குழந்தையை `சிங்கிள் ஃபாதராக' வளர்க்கப் போராடும் ஒரு தந்தையின் பாசமும், அதனால் அவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுமே இந்த `டாடா' (Dada).
பொறியியல் நான்காம் ஆண்டு படிக்கும் கவினும் அபர்ணா தாஸும் காதலிக்கிறார்கள். இறுதி செமஸ்டருக்கு முன்பாக, அபர்ணா தாஸ் கருவுற்றிருப்பது தெரிய வருகிறது. இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க, கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்பே தனிக்குடித்தனம் செல்கிறார்கள். வறுமை, அக்கறையும் பொறுப்புமில்லாத கணவருடன் ஏற்படும் சண்டைகள் எனப் பல இடர்பாடுகள் தாண்டி பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அபர்ணா தாஸ். சமய சூழ்நிலைகளால் இந்த ஜோடி பிரிய, பிறந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுவதுமாக கவின் தலையில் விழுகிறது. இதனால் அவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், இறுதியில் நிகழும் ஓர் உணர்ச்சிகரமான தருணம் போன்றவற்றை, நவுயுக இளைஞர்களுக்கான திரைமொழியில், கலகலப்பும் எமோஷனும் கலந்துகட்டி சுவாரஸ்யமான படமாகக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு.
மொத்த படமுமே கவினின் தோள்களிலேயே பயணிக்கிறது. அந்தப் பணியை அசராமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். கல்லூரி இளைஞராகப் பொறுப்பற்றத்தனத்தையும், தந்தை பொறுப்பு தரும் பொறுமையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில மாஸ் காட்சிகளிலும், அட்வைஸ் காட்சிகளிலும் உடல்மொழியால் நடிகர் விஜய்யை நினைவூட்டுகிறார். கவினுடன் அபர்ணா தாஸும் நடிப்பில் சம பலத்துடன் மோதுகிறார். கவினுடனான காதலிலும், அவரின் பொறுப்பற்றத்தனத்துடன் போராடும் இடங்களிலும், தன் கோபத்தையும், ஆற்றாமையை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், இறுதிக்காட்சிகளிலும் தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அதேநேரம், இறுதிக்காட்சியைத் தவிர்த்து, இரண்டாம் பாதியில், அபர்ணா தாஸ் கதாபாத்திரத்தின் முக்கியத்துவமானது, 'கதாநாயகனின்' காட்சிகளால் மறைந்து போகிறது.
கவினின் நண்பர்களாக வரும் ஹரீஷ், பிரதீப் ஆண்டனி, விடிவி கணேஷ் ஆகியோர், கவினுக்கு உறுதுணையாகவும், ரசிக்கும் படியாகவும் வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஹரீஷின் பாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் தவிர்த்து, பாக்யராஜ், ஐஸ்வர்யா போன்ற சீனியர்களை இன்னும் கூட உபயோகித்திருக்கலாம். அதிகப்பிரசங்கித்தனம், அதிமேதாவித்தனம் எனச் சமகால குழந்தை நட்சத்திர கதாபாத்திரங்களுக்கான இலக்கணங்களை உடைக்கும் விதமாக, கவினின் மகன் கதாபாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் இளன் அழகாக, எதார்த்தமாகப் பொருந்திப் போயிருக்கிறார்.
முதற்பாதியில், விடலைத்தனமான இளைஞரிலிருந்து பொறுப்புள்ள தந்தையாக கவின் மாறுகிறார். ஒரு சின்ன ஃலைப் ட்ராவல் போல படமாக்கப்பட்டிருக்கும் இதைப் பிசிறுத்தட்டாமல் தன் சிறப்பான நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார் கவின். கல்லூரி வாழ்க்கை, திடீர் குடும்பப் பொறுப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான சண்டைகள் என வெவ்வேறு தளங்களில் பயணிக்க வேண்டிய காட்சிகள் அடுக்கடுக்காக வருகின்றன. ஆனால், அந்தக் காட்சிகள் அனைத்தையும் பார்வையாளர்களோடு ஒன்ற வைக்கும் விதத்தில் சுவாரஸ்யமாக எழுதி, படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
"உங்களுக்கு எல்லாம் உங்களால நாங்க நல்லாயிருக்கணும், உங்களைவிட நல்லாயிருக்கக்கூடாது. அப்படித்தானே?" என்பது போன்ற வசனங்கள் தியேட்டர் மெட்டீரியல்.
வாழ்நாளில் எப்போது அழுதிடாத கவின், முதன் முதலாகக் கண் கலங்கும் இடம், கவினுக்கும் அவரது மகனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள், அங்கிள் என்று அழைக்கும் தன் பேரனிடம் பாக்யராஜ் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இடம், உணர்வுகளின் குவியலாக வரும் அந்த இறுதிக்காட்சி எனப் பல நல்ல எமோஷனல் தருணங்களை ஓவர்டோஸ் இல்லாமல் மிக இயல்பாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். அந்த இயல்பான ட்ரீட்மென்ட்டே அந்தக் காட்சிகளை நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கின்றன.
முதற்பாதியில் கட்டமைக்கப்பட்ட ஓர் இறுக்கமும், காட்சிகளின் ஆழமும் இரண்டாம் பாதியில் காணாமல் போகின்றன. எளிதில் யூகிக்கக் கூடிய காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள், வழக்கமான அலுவலக காட்சிகள், ஹிரோவுக்கான மாஸ் காட்சிகள் என இரண்டாம் பாதியில் இயக்குநரின் பிடி சற்றே தளர்கிறது. அதேநேரம், அழகான சில எமோஷனல் தருணங்களுக்குத் தொந்தரவு தராமல் வரும் டைமிங் காமெடிகளும், காமெடி கதாபாத்திரங்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன.
அதேபோல கவினின் கதாபாத்திரத்தில் ஓர் ஆண் மையவாத பார்வையே சில இடங்களில் தொனிக்கிறது. அது ஒரு சில இடங்களில் ஹீரோயிஸமாகவும், 2கே கிட்ஸ் ஆண்களைக் குறிவைத்து, அவர்களிடமிருந்து கை தட்டல் பெற வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டவையாகவும் இருக்கின்றன. இவற்றில் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அறிமுக இசையமைப்பாளர் ஜென் மார்டினின் நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள், திரைக்கதையிலிருந்து விலகிச் செல்லாமல், எமோஷனல் காட்சிகளுக்குப் பக்கபலமாகவே அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் 'சூப் சாங்க்' தேவையற்ற ஆணியாக உறுத்துகிறது. அதே சமயம் க்ளைமாக்ஸில் யுவன் ஷங்கர் ராஜா குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல் உணர்ச்சிமிகு அந்தக் காட்சிக்குப் பக்கபலம். மொத்த படத்துக்கும் தன் பின்னணியிசையால் உயிரூட்டியிருக்கிறார் ஜென் மார்டின். எழிலரசனின் ஒளிப்பதிவும், கதிரேஷ் அழகேசனின் படத்தொகுப்பும் அதிகம் பரிசோதனை செய்யாமல் கதைக்குத் தேவையானவற்றைச் செய்திருக்கின்றன.

நான்காண்டுகளில் ஓர் இளைஞனின் வாழ்கையில் ஏற்படும் மாற்றங்களை எமோஷனலாகவும் அதே சமயம் பொழுதுபோக்காகவும் சொன்ன விதத்தில் தனிக்கவனம் பெறுகிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் இடம்பெற்றிருக்கும் சில வழக்கமான காட்சிகளையும், சில இடங்களில் வெளிப்படும் ஆண் மையவாத பார்வையையும் அகற்றியிருந்தால் இந்த `டாடா'வை ஆரத்தழுவிப் பாராட்டியிருக்கலாம். இப்போது கைகுலுக்கல் மட்டுமே!