
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளின் மீது கவனம் வைக்கத் தொடங்கியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அறிமுக இயக்குநர் சாந்தரூபனின் ‘ரெயின்போ'வில் நடிக்கிறார். ‘
‘விடுதலை'யில் சூரியின் காதலி தமிழரசியாக இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார் பவானி, அவர் இதற்கு முன் சுதா கொங்கராவின் ‘பாவக்கதைகள்' படத்தில் ஷாஹிராவாகவும் அசத்தியிருந்தார். சமீபத்தில் ‘விடுதலை'யைப் பார்த்து ரசித்த சுதா கொங்கரா, ‘‘ ‘ஷாஹிராவிலிருந்து தமிழரசியாக உன் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. உன்னை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது'' என பவானியை மனம்திறந்து பாராட்டியிருக்கிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளின் மீது கவனம் வைக்கத் தொடங்கியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அறிமுக இயக்குநர் சாந்தரூபனின் ‘ரெயின்போ'வில் நடிக்கிறார். ‘‘இது ஒரு ஃபேன்டஸி கலந்த காதல் கதை. புதுமையான கதைக்களம், ‘சுல்தான்' மூலம் தமிழுக்கு என்னை அழைத்து வந்த நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி'' என்கிறார் ராஷ்மிகா.
பாடலாசிரியர்கள் ஹீரோவாகும் வரிசையில் மேலும் ஒரு வரவு பிரியன். `மஸ்காரா போட்டு மயக்குறீயே', `மக்காயலா.. மக்காயலா' உட்பட பல பாடல்களை எழுதியவர், இப்போது 'அரணம்' என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனதுடன், படத்தையும் அவரே இயக்கி முடித்துள்ளார்.

‘இந்தியா பாகிஸ்தான்' படத்தின் இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் நடித்துவந்த சந்தானம், அதனை அப்படியே விட்டுவிட்டு ‘டிக்கிலோனா' கார்த்திக் யோகியின் ‘வடக்குப்பட்டி ராமசாமி' படத்திற்குச் சென்றார். பொள்ளாச்சி, திண்டுக்கல் பகுதிகளில் அதன் படப்பிடிப்பையும் ஒரே மூச்சில் முடித்துக் கொடுத்துவிட்டார் சந்தானம். நினைத்ததைவிட ‘வ.ரா' நன்றாக வந்திருப்பதால், மீண்டும் கார்த்திக் யோகியுடன் கைகோப்பார் என்கிறார்கள்.
உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி'யின் வசனங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் தமிழரசன் பச்சமுத்து. இதற்காக அவருக்கு ஆனந்த விகடனின் சிறந்த வசனத்திற்கான விருது கிடைத்தது. விருதைப் பெற்றுக்கொண்டவர், அதை வெப்சீரீஸ் படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் அருண்ராஜா காமராஜாவிடம் காண்பித்து ஆசி வாங்கி வந்திருக்கிறார். அருண்ராஜா, இப்போது ஓ.டி.டி ஒன்றிற்காக ஜெய், தன்யா ஹோப்பை வைத்து ‘லேபிள்' என்ற வெப்சிரீஸை இயக்கிவருகிறார்.

சத்தமில்லாமல் இரண்டு படங்களை இயக்கி முடித்துவிட்டார் இயக்குநர் விஜய். ஜீவா, அர்ஜுன், ராஷிகண்ணா ஆகியோரின் நடிப்பில் ‘மேதாவி' என்ற படத்தை இயக்கி முடித்ததுடன், அதன் ரிலீஸ் வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையே பிரபுதேவா, மகிமா நம்பியாரை வைத்து த்ரில்லர் ஒன்றையும் இயக்கி முடித்திருக்கிறார். படுவேகமான இயக்குநர் போல விஜய்.