
மிஷ்கின், விஷால் சந்திப்பை நடத்தி வைக்க அவர்கள் இருவரின் நண்பர்களும் முயற்சி எடுக்கிறார்கள். சமீபத்தில் ‘துப்பறிவாளன் 2'-ஐ போட்டுப் பார்த்தாராம் விஷால்.
ஹன்சிகா தன் திருமணத்திற்கு கிட்டத்தட்ட பாதி தமிழ் சினிமாக்காரர்களுக்கு அழைப்பு விட்டிருந்தார். ஆனால், பெரிய அளவில் யாரும் வரவில்லை என அவருக்கு வருத்தமாம். இதோ, இது அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி... அவரது முன்னாள் ஹீரோக்கள் பலர் இணைந்து ஹன்சிக்கு ஒரு பார்ட்டி வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் உற்சாகமாகச் செய்து வருகிறார் சிம்பு. சக ஹீரோயின்கள், ஹீரோக்கள் கூடுவதால் களைகட்டும் பார்ட்டி எனப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பார்ட்டிக்கு முன்னதாக மீடியாவினர் புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கலாம் என்ற யோசனையும் இருக்கிறதாம்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதாநாயகி காயத்ரி, மலையாளத்தில் குஞ்சாக்கோ போபனுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். ரொம்பவே குடும்பப் பாங்கான அந்தப் படத்தில் அக்கட தேச ரசிகர்களை ஈர்த்துவிட்டார். இப்போது அவருக்கு மலையாளத்தில் நல்ல கதையம்சமுள்ள பல படங்கள் தேடி வருகின்றன. இதனால் கேரளாவுக்கும் சென்னைக்குமாகப் பறப்பதைவிட, அங்கேயே தங்கி நடிப்பதற்குத் தீர்மானித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். தமிழில் நடித்துவரும் படங்களுக்கு அங்கிருந்து வந்து நடித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
ஓ.டி.டி-க்களின் வருகையால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் பெருகிவிட்டது ஒரு பக்கம் இருந்தாலும், ஹீரோயின் சென்ட்ரிக் படங்களைத் தயாரித்தவர்களின் புலம்பல்கள் கோடம்பாக்கத்தின் எட்டுத்திசையிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆன்ட்ரியா, வரலட்சுமி, ஹன்சிகா வரிசையில் உள்ள பலரும் தாங்கள் நடித்த படங்களின் புரொமோஷன்களுக்கு வருவதில்லை என்கிறார்கள். ‘‘நடித்துக் கொடுப்பதோடு எங்கள் வேலை முடிந்துவிட்டது'' என்கிறது நடிகைகளின் தரப்பு. ‘‘சமந்தா, த்ரிஷாவே அவர்களது படங்களுக்கு சேனல் சேனலாக வந்து பேட்டி கொடுக்கிறார்கள், இவர்களுக்கு என்ன?'' என்கிறது தயாரிப்புத் தரப்பு. சலசலக்கிறது கோடம்பாக்கம்.

மிஷ்கின், விஷால் சந்திப்பை நடத்தி வைக்க அவர்கள் இருவரின் நண்பர்களும் முயற்சி எடுக்கிறார்கள். சமீபத்தில் ‘துப்பறிவாளன் 2'-ஐ போட்டுப் பார்த்தாராம் விஷால். இதுவரை எடுத்தது எல்லாமே மிஷ்கின் ஸ்டைலில் வந்திருக்கிறதாம். அதையொட்டி படம் போனால்தான் படத்திற்கு உயிர் வருமாம். அதனால் அவர்கள் நட்பை சரி பண்ணி சமாதானம் செய்து வைக்க முயற்சி நடக்கிறது. இந்தச் சந்திப்பை வெளிநாட்டில் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். அனேகமாக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சந்திப்பு நடக்கப் போகிறது. அதற்குப் பிறகு மீதி ‘துப்பறிவாள'னை மிஷ்கினே முடிப்பார் எனவும், அதில் விஷால் எந்தத் தலையீடும் செய்யமாட்டார் எனவும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

எல்லா முக்கிய நடிகர்களும் சேர்ந்து போய் விஜயகாந்தைப் பார்த்து நலம் விசாரிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். அவரது உடல்நிலை சொல்லிக்கொள்ளும்படியான முன்னேற்றத்தில் இல்லை என்பதால் வீட்டில் யோசிக்கிறார்கள். இந்த அனுமதி கேட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதால் நடிகர்கள் வருத்தத்தோடு இருந்தனர். இந்நிலையில் அவர்களிடம், ‘ஈரோடு கிழக்கு தேர்தல் முடிந்த பிறகு நடிகர்கள் சந்திப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன்’ என பிரேமலதா சொல்லியிருப்பதாகத் தகவல். தவிர, இயக்குநர்கள் சங்கத்திலிருந்தும் விஜயகாந்தை சந்திக்க கோரிக்கை அனுப்பியிருக்கிறார்கள்.

நட்புக்காக ஒரு படம், உதவி இயக்குநர்கள் இயக்குநராவதற்காக வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டதற்காக ஒரு படம்.. என சகட்டுமேனிக்குப் படங்களில் நடித்துவருகிறார் காமெடி நடிகர். இயக்குநர் இமயத்துடன் அவர் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இடையே இமயத்திற்கு உடல்நலம் சரியில்லாமல்போனதால், அந்தப் படப்பிடிப்பையே தள்ளி வைத்தனர். இந்நிலையில் இமயம் மறுபடியும் நடிக்க வந்துவிட்டார். காமெடி நடிகர் காம்பினேஷன் போர்ஷனைத் தொடங்கிவிடலாம் என நினைத்தவர்களுக்கு ஷாக்! இவர்களுக்கான தேதிகள் காமெடியிடம் இல்லை. அவரை படப்பிடிப்புக்குப் பலமுறை கூப்பிட்டுப் பார்த்தும், காமெடியால் நேரம் ஒதுக்க முடியாத சூழல். இந்நிலையில் இமயத்தைப் படப்பிடிப்பிற்கு வரவழைத்து அவரை காமெடி நடிகரிடம் பேசி, வரவழைத்துவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். இதுபற்றி இமயத்திடம் சொல்லவும், வெகுண்டு எழுந்துவிட்டார் இமயம். ‘‘காமெடி எப்போ வர்றாரோ அப்ப சொல்லு, நான் வர்றேன்’' எனச் சொல்லி கிளம்பிப் போய்விட்டார். இப்படியாக, சமீபத்தில்தான் இருவரது போர்ஷனையும் ஒரு வழியாக எடுத்து முடித்திருக்கிறார்கள்.