கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

கௌதம் கார்த்தி - மஞ்சிமா
பிரீமியம் ஸ்டோரி
News
கௌதம் கார்த்தி - மஞ்சிமா

கௌதம் கார்த்தியின் திருமணத்துக்கு அப்பா கார்த்தியின் ஆசீர்வாதம் மட்டுமே இருந்தது. அம்மாவும், வீட்டிலுள்ள மற்றவர்களும் ஆதரவு அளிக்கவில்லையாம்.

போயஸ் தோட்டத்தில் வாங்கிய இடத்தில், பிரமாண்டமான வீட்டைக் கட்டிவருகிறார் தனுஷ். அந்த வீட்டை மகன்களுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கவிருப்பதாக நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார் தனுஷ். இப்போது ஷூட்டிங் இருக்கிற காலங்களில் அம்மா வீட்டிலேயே இருக்கிறார். மகன்களையும் தன்னோடு வைத்துக்கொள்கிறார். பள்ளி செல்லும் நாள்களில் மட்டுமே குழந்தைகள் தாயாரிடம் இருக்கிறார்கள். மற்றபடி அதிகமும் அடுத்தடுத்த படத் தயாரிப்பில், கதை விவாதத்தில் மட்டும் நேரத்தைச் செலவிடுகிறார் தனுஷ். மீண்டும் அவரை ஐஸ்வர்யாவிடம் சேர்த்து வைக்கும் முயற்சியில் அனைத்துத் தரப்பும் தோல்வி அடைந்துவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் ஸ்பைடர்

விஜயகாந்த் உடல்நிலை அப்படியேதான், முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. முன்பு நல்ல நிலைக்கு வந்து உட்காரவும், நல்லபடியாகப் பேசவும் முயற்சி செய்த கேப்டன் இப்போது சோர்ந்திருப்பதாகக் கேள்வி. மூன்று மணி நேர விமானப் பயணத்துக்கு அவர் தயாரானதும், அவரை சிங்கப்பூர் வரை அழைத்துச் சென்று சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யலாமா என்று அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அமெரிக்கப் பயணத்துக்கு அவரது உடல்நிலை தாக்குப்பிடிக்கும்படி இல்லை என்பதால்தான் இந்த சிங்கப்பூர் பயணமாம். கேப்டன் நலம் பெற்றால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

கடந்த மார்ச் மாதம் துபாயில் நடந்த ‘துபாய் எக்ஸ்போ'வில் இளையராஜாவின் கச்சேரி நடந்தது. கொரோனா லாக்டௌனுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டிய அந்தக் கச்சேரி இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் நடந்து முடிந்தது. அப்போது கச்சேரிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அதைக் கருத்தில்கொண்டு துபாயில் மீண்டும் இளையராஜாவின் கச்சேரியைக் கடந்த 25-ம் தேதி நடத்தத் திட்டமிட்டு, டிக்கெட்டுகளையும் விற்பனைக்குவிட்டனர். ஆனால், டிக்கெட்டுகள் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் கச்சேரியை ஏற்பாடு செய்தவர்களுக்குப் பெரிய ஷாக். அவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் கச்சேரியை கேன்சல் செய்துவிட்டனர். இதில் ராஜா அப்செட்டாம்.

கோலிவுட் ஸ்பைடர்

அட்லியின் ‘ஜவான்' படத்தின் கதையும் விஜயகாந்த் நடித்த ‘பேரரசு' படத்தின் கதையும் ஒன்றேதான் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ‘பேரரசு' தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் புகார் கொடுத்திருந்தார். (அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அவர்தானா இல்லை காஜா மைதீனா என்பது தனிக்கதையாக ஓடிக்கொண்டிருக்கிறது.) இதற்கிடையே அட்லி தரப்பை அழைத்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தியது. ‘‘அது ‘பேரரசு' படத்தின் கதை அல்ல. ‘ஜவான்’ கதையே வேறு'’ என்று அவர்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இரண்டும் வெவ்வேறு கதை என்று சங்கத்தில் ஏற்றதால் அட்லி தரப்பு நிம்மதியானது. ஆனால், இப்போது இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லலாமா என மாணிக்கம் நாராயணன் யோசித்துவருவதாகச் சொல்கிறார்கள். அவர் அப்படிச் சென்றால் ‘ஜவான்’ படத்துக்குச் சிக்கல் நேரும் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு இருக்கிறது.

கௌதம் கார்த்தி -
கௌதம் கார்த்தி -

கௌதம் கார்த்தியின் திருமணத்துக்கு அப்பா கார்த்தியின் ஆசீர்வாதம் மட்டுமே இருந்தது. அம்மாவும், வீட்டிலுள்ள மற்றவர்களும் ஆதரவு அளிக்கவில்லையாம். போகப் போக எல்லாமே சரியாகிவிடும் என்று அப்பா கார்த்திக், மகனிடம் உற்சாகமாகச் சொன்னதோடு, கவலைப்படாமல் கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னாராம். நெகிழ்ந்துபோன கௌதம், திருமணத்தின்போது ஒரு கையில் மஞ்சிமாவையும், மறு கையில் அப்பாவையும் விடாமல் பிடித்துக்கொண்டிருந்தது, வந்தவர்களையெல்லாம் நெகிழச் செய்து விட்டதாம். மொத்தத் திருமண நிகழ்வையும் உற்சாகமாக நண்பன் மாதிரி நடத்திக் கொடுத்த கார்த்திக்கைத் திருமணத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் ஆச்சர்யத்தோடு பார்த்து, ஆரத் தழுவி வாழ்த்திவிட்டுச் சென்றார்களாம்.

கோலிவுட் ஸ்பைடர்

நடித்துக் கொடுத்தோமா, பணம் வாங்கிக்கொண்டோமா எனச் சத்தமில்லாமல் போய்விடுகிற நடிகர்கள் மத்தியில் சந்தானம் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பது திரையுலகை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. சந்தானம் ஹீரோவாக நடித்த நான்கைந்து படங்கள் ரிலீஸாகத் தவித்துநிற்கின்றன. இவற்றில் இரண்டு வருடங்களாகக் கிடப்பில் இருக்கும் படங்களும் உண்டு. இதற்காக அவர் ரெட் ஜெயன்ட் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தியேட்டர் ரிலீஸ் அவர்கள் செய்ய, ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ், அமேசான் நிறுவனங்களிடம் விற்க அவர் முயன்றுவருகிறார். தன்னை நம்பிப் பணம் போட்ட தயாரிப்பாளர்கள் பிரச்னைக்குள்ளாகிவிடக் கூடாது என்ற அக்கறையே இதற்குக் காரணம்.

கோலிவுட் ஸ்பைடர்

கௌதம் மேனன் இயக்கிய ‘குயின்' வெப்சீரீஸுக்குக் கிடைத்த வரவேற்பில், ரம்யா கிருஷ்ணனை வைத்து ‘குயின் 2' உருவாகிவருகிறது. அதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது என்றும், அதன் செகண்ட் யூனிட் இயக்குநராக ‘கிடாரி' பிரசாத் முருகேசன் இருந்து வருகிறார் எனவும் முன்பே சொல்லியிருந்தோம். இப்போது ‘குயின் 2' படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என்கிறார்கள். அதில் கருணாநிதி கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கிறார் எனவும் தகவல். தவிர, பிரசாத் முருகேசன் இப்போது அதர்வாவை வைத்து தனியாக ஒரு வெப்சீரீஸ் ஒன்றையும் இயக்கிவருகிறார்.