு.”

``நீங்க நடிக்க வந்து 20 வருஷமாச்சு. இந்தப் பயணம் எப்படி இருக்கு?’’

‘‘2001-ல ‘நந்தா’ வந்துச்சு. அதன்பிறகு பத்து வருஷத்துக்குள்ள 110 படங்கள் பண்ணியிருப்பேன். இதுவரை 138 படங்கள் பண்ணியிருப்பேன். இடையே வேற வேற காரணங்களால சினிமாவை விட்டு வெளியே போயிட்டேன். சொந்தமா தயாரிச்சதால கடனும் ஆகிடுச்சு. அதையும் கடந்து வந்தேன். சினிமாவுல புதுசாவும் நிறைய ஆட்கள் வந்தாங்க. அதனால பழைய ஆட்களுக்கு வாய்ப்பு குறைவாகத்தான் வரும். அந்த பிரேக்கையும் ஏத்துக்கணும். ‘வில்லன்’, ‘அட்டகாசம்’, ‘நந்தா’, ‘டார்லிங்’னு எதை எடுத்தாலும் சீக்குவென்ஸ் காமெடிதான் எனக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கும். காரணம், அந்தச் சூழலே பாதி நகைச்சுவையை உருவாக்கியிருக்கும்.

ஆனாலும் நான் வெறும் நகைச்சுவை நடிகன் கிடையாது. ஏன்னா, ‘பிதாமகன்’ ஸ்பாட்ல சூர்யா, லைலான்னு எல்லார் முன்னாடியும் என்னை பாலாண்ணே, ‘இவன் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். அவனை காமெடியனா அறிமுகப்படுத்திட்டேன்’னு சொன்னார். அவர் சொன்னதை நிரூபிக்கிறது மாதிரியான கேரக்டர்களை அடுத்தடுத்து பண்ணப் போறேன். மணிவண்ணன் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லா கேரக்டர்களும் அவர் பண்ணியிருக்கார். அவரோட இடம் இன்னும் அப்படியே இருக்குது. அதை நிரப்ப விரும்பறேன். இந்த இருபது வருஷ அனுபவத்துல ‘நடிகன் சொந்தப்படம் எடுக்கக் கூடாது’ன்னு கத்துக்கிட்டேன். ‘நடிகனுக்கு நடிப்பைத் தவிர வேற சிந்தனைகளும் இருக்கக்கூடாது’ன்னு கத்துக்கிட்டேன்.”

“வியாபாரமான அரசியல் வேண்டாம்!”

`` ‘ஆதார்’ல ஹீரோவாகியிருக்கீங்க... எப்படி வந்திருக்கு படம்?’’

‘‘எங்க வீட்டுல என் மனைவிக்கு, என் மகனுக்கு எப்பவும் நான் ஹீரோதான். அதுல எந்த மாற்றமும் கிடையாது. ஆனா, படத்தைப் பொறுத்தவரைக்கும் எப்பவுமே கதைதான் ஹீரோ. ‘ஆதார்’, அடிப்படை மக்களுடைய பிரச்னைகளைப் பேசக்கூடிய படம். குறிப்பா மலைவாழ் மக்களுடைய பிரச்னைகளைப் பேசுது. ‘ஜெய்பீம்’ போல அழுத்தமான கதை. விஷுவலாகவும் நல்லா வந்திருக்கு. மலைக்கிராமத்துல இருந்து சென்னைக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வரும் ஒரு கணவன்-மனைவியைச் சுத்தி நடக்கற விஷயங்கள்தான் கதை. அருண்பாண்டியன் சார், ஆனந்த்பாபு, ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர், இனியா, ரித்விகா, தீபன்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ படங்களை இயக்கிய ராம்நாத் பழனிக்குமார் இதை இயக்கியிருக்கார். 17 வருடங்களாக ரைட்டராக என்னுடன் இருந்தவர் ராம்நாத். சினிமாவுல நான் சம்பாதிச்ச சொத்துன்னு அவரைச் சொல்வேன். இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். காந்த் தேவாவும், பால்ஜேவும் இசையமைச்சிருக்காங்க. சிம்பொனி பேண்ட் பின்னணி இசை அமைக்கிறாங்க. இந்தப் படம் எளிய மனிதர்களின் வலிகளையும், வேதனைகளையும் இயல்பும் யதார்த்தமுமா பேசும். ‘ஆதார்’ல அரசியல் இருக்கு. ஆனா, அது உலக அரசியல்.”

`` ‘சங்கத்தமிழன்’ல கம்யூனிசம் பேசியிருப்பீங்க... ஆனா, நிஜத்துல ‘ஜாதிப் பெருமை பேசுறவர்’னு பெயர் வாங்கியிருங்கீங்களே?’’

‘‘நான் வெளிப்படையா ஒரு விஷயம் சொல்றேன். இந்தச் சமூகத்துல காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அண்ணா, ராஜாஜின்னு தேசியத் தலைவர்கள் யாரைவேணாலும் எடுத்துக்குங்க. அவங்கள பேசினாலோ அல்லது வணங்கினாலோ யார் ஒருவருக்கும் ஜாதி சாயம் பூசினது கிடையாது. ஆனா, பசும்பொன் முத்துராமலிங்கரை பத்திப் பேசும்போது மட்டும் ஜாதி சாயம் பூசப்படுது. மக்களைப் பாகுபாடு இல்லாமல் பார்த்த மகான்கள் எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்களோட தியாகங்களை அடுத்த தலைமுறையினரும் மதிக்கணும்னு நினைக்கறேன். அப்படி நினைவுபடுத்திப் பேசும்போது நான் பெருமை பேசுவதாகவும், ஜாதியம் பேசுறதாகவும் சொல்றாங்க. என்னுடைய புலிப்படை அமைப்பை மாணவர்களைப் படிக்க வைக்க உதவும் அறக்கட்டளையாகத்தான் ஆரம்பிச்சேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது நிறைய சேவைகள் செய்தேன். அம்மா எனக்கு அந்தப் பதவியைக் கொடுத்தாங்க. நான் நல்ல பெயரும் வாங்கினேன். நான் எம்.எல்.ஏ-வாக இருந்த காலங்கள்ல எந்த முறைகேடும் பண்ணலை. யார்கிட்டேயும் வேலை வாங்கித் தர்றேன்னு சொல்லியும் ஏமாத்தினதில்ல. முதியோர் ஓய்வூதியம் வாங்கிக் கொடுக்கறதுலகூட கமிஷன் பார்க்கற அரசு அதிகாரிகளைச் சந்திச்சிருக்கேன். அதெல்லாம் இருக்கக் கூடாதுன்னு நினைக்கறேன். இயலாதவர்களுக்கு என்னால இயன்றதைச் செய்யணும்னு நினைக்கறேன்.’’

``கார்த்தியோட ‘விருமன்’ல என்ன பண்ணியிருக்கீங்க?’’

“பாலுன்னு ஒரு அழுத்தமான ரோல். ஹீரோவுக்குத் தாய்மாமனா பண்ணியிருக்கேன். பிரகாஷ்ராஜ் சார், ராஜ்கிரண் சாரோட நடிச்சிருக்கேன். இந்தப் படத்துல நான் கமிட் ஆகுறதுக்கு முன்னாடி என் தோட்டத்துல வெட்டியா உட்காந்து ஆடு மாடு மேய்ச்சிட்டு இருந்தேன். ‘மொத்தமா ஒரு முப்பது நாள்கள் வேண்டும். தாடி வச்சிருக்கீங்களா?’ன்னு கேட்டாங்க. ஆமான்னதும் கூப்பிட்டாங்க. கதையே பாலுங்கற கேரக்டர்ல தொடங்கி, பாலுங்கற கேரக்டர்லதான் முடியுது. அப்படி ஒரு அழுத்தமான ரோல் அமைஞ்சது சந்தோஷமா இருக்கு.’’