
விக்ரமின் மகன் துருவ் இப்போது மியூசிக் ஆல்பத்தில் இறங்கிவிட்டார். மூன்று ஆல்பம் பாடல்கள் ரெடி செய்து அதற்கு இசையமைத்துள்ளார்.
விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ இரண்டும் பொங்கலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அதனால் மற்ற படங்களின் ரிலீஸ்களைத் தள்ளி வைத்துள்ளனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வரும் இருவரின் ரசிகர்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அஜித்தும், விஜய்யும் முடிவெடுத்துள்ளனர். தங்களின் ரசிகர்களிடம் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்போகிறார்களாம். விஜய் ரசிகர் மன்றங்களுக்கு அது மாதிரியான ஒரு வேண்டுகோள் போய்ச் சேர்ந்து விட்டது. இப்போது அஜித்தின் நண்பர் மூலமாக அப்படி ஒரு வேண்டுகோள் விடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. காலம் காலமாக எல்லை மீறிக்கொண்டே இருக்கும் இந்தச் சண்டைகள் எப்போது ஓயும் என்று இரண்டு ஸ்டார்களின் சாதாரண ரசிகர்களும், அஜித், விஜய் போலவே எதிர்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

எதிர்மறை விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அட்லீயின் பாலிஸியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘பிரின்ஸ்' ரிசல்ட்களைப் பொருட்படுத்தாமல் அடுத்து நடிக்கும் ‘மாவீரன்' ஷூட்டிங்கிற்குப் போய்விட்டார் சிவா. அதில் வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார் என முதன்முறையாக அவரே விகடனில் சொல்லியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். சிவகார்த்திகேயனின் அம்மாவாக சரிதா நடிக்கிறார். சென்னையின் எண்ணூர் பகுதிகளில் அதன் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்த ஷெட்யூலை முடித்துவிட்டு ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடக்கிறது. அங்கே இப்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன.

சிம்புவும் கமல்ஹாசனும் அடிக்கடி சந்திக்கிறார்கள். சினிமாவைப் பற்றி நிறைய பகிர்ந்துகொள்கிறார்கள். சிம்புவிடம், முக்கியமான படங்களைப் பார்க்கச் சொல்லி, பெரிய பட்டியலே கமல் சொல்லியிருக்கிறார். அனேகமாக அடுத்த வருடம் கமலின் பேனரில் சிம்பு நடிப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே சிம்புவுக்கு டைரக்ஷன் ஆசையும் இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து மறுபடியும் ஒரு படம் இயக்குவதற்கு சிம்பு ஆசைப்பட்டாராம். அவரின் ஆசை இரண்டிற்குமே கமல் விருப்பம் தெரிவித்ததாகவும் சொல்கிறார்கள். பொங்கல் அன்றைக்கு சிறப்பு அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

விக்ரமின் மகன் துருவ் இப்போது மியூசிக் ஆல்பத்தில் இறங்கிவிட்டார். மூன்று ஆல்பம் பாடல்கள் ரெடி செய்து அதற்கு இசையமைத்துள்ளார். விரைவில் அதனை வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறாராம். ஒரே படத்தை இரண்டு முறை நடித்த பிறகும் அடுத்து துருவ்வை ஒப்பந்தம் செய்ய புரொடியூசர்கள் ரெடியாக இருக்கிறார்கள். இருந்தாலும் துருவ்வை நெருங்குவதும், கதை சொல்வதும் கடினமாக இருப்பதாக இயக்குநர்கள் சொல்கிறார்கள். நடிப்பது, ஆல்பம் செய்வது என்ற இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்வதுதான் துருவிற்கு நல்லது என சினிமா ரசிகர்கள் நினைக்கிறார்கள்.


‘பொன்னியின் செல்வன்' வெற்றி விழாவிற்கான பார்ட்டி அவ்வளவு விமரிசையாக நடந்ததாம். ரஜினிகாந்த் சீக்கிரமே வந்து ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்து எல்லா விருந்தினர்களையும் சந்தித்துப் பேசிவிட்டுதான் போனாராம். கால் வலியைப் பொருட்படுத்தாமல் த்ரிஷா வந்திருந்து நடனமும் ஆடியிருக்கிறார். அதே மாதிரி வந்திருந்த எல்லா ஹீரோயின்களும் ரசிக்கிற மாதிரி சிறு இசையோடு நடனம் ஆடியிருக்கிறார்கள். வெகு காலமாக சந்திப்புகளில் காணப்படாமல் இருந்த ரவிவர்மனும் ‘இந்தியன் 2' படப்பிடிப்பிலிருந்து வந்திருந்தார். ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் என அவருக்கு ஏற்கெனவே தெரிந்த இந்தி நட்சத்திரங்களோடு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தார். பார்ட்டி முடிய காலை மூன்று மணி ஆனதாம். எல்லோரையும் அனுப்பிவிட்டு அவர்கள் பத்திரமாகத் திரும்பியதைக் கேட்டுக் கொண்டுதான் காலை ஐந்து மணிக்கு படுக்கைக்குப் போயிருக்கிறார் மணிரத்னம். இந்த வருடத்தின் பெரிய சக்சஸ் பார்ட்டி இதுதான் என்கிறார்கள்.

பாரதிராஜாவின் உடல்நலம் தேறிவருகிறது. ஆனாலும் அடிக்கடி காய்ச்சல் வந்துவிடுகிறது. அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள இரண்டு செவிலியர்களைப் பணிக்கு அமர்த்தியுள்ளனர். மீண்டும் அவர் நடிப்பில் இறங்கக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் உடல்நலம் சரியாக இருந்தபோது கமிட் ஆன, விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், தங்கர்பச்சான் ஆகியோர் படங்களின் ஷூட்டிங்கும் போய் வந்தார். இந்நிலையில் அவர் நடித்திருக்கும் படங்கள் மீண்டும் அவரது வருகைக்காகக் காத்திருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்று படங்களிலுமே முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. அதில் இமயமும் நடித்திருக்கிறார். அவர் இல்லாமல் அடுத்து செல்ல முடியாமல் தவித்துவருகிறார்களாம்.

கவிதாலயா மீண்டும் படங்கள் செய்ய கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய முக்கியமான நடிகர்களைக் கேட்டுப் பார்த்துவிட்டு சாதகமான எந்த பதிலும் வராததால் வெப் சீரிஸில் இறங்கிவிட்டது. பெரிய நடிகர்கள் தவிர்த்து யாரும் கண்டுகொள்ளவில்லையே என கே.பி. குடும்பம் கொஞ்சம் கவலையில் இருந்தது. இப்போது அதை மறந்துவிட்டு மறுபடியும் தயாரிப்பில் இறங்கிவிட்டார்கள். நடிகர்கள் பக்கம் விசாரித்தால், வேண்டிய அளவிற்குப் படங்கள் செய்து கொடுத்தாயிற்று என்று சொல்கிறார்களாம். சின்னதாக பனிப்போர் இரு தரப்பினருக்கும் நடந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மை.