சினிமா
Published:Updated:

இது ராக்கி ராஜாங்கம்! - KGF2

KGF2
பிரீமியம் ஸ்டோரி
News
KGF2

படத்தில் ஒரு காட்சியில் சி.இ.ஓ என்றால் என்ன என்று ராக்கி கேட்க, ‘பாஸுக்கெல்லாம் பாஸ்’ என்று பதில் வரும்.

ஆதரவற்ற சிறுவன் ராஜ கிருஷ்ணப்ப பைர்யா, `ராக்கி' என்னும் பிராண்டாக உருமாறி அவன் தாய் விரும்பியதைப் போல சுல்தானாக இந்த உலகையே ஆள்வதுதான் ‘கே.ஜி.எஃப்' இரண்டு பாகங்களின் மேலோட்டமான கதைச் சுருக்கம்.

கன்னடத் திரையுலகமானது பிற மொழிப் படங்களின் ரீமேக்குகளை மட்டுமே பெரும்பான்மையாகத் தயாரித்து ‘பாதுகாப்பான பிசினஸ்' செய்துவரும் குறுகியதொரு கலைத்துறை. அத்தகைய சாண்டல்வுட்டில் மெகா ஹிட்டான படங்களின் மொத்த வசூலே ரூ. 50 - 60 கோடிகள்தான். இப்படியான நிலையில், இயக்குநர் பிரசாந்த் நீலும், தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸும் ரூ. 80 கோடி செலவில் ‘கே.ஜி.எஃப்' முதல் பாகத்தை வெளியிட்டனர். இந்தியுடன் சேர்த்து அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் வெளியான படம், 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது அதன் இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் வசூலை கிட்டத்தட்ட இரண்டே நாள்களில் எட்டி, ஆயிரம் வாலா வெடியாக உலகம் முழுக்க திரை யரங்குகளை அதிரச் செய்து கொண்டிருக்கிறது.

இது ராக்கி ராஜாங்கம்! - KGF2

2018-ல் வெளியான முதல் பாகம் ராக்கியின் எழுச்சி என்றால், தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகம் கோலார் தங்கச் சுரங்கத்தின் ராஜாவாகும் ராக்கியின் ஆட்சியில் எழும் சிக்கல்களும், அதைச் சமாளிக்க அவர் எடுக்கும் முடிவுகளும்தான். பேன் இந்தியா வணிகத்துக்காக வில்லன் அதீராவாக சஞ்சய் தத், இந்தியப் பிரதமராக ரவீனா டாண்டன், கதை சொல்லியாக பிரகாஷ் ராஜ். வைக்கிங் இன மக்களின் நடை, உடை, வாள் என முரட்டு வில்லனாகத் திரையில் மிரட்டியிருக்கிறார் சஞ்சய் தத். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்குப் பெரிய வேலையில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக ரவீனா டாண்டன் ராக்கியையே அடக்கி ஆள முயலும் பாத்திரத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

`முதல் மரியாதை' படத்தில் கல்லும் நடித்தது என்பார்கள். இந்த `கே.ஜி.எஃப் - சேப்டர் 2'-ல் சுத்தியல், வாள், பெரியம்மா என்று அழைக்கப்படும் நவீனத் துப்பாக்கி, ஒரு சிறிய தங்கக்கட்டி என எல்லாமே நடித்திருக்கின்றன. கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக யஷ் வலம் வந்தாலும் அவர் நடித்தது பெரும்பாலும் ரீமேக் படங்களில்தான். அப்படிப்பட்டவர் தன் கரியரில் கிட்டத்தட்ட 7 வருடங்களை ‘கே.ஜி.எஃப்' 2 பாகங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார்.

இது ராக்கி ராஜாங்கம்! - KGF2

படத்தின் பெரும்பலம் புவன் கௌடாவின் ஒளிப்பதிவும், ரவி பஸ்ரூரின் இசையும்தான். முதல் பாகத்தில் மஞ்சள், கறுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்கள் மட்டுமே விரவிக்கிடந்ததைப் போல இங்கேயும் குறைவான வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முதல் பாகத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் தீம் மியூசிக், ‘தீரா தீரா' எனத் திரையரங்கை அதிரச் செய்யும் பில்டப் பாடல் போன்றவற்றை சிற்சில மாற்றங்களோடு இங்கேயும் பயன்படுத்தி யிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, ஒரு நாயக பிம்ப சினிமா இத்தனை ரசிகர்களை ஈர்த்ததற்குக் காரணம், இப்படியானதொரு கதையை இயக்குநர் பிரசாந்த் நீல் அணுகிய விதம்தான். வெவ்வேறு காலநேரத்தில், வெவ்வேறு இடங்களில், பல்வேறு கதாபாத்திரங்களுடன் அரங்கேறும் காட்சிகளை ஒன்றிணைத்து ஒரே காட்சியாகத் தெரியுமாறு மாற்றி மாற்றிக் கோத்துக் கதையைச் சொல்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால், ‘கே.ஜி.எஃப் 2' படத்தை இப்படி எடிட் செய்த உஜ்வல் குல்கர்னிக்கு வயது 19தான்.

இது ராக்கி ராஜாங்கம்! - KGF2

‘கே.ஜி.எஃப்' படங்களின் ஹைலைட்டே அதன் பன்ச் வசனங்கள்தான். காட்சிக்குக் காட்சி அத்தகைய வசனங்களால் அனல் பறக்கும். ‘என்னை மாதிரி இன்னொருத்தன்... என் அப்பனாலயே முடியாதது அது... என் அப்பன் மேல சத்தியமா வேற யார்னாலயும் முடியாது!’, ‘இங்கே தலைகள் நிரந்தரமில்லை. கிரீடம்தான் நிரந்தரம்!’, ‘நான் முடிஞ்சவரைக்கும் யுத்தத்தைத் தவிர்ப்பேன். முடியலன்னா ஜெயிப்பேன்! ’ என ஒவ்வொன்றும் திரையரங்கில் விசிலடிக்க வைக்கின்றன. ஆக்‌ஷன் மசாலாதானே என ஏதோவொன்றை ஆக்கிப் பரிமாறாமல், அதையும் ஒரு கலைப்படைப்பாக அணுகிய விதம்தான் இதன் வெற்றிக்கான மிக முக்கியக் காரணம்.

படத்தில் ஒரு காட்சியில் சி.இ.ஓ என்றால் என்ன என்று ராக்கி கேட்க, ‘பாஸுக்கெல்லாம் பாஸ்’ என்று பதில் வரும். உடனே அருகிலிருக்கும் வெள்ளைக்காரரிடம், ‘நானும் சி.இ.ஓ’ என அறிமுகம் செய்துகொள்வார் ராக்கி. ‘எந்த கம்பெனிக்கு?’ என்ற கேள்விக்கு, அவர் சொல்லும் பதில், ‘இந்தியா!’ இன்று அதுதான் உண்மையாகி இருக்கிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்தையும் ஓரங்கட்டி, இந்தியா முழுக்க பெரும்பாலான திரையரங்குகளில் ராக்கியின் ஆட்சிதான். சலாம் ராக்கி பாய்!