கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

விக்கி - நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
News
விக்கி - நயன்தாரா

விக்கி - நயன்தாராவின் இரண்டு குழந்தைகளை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள மூன்று பெண்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

சூர்யாவின் ‘ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் அதைச் சிறப்பிக்கும் விதமாக ‘ஜெய்பீம்' படத்தின் திரைக்கதையைப் புத்தகமாகக் கொண்டுவர உள்ளார்கள். படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் படத்தின் ஸ்கிரிப்ட் மட்டுமல்லாமல், படம் உருவான விதம் குறித்து அதில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்களாம். சூர்யா தலைமையில் விழா ஒன்றை நடத்தவும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்.

கோலிவுட் ஸ்பைடர்

வழக்கம்போல் அட்லியின் கதை விவாதப் பொருளாகியிருக்கிறது. அவரது கதை விஜயகாந்தின் ‘பேரரசு' படத்தின் கதையைப் போல இருக்கிறது என்று தகவல் கசிந்ததுதான் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஆகியிருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த குழுவினர்கள்தான் இந்தத் தகவலைத் தந்திருக்க வேண்டும் என்று அட்லி கோபத்தில் இருக்கிறாராம். ஆனால் இதுபற்றி ரியாக்ட் செய்து செய்தி பரவி விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறாராம். ‘படம் வெளியாவதற்கு முன்பே இப்படிப் புகார் கொடுப்பது தவறு. எங்கள் படத்திற்கு இது தப்பான அபிப்பிராயத்தைக் கொடுத்துவிடும்’ என்று இயக்குநர் நேரில் செல்லாமல் தொலைபேசியில் விளக்கம் கொடுத்திருப்பதாகவும், தன் சார்பில் எந்த பதில் விளக்கமும் எழுத்துபூர்வமாகத் தரமாட்டேன் என்பதிலும் அட்லி உறுதியாக நிற்பதாகவும் சொல்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

ராஜ்கமல் அலுவலகத்தில் இருந்து விரைவில் புதுப்பட அறிவிப்பு ஒன்று வெளிவரவிருக்கிறது. ‘விக்ரம்' வெற்றியின் காரணமாக இளம் இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் கமல். பா.இரஞ்சித், வினோத் எனப் பலரிடம் கதைகள் கேட்டு வைத்திருக்கிறார். அதில் கமல் - ஹெச்.வினோத் கூட்டணிதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. அஜித்தின் ‘துணிவு' படத்தை அடுத்து வினோத் விஜய்சேதுபதியைத்தான் இயக்குவார் என்ற தகவல் இருந்தது. ‘துணிவு’ படப்பிடிப்பிற்கு இடையே அஜித், பைக்கில் வட இந்தியா டூரில் இருந்தபோது, ஹெச்.வினோத் அப்போது விஜய் சேதுபதியின் படத்தையும் தொடக்கிவிடுவதாக இருந்தது. இந்நிலையில் அவர் கமலை இம்ப்ரஸ் செய்ததுதான் ஆச்சரியத்திற்கான காரணம். கமல் படத்தை முடித்துவிட்டு விஜய்சேதுபதியை இயக்க வருகிறாராம் வினோத்.

கோலிவுட் ஸ்பைடர்

‘லவ் டுடே' வெற்றி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்குப் பல வாய்ப்புகள் குவிகின்றன. டாப் நடிகர்களில் நாலு பேர் அவருக்குப் படம் செய்யத் துண்டு விரித்துக் காத்திருக்கிறார்கள். அதில் முந்திக் கொண்டவர் விஜய்தான். கதையைக் கேட்டு ஓகே சொல்லியதோடு அதில் சில மாற்றங்களையும் சொல்லியிருக்கிறாராம். அந்த மாற்றங்களைச் செய்வதில் வெற்றிக்கொண்டாட்டத்திற்கு இடையிலும் தீவிரமாக இருக்கிறார் பிரதீப். ஆனால் தனக்குக் கதாநாயகனாக வாய்ப்பு அளித்த கல்பாத்திக்கே மறுபடியும் படம் செய்யத் தீர்மானித்து விட்டார். இன்னும் தனி ஆபீஸ் போடாமல் கல்பாத்தி ஆபீஸிலேயே தொடர்ந்து இருக்கிறார்.

கோலிவுட் ஸ்பைடர்

விக்கி - நயன்தாராவின் இரண்டு குழந்தைகளை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ள மூன்று பெண்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் முறையான பயிற்சி பெற்றவர்கள் அவர்கள். விக்கியின் அம்மா உடன் இருந்து குழந்தைகளை அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். தவிர, தான் நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு மூன்று படத்தைத் தவிர்த்து இனி ஒரு வருடத்திற்கு நடிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்ற முடிவுக்கு நயன் வந்துவிட்டார். இரவு பகலாக குழந்தைகளோடு அவர் விழித்து இருப்பதைப் பார்த்து விக்கியே ஆச்சரியமாக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதாகச் சொல்கிறார்கள்.

விநியோகஸ்தர் சங்கத்திற்கு இப்போது அதிகமாக வேலைகளே இல்லையாம். சின்னவரின் நிறுவனமும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் அவர்களின் வேலையை எடுத்துக்கொண்டுவிட்டார்கள். இப்போது அவர்கள் அதிகமாக தியேட்டர்கள் பெற்றுத் தருவதற்கான கமிஷன் ஏஜெண்ட்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பெயரளவிற்குதான் அவர்கள் அந்தப் பொறுப்பில் இருந்தாலும் ஆட்டுவிப்பது பெரும் தயாரிப்பு நிறுவனங்கள்தான். இந்த சிஸ்டத்தில் கொஞ்சம் கமிஷன் அதிகம் என்றாலும் பணம் தியேட்டர்காரர்களிடமிருந்து சரியாக வந்து சேர்ந்துவிடுகிறது என்பதில் தயாரிப்பாளர்களுக்கு நிம்மதி.