
சிவாஜி குடும்பத்தில் சொத்துப் பிரச்னை விஸ்வரூமெடுத்துவிட்டது. உடன்பிறப்புகளுக்குள் பிரச்னை நடந்து அது நீதிமன்றம் வரைக்கும் போயிருக்கிறது. ‘

ஆந்திராவில் ‘சங்கராந்திப் பண்டிகையில் நேரடி தெலுங்குப் படங்களின் ரிலீஸுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிறமொழிப் படங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் ஒதுக்கக் கூடாது’ என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் போட்டுவிட, பிரச்னை பெரிதாகிக்கொண்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு பிரச்னையைப் பேசித் தீர்க்கவும் முயன்று வருகிறது. ஆனால், இன்னொன்றையும் சொல்கிறார்கள். ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில்ராஜு தான் முன்பு இதுபோல் ஒரு சட்டம் கொண்டு வந்தார். இதனால் அப்போது பலரும் பாதிக்கப்பட்டார்கள். அவர் கொண்டு வந்த சட்டம் இப்போது அவருக்கே எதிராக அமைந்துவிட்டது என்கிறார்கள். அனேகமாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் ரிலீஸ் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்பது தகவல்.

சிவாஜி குடும்பத்தில் சொத்துப் பிரச்னை விஸ்வரூமெடுத்துவிட்டது. உடன்பிறப்புகளுக்குள் பிரச்னை நடந்து அது நீதிமன்றம் வரைக்கும் போயிருக்கிறது. ‘பிரச்னையை உங்களுக்குள் பேசி முடித்துக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால் அதில் தலையிட்டு சமாதானமாக முடிவெடுங்கள்’ என்று ரஜினியும் கமலும், பிரபுவிடம் சொல்லியிருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் பிரபுவின் சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் இடையில் நடக்கிறது. கமல் கடைசிக் கட்டமாகக் கலந்துகொண்டு பிரச்னைகளைக் கேட்கப் போகிறார். இரு தரப்பும் இதற்கு சம்மதித்துவிட்டதால் மட்டுமே இதில் தலையிட ரஜினியும் கமலும் முன்வந்திருக்கிறார்கள். அடுத்த வாரத்தில் சமாதானத்திற்கான கொடி பறந்து அடுத்த பொங்கலைச் சொந்த ஊரில் எல்லோரும் இணைந்து கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறதாம்.

அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், படப்பிடிப்பு இன்னமும் முடிந்தபாடில்லை. ‘துணிவை’ முடித்துவிட்டு கமல், விஜய்சேதுபதியின் படத்துக்குச் செல்ல எப்போதோ ரெடியாகிவிட்டார் ஹெச்.வினோத். ஆனால், ‘துணிவு’ வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கிறதாம். சமீபத்தில் டப்பிங்கின் போது, முழுப்படத்தையும் பார்த்த அஜித், சில காட்சிகளில் இன்னும் சில விஷயங்கள் சேர்க்கச் சொல்லிக் கையோடு தேதிகளையும் கொடுத்துவிட்டார். எனவே முழுப்படமும் முடிந்த பிறகு பேட்ச் ஒர்க்குகளை எடுத்து வருகின்றனர்.

‘ஜெயிலர்’ படத்தை அடுத்து ஒரு படம் நடித்துவிட்டு அத்தோடு சினிமாவிலிருந்து ஓய்வு பெறலாம் என நினைத்தார் ரஜினி. சமீபத்தில் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் போதிய இடைவெளி கொடுத்து தொடர்ந்து நடிக்கலாம் என்று சொல்லிவிட்டார்களாம். அதே சமயம் தூசு, புழுதிச் சூழல்களில் மட்டும் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். அதனால் பெரும்பாலும் அவர் இப்போது இன்டோர் ஷூட்டிங்கை மட்டுமே அதிகமாக விரும்புகிறார். மேலும், கடினமான சண்டைக்காட்சிகளுக்கு குளோசப் தவிர்த்து, எல்லாக் காட்சிகளுக்கும் டூப் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ‘ஜெயிலர்’ தவிர்த்து அடுத்து ரஜினி படமெல்லாம் கதை அதிகம் சார்ந்த படம்தானாம். அமிதாப்பின் ‘சர்க்கார்’ படத்தைச் சுட்டிக்காட்டி அதைப்போல் கேங்ஸ்டர் படம் தயார் செய்யுமாறு ரஜினி சொல்லியிருக்கிறார்.

‘வாரிசு’ படத்திற்கு ஒதுக்கிய தியேட்டர்களைக் குறைக்க வேண்டும் எனத் தெலுங்குத் தயாரிப்பாளர்கள் வலியுறுத்துவதால் விஜய் கொஞ்சம் அப்செட்டாம். அதிகமாக படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வைத்துக்கொண்டவர் இப்போது மீதி இருக்கும் படப்பிடிப்பைச் சென்னைக்கு மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டாராம். படத்தின் ரிலீஸ் குறித்து தெலுங்கு நடிகர்களிடம் கலந்துபேசவும் விஜய் திட்டமிட்டுவருகிறார் என்கிறார்கள்.

சமீபத்தில் அஜித்தும் அர்ஜுனும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆனது. உடனே, ‘மங்காத்தா' கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது, ‘மங்காத்தா 2' ரெடியாகிறது எனப் பேச்சு கிளம்பியது. இதுகுறித்து அஜித் வட்டாரத்தில் விசாரித்தால், ‘‘சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஷாலினியின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் அஜித். ஷாலினியை வாழ்த்தவே அர்ஜுன் வந்திருந்தார்’’ என்று சொல்கிறார்கள். தவிர, வெங்கட்பிரபு தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து ஒரு படம் இயக்கிவருகிறார். அதனை முடித்துவிட்டு அவர் சிம்புவை இயக்குகிறார் என ஒரு பேச்சு இருக்கிறது. ஆக, ‘மங்காத்தா 2'-க்கு இப்போது வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள்.