Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

அனிகா
பிரீமியம் ஸ்டோரி
News
அனிகா

விஜய் - லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67' பட பூஜை, ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒரு சுபதினத்தில் வெகு சிம்பிளாக நடந்தது.

‘விஸ்வாசம்' படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், இப்போது கதாநாயகியாகிவிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். மலையாளத்தில் பேசப்பட்ட ‘கப்பேலா', தெலுங்கில் ‘புட்டபொம்மா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. ‘கப்பேலா'வில் அன்னாபென் நடித்த ரோலில் அனிகா நடிக்கிறார். தமிழில் ஹிப்ஹாப் ஆதியின் ஜோடியாகிறார். அந்தப் படத்தை ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார்.

விஜய் - லோகேஷ் கனகராஜின் ‘விஜய் 67' பட பூஜை, ஏவி.எம். ஸ்டூடியோவில் ஒரு சுபதினத்தில் வெகு சிம்பிளாக நடந்தது. பூஜைக்கு வந்திருந்த அத்தனை பேரின் செல்போன்களையும் அங்குள்ள நுழைவு வாயிலேயே வாங்கி வைத்துக்கொண்டுவிட்டனராம். ஒவ்வொருவரின் செல்போனுக்கும் டோக்கன் போட்டும் கொடுத்திருக்கின்றனர். ‘விஜய் 67' படப்பிடிப்பைத் தொடங்க எப்படியும் பிப்ரவரி ஆகிவிடும் என்பதால் அதற்குள் பூஜை ஸ்டில்கள் வந்துவிடக் கூடாது என்பதால்தான் இந்தக் கட்டுப்பாடாம். வரும் புத்தாண்டு அல்லது பொங்கலில் படத்திற்கான டைட்டிலை அறிவிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். இந்தப் படத்திலும் லோகேஷின் ஆஸ்தான டெக்னீஷியன் டீம் அப்படியே உண்டு.

பா.இரஞ்சித், விக்ரம் கூட்டணியின் ‘தங்கலான்' படப்பிடிப்பு மாலையில் முடிந்ததும் யூனிட் மொத்தமும் சேர்ந்து ஆட்டமும் பாட்டமுமாக இருந்துவிட்டு களைத்து இரவு உணவை முடிக்கிறார்களாம். அதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் படப்பிடிப்பை நடத்தி நிறைய காட்சிகளைப் படமாக்குகிறார்களாம். கடுமையான சண்டைக் காட்சிகளை மட்டும் இப்படி ஒருநாள் விட்டு நடத்திவிட்டு மற்ற காட்சிகளை விரைந்து முடித்துவிடுகிறார்கள். இப்போது யூனிட் மொத்தமும் குலுமணாலி போயிருக்கிறது. அங்கும் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. அநேகமாக வெகு சீக்கிரத்தில் படத்தைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்கிறார்கள்.

ஒரு காலத்தில் கோலோச்சிய படத் தயாரிப்பு நிறுவனம் ஆஸ்கார் பிலிம்ஸ். இப்போது அது கஷ்ட திசையில் போய்க்கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆஸ்காரை மீண்டும் தெம்புடன் கொண்டுவர, அதில் நடித்த அத்தனை ஹீரோக்களும் இணைந்து ஒரு படத்தில் சம்பளம் பெறாமல் நடித்துக் கொடுக்கலாமா என்று கூடிப் பேசியிருக்கிறார்கள். இதில் அந்த நிறுவனத்தில் இதுவரை நடிக்காத ரஜினிகாந்தும் சேர்ந்து தயாரிப்புக்குக் கணிசமான தொகை உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். நல்ல விஷயமாக முடியும் போலிருக்கிறதே என்று சந்தோஷப்பட்டபோது, தயாரிப்பாளர் ‘எந்தப் பிரச்னை என்றாலும் நானே பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டாராம். இப்போது ஆஸ்கார் பிலிம்ஸ் பெரிய பட்ஜெட் படம் ஒன்றைச் செய்ய அசுரத்தனமாக வேலை செய்துகொண்டு இருக்கிறதாம். பொங்கலுக்குப் புதுப் பட அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

கௌதம் கார்த்திக் திருமணத்திற்கு சில பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கௌதமின் நண்பர்கள்தான். அப்பாவின் நண்பர்களை பெருமளவில் அழைக்க வேண்டாம் என கார்த்திக் மறைமுக உத்தரவாம். குடும்பத்தில் நிறைய பேர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததில் கௌதம் கொஞ்சம் அப்செட் ஆகித்தான் இப்படிச் சொன்னாராம். கார்த்திக்கின் நண்பர்கள் இதில் வருத்தமாக, அவர்களுக்காக இன்னொரு வரவேற்பு வைக்கும் முடிவில் இருக்கிறார்கள். அப்போதாவது குடும்பத்தில் அனைவரையும் ஒரே இடத்தில் சேர்த்துவிட முனைப்பாக இயங்குகிறார் கார்த்திக். சாண் போனால் முழம் சறுக்குகிற கதையாக அவரின் சமாதான முயற்சிகள் தத்தளிக்கிறதாம்.

ஒரு காலத்தில் நடிகர் ஜெய்சங்கர் போல, இப்போது யோகிபாபுவைச் சொல்கிறார்கள். யோகி, நாள் ஒன்றுக்கு இரண்டு கால்ஷீட்டில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அதனால் ஷூட்டிங் நேரத்தில் பத்து நிமிடம் கிடைத்தாலும் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிடுகிறாராம். இடைவெளி விடாத உழைப்பில் அவரது உடல்நிலையைப் பற்றி டாக்டர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு தன் நேரத்தை அளவிட்டு நடித்து, படங்களையும் வெகுவாகக் குறைத்துவிட்டார். இருந்தும் இப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் இருபதைத் தாண்டுகிறதாம். நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு படங்கள் வைத்திருப்பது யோகிபாபு மட்டுமே என்கிறார்கள்.