கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

விக்ராந்த், ரஜினி, விஷ்ணு விஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
விக்ராந்த், ரஜினி, விஷ்ணு விஷால்

ராமராஜன் இப்போது ‘சாமானியன்' என்ற படத்தில் நடித்துவருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. அதில் கே.எஸ்.ரவிக்குமார் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்

கோலிவுட் ஸ்பைடர்

ஐஸ்வர்யா ரஜினியின் ‘லால் சலாம்' பட பூஜை கடந்த நவம்பரில் நடந்து முடிந்தாலும்கூட, அதன் படப்பிடிப்பு இம்மாதக் கடைசியில்தான் சென்னையில் தொடங்குகிறது. கிரிக்கெட் பற்றிய இந்தக் கதையில் விஷ்ணு விஷால், விக்ராந்த் தொடர்பான காட்சிகள்தான் முதலில் எடுக்கப்படுகின்றன. ரஜினி இதில் கெஸ்ட் ரோலில் நடிப்பது தெரிந்த விஷயம்தான். அவர் இப்போது ‘ஜெயிலர்' படத்தில் நடித்து வருவதால், அந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட பின்னர்தான் ‘லால் சலா'மில் பங்கேற்கிறார். அவரது போர்ஷனை பிப்ரவரியில் எடுக்கவிருக்கிறார்களாம்.

கோலிவுட் ஸ்பைடர்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதத்தில் கொண்டு வருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது. முதல் பாகம் வசூலில் சாதனை படைத்துள்ளதால், அடுத்த பாகத்தின் காட்சியமைப்புகளில் பிரமாண்டத்தை இன்னும் கூட்டிவருகிறார்கள். அதற்கான கிராபிக்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இதற்கிடையே ஒருசில காட்சிகளின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பும் ஜனவரியில் இருக்கிறதாம். அதனை சென்னையில் செட் போட்டு எடுத்துவிடலாமா, அல்லது தாய்லாந்து செல்ல வேண்டியிருக்குமா என்பது குறித்தும் ஆலோசித்துவருகிறார்கள்.

நடுராத்தியில் ஷூட்டிங் என்றாலும், அதன் இடைவேளையில் பிரியாணியை ஒரு கட்டுக் கட்டும் விஜய்சேதுபதியைத்தான் இதற்கு முன் கோடம்பாக்கம் அறியும். ஆனால் அவர் திடீரென இப்படி ஸ்லிம் ஆனது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. கடுமையான டயட், உடற்பயிற்சி... இப்படிப் போகாமல் ஆயுர்வேத ட்ரீட்மென்ட்கள் மூலம் எளிதாக எடை குறைத்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் இந்த எடைக்குறைப்புக்குப் பின்னணியில் பாலிவுட் ஹீரோ ஒருவர் இருக்கிறாராம். அவரது அன்பு அட்வைஸ்தான் எடைக் குறைப்பு காரணம். ‘‘நீங்கள் ஸ்லிம் ஃபிட்டிற்கு மாறினால், பாலிவுட்டில் பல ரவுண்ட்கள் வருவீர்கள்'' என அவர் சொன்னதால்தான் விஜய்சேதுபதி இப்படிப்பட்ட தோற்றத்திற்கு மாறியுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

ராஜீவ் மேனனின் மனைவி லதா மேனன், விளம்பரப் படத்துறையில் இயக்குநராகக் கலக்கிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது நட்பு வட்டத்தினருக்கு ஸ்பெஷல் காலண்டர் ரெடி செய்து அனுப்பி வைப்பார். சென்ற ஆண்டு காலண்டரில் அசாமில் உள்ள காசிரங்கா காண்டாமிருக சரணாலயத்தில் தான் எடுத்த புகைப்படங்களை எல்லாம் தொகுத்து டிசைன் செய்திருந்தார். இவ்வாண்டு இன்னும் ஸ்பெஷல். விதவிதமான கதவுகளுடன் மனித உறவுகளின் அன்பையும் இணைத்துக் கொடுத்திருக்கிறார். ‘‘லாக்டௌன் நேரத்தில் நாம் கதவுகளுக்குப் பின்னால்தானே அடைபட்டுக் கிடந்தோம். இப்போதுதானே நாமெல்லாம் வெளியே வர ஆரம்பித்திருக்கிறோம். இந்தக் கருத்தைத்தான் இவ்வாண்டு காலண்டரில் வலியுறுத்தியுள்ளேன்'' என்கிறார் லதா மேனன்.

வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’யை யார் திரைப்படமாக்குவது என்பதில் ரொம்ப நாள்களாக வார்த்தைப் போர் நடந்துவந்தது. அதில் இயக்குநர்கள் பாலாவுக்கும் பாரதிராஜாவிற்கும் நடந்த வாக்குவாதம் பெரும் சர்ச்சைக்குள்ளானது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்நிலையில்தான் அதனைத் தயாரிக்க ஹாட் ஸ்டார் நிறுவனம் முன்வந்தது. இயக்குநர்கள் பாண்டிராஜ், முத்தையா இருவரிடம் இயக்கச் சொல்லிக் கேட்டது. ஆனால் அவர்களுக்கு இருந்த முந்தைய கமிட்மென்ட்களால் அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். பின்னர் இந்த புராஜெக்ட்டில் சசிகுமார் உள்ளே வந்தார். அவரது இயக்கத்தில், விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் உள்ளே வந்தார். அதற்காக அவர் அடர்த்தியான நீண்ட தாடி, தலைமுடி என தென்மாவட்டத்துக்காரர் தோற்றத்திற்கு மாறினார். அவர் அந்தத் தோற்றத்திற்கு மாறி சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்னமும் ‘குற்றப்பரம்பரை' தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனால் அவருக்கு வேறு பட வாய்ப்புகள் தேடி வந்தும் அவற்றில் கமிட் ஆக முடியாமல் தவித்துவருவதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையே வேலராமமூர்த்தியின் இன்னொரு நாவலான ‘அரிய நாச்சி'யும் படமாகிறது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வரலாம் என்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

ராமராஜன் இப்போது ‘சாமானியன்' என்ற படத்தில் நடித்துவருகிறார். அதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்துவருகிறது. அதில் கே.எஸ்.ரவிக்குமார் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். ‘சாமானியன்' படத்தில் போலீஸ் ரோல் ஒன்று இருக்கிறது. அதில் கே.எஸ்.ரவிக்குமாரை நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார் படத்தின் இயக்குநர். இரண்டு நாள் கால்ஷீட்தான் என்பதால் அவர் ஒருவிதத் தயக்கத்தோடு கே.எஸ்.ரவிக்குமாரை அணுகியிருக்கிறார். ஆனால், ரவிக்குமாரோ படத்தின் கதை என்ன, தனது கேரக்டர் என்ன என்று எதையும் கேட்காமல் உடனே நடிக்கச் சம்மதித்து இயக்குநரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார். ‘‘ராமராஜன் சார் இயக்குநராக, கதாநாயகனாகக் கோலோச்சியபோது, நான் அவரது படங்களில் அசோசியேட்டாக வேலை செய்திருக்கேன். அதனால்தான் அவரது படத்திற்கு நடிக்கக் கேட்டதும் உடனே சம்மதித்தேன்'' எனப் புன்னகைக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.