கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் சேதுபதி

விஜய், அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகப்போகிறார். ‘வாரிசு' படத்தின் ஷூட்டிங் ஒருசில போர்ஷன்கள் மீதம் எடுக்க வேண்டியிருக்கிறது

கோலிவுட் ஸ்பைடர்

அஜித்தை ‘துணிவு’க்காக விழா ஒன்றை நடத்தி அதில் மேடையேற்றிவிட பல விதங்களிலும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். முடியவே முடியாது என்று மறுத்தார். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதைப் போல ஒரு நல்ல படம் அதற்கான விளம்பரத்தை அதுவே தேடிக்கொள்ளும் என்றார். ஆனாலும் தயாரிப்புத் தரப்பு தொடர்ந்து அவரிடம் கேட்டுவருவதால், இப்போது அரைமனதோடு இருக்கிறாராம் அஜித். அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து தீவிரமாக அந்த முயற்சி நடக்கிறது. அரசியல்வாதிகள் மற்றும் மற்ற ஹீரோக்கள் இல்லாமல் அவர் மட்டும் தோன்றிப் பத்து நிமிஷம் பேசினால் போதும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். நடக்குமா என கோலிவுட் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கோலிவுட் ஸ்பைடர்

மணிரத்னம் பத்து நாள்கள் மட்டுமே ‘பொன்னியின் செல்வன்’ வெளியான பிறகு ஓய்வெடுத்தார். இப்போது வழக்கம் போல அலுவலகம் வந்துவிடுகிறார். காலை 10 மணிக்கு எடிட்டிங்கில் உட்கார்ந்தால் மாலை வரை தொடர்ந்து எடிட்டிங்கில் இருக்கிறார். இதே வேகத்தில் ஒர்க் பண்ணினால் இரண்டாவது பாகத்தை ஜூன் மாதத்திற்கு பதிலாக ஏப்ரல் மாதமே கொண்டு வந்துவிடுவார் என்கிறார்கள். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு அவர் செயலாற்றிவரும் விதம்தான் ஆச்சரியப்படுத்துகிறது என்கிறார்கள். எடிட்டிங்கில் இருந்தால் பிரபலங்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிடுகிறாராம்.

கோலிவுட் ஸ்பைடர்

விஜய், அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தம் ஆகப்போகிறார். ‘வாரிசு' படத்தின் ஷூட்டிங் ஒருசில போர்ஷன்கள் மீதம் எடுக்க வேண்டியிருக்கிறது. அதனை முடித்துவிட்டு தொடர்ந்து மூன்று படங்களுக்கான கதையைக் கேட்கப்போகிறார். அதில் எப்படியாவது இடம்பெற்றிட வேண்டும் என்று அவரது பழைய டைரக்டர்கள் முயன்றுவருகிறார்கள். ‘திருப்பாச்சி' கொடுத்த பேரரசு அதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். சீனியர்களில் அவரது கதையை மட்டும் வாங்கிக்கொள்ளலாமா என்ற ஐடியாவிலும் விஜய் இருக்கிறார் என்கிறார்கள். மற்றும் சில பழைய அவரின் இயக்குநர்களைக் கதை கேட்கும் குழுவில் வைத்திருக்கிறார். அவர்கள் கதையைக் கேட்ட பிறகே விஜய் அதைக் கேட்கும் புது முடிவுக்கு வந்திருக்கிறார். இதனால் அந்தக் குழுவிற்கு இப்போது வேலைப்பளு அதிகமாகிவிட்டதாம். இன்னமும் தன் பழைய இயக்குநர்கள் தன்னை அணுகும்படியாக வைத்திருப்பது, அவர்களுக்கு உதவி செய்வது அந்த இயக்குநர்களை சந்தோஷத்தில் வைத்துள்ளது. அவரது பழைய இயக்குநர் மகள் ஒருவருக்கு மருத்துவ சீட்டுக்கு நன்கொடை கொடுத்தும் உதவியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் உடல்நிலை முன்னேறும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அவரது கட்சியினர். டாக்டர்கள் ஆலோசனைப்படியே அவர் இருந்துவந்தாலும் அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால் கவலையில் இருக்கிறார்கள். அதனால் மறுபடியும் அவரைச் சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கலாமா என்ற யோசனையில் இருக்கிறார்கள். பொது விமானத்தில் அவரை அழைத்துச் செல்வதற்குத் தகுந்த மாதிரி அவரது உடல்நிலை சரிவராது என்பதால் மத்திய அரசின் உதவியை நாடி தனி விமானத்தில் அழைத்துச் செல்லத் திட்டமிட்டு வருகின்றனர். மோடிக்கு விஜயகாந்த்மீது தனிப்பட்ட பிரியம் உண்டு என்பது யாவரும் அறிந்த விஷயம்தான்.

கோலிவுட் ஸ்பைடர்

கிட்டத்தட்ட பாதி நாள்கள் மும்பையிலேயே இருக்கிறார் விஜய் சேதுபதி. மூன்று இந்திப் படங்களில் அவர் மூன்று ஹீரோக்களில் ஒருவராகவும், வில்லனாகவும் நடித்துவருகிறார். ஷாருக் அவரது சொந்தத் தயாரிப்பில் அவரைத் தனி ஹீரோவாகப் போட்டு படம் எடுக்க முடிவு செய்துவிட்டாராம். ‘ஜவான்' படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதியிடம் இதுபற்றிச் சொல்லி சம்மதம் கேட்டிருக்கிறாராம். முழு ஹீரோ என்றதும் அதைப்பற்றி யோசிக்கிறார் சேதுபதி. தமிழ்ப் படங்கள் தாமதமாகுமோ என்ற யோசனையும் அதற்குக் காரணம்.