
நடிகராக அவதாரமெடுக்கிறார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. `அவள் பெயர் தமிழரசி’, `விழித்திரு’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த மீரா கதிரவன்,
கமல் - ஷங்கர் கூட்டணியின் ‘இந்தியன் 2’-ல் இளவயது கமலின் போர்ஷனும் இருக்கிறது. கமல், ‘பிக்பாஸ்’-ஸில் கவனம் செலுத்தி வந்ததால், அந்த போர்ஷனைப் படமாக்காமலேயே இருந்தனர். இந்நிலையில் இப்போது ‘பிக்பாஸ்’ முடிந்திருப்பதால், ஃப்ரீ ஆகிவிட்டார் கமல். மாதத்தில் பத்து நாள்கள் ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு, அடுத்த பத்து நாள்கள் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு என தேதிகள் ஒதுக்கி நடித்துவந்தவர், இப்போது முழுக்கவே ‘இந்தியன் 2’-ல் கவனம் செலுத்திவருகிறார். கடப்பா, திருப்பதிப் பகுதிகளில் நடந்துவரும் இதன் படப்பிடிப்பில் இளம் வயது கமலின் போர்ஷன்களையும் படமாக்கி வருகிறார்கள்.
‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்காக நேபாளம் பறந்திருக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சி அங்கேதான் ஷூட் செய்யப்படுகிறது என்கிறார்கள். படத்தில் ரம்யாகிருஷ்ணன், தமன்னா இருவரில் தமன்னாவின் போர்ஷன்கள் குறைவு என்கிறார்கள். நேபாளப் படப்பிடிப்பில் ரஜினியுடன் சஞ்சய்தத் மோதும் காட்சிகளைப் படமாக்க உள்ளனர் என்ற பேச்சும் உள்ளது.
மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த சமந்தா, ‘சாகுந்தலம்' படத்தை மொத்தமாக முடித்துக் கொடுத்த பின்னரே, அதன் சிகிச்சைக்காகச் சென்றார். இப்போது அவர் நலம்பெற்றுவருவதால் இந்தியில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஃபேமிலிமேன்' வெப்சீரிஸுக்குப் பிறகு அமேஸானுக்காக அவர் நடிக்கும் சீரிஸ் இது. சமந்தாவுடன் வருண் தவானும் நடிக்கிறார். அடுத்த மாதம் மும்பைப் பகுதியில் தொடங்கும் இந்த வெப்சீரிஸ், செர்பியா உட்பட பல நாடுகளில் படமாகிறது என்கிறார்கள்.

முன்பெல்லாம் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படம் என பட விளம்பரங்கள் வெளியானால், ‘‘அதில் நான் ஹீரோ இல்லப்பா...’’ எனச் சொல்லிவந்தார் அவர். ஆனால், ‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி’ போன்ற கதைகள் கொடுத்த நம்பிக்கையில் காமெடிக்கு இடையே கதை நாயகனாகவும் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். ‘‘சினிமாவில் ஆரம்பக்காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்... நான் எப்போதுமே காமெடி நடிகன்தான். அதேசமயம், இந்த முகத்தில்கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்கத் தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க” என்கிறார் யோகிபாபு.
நடிகராக அவதாரமெடுக்கிறார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. `அவள் பெயர் தமிழரசி’, `விழித்திரு’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த மீரா கதிரவன், அடுத்து பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். இஸ்லாமியர் பற்றிய அழுத்தமான ஒரு கதை இது என்கிறார்கள். அதில் இஸ்லாமியத் தந்தை ஒருவராக கஸ்தூரிராஜா நடிக்கிறார். இதற்காக அவர் சில மாதங்களாக தாடி, மீசை வளர்த்து வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார்.
‘குரங்கு பொம்மை’யை இயக்கிய நித்திலன், நீண்ட வருட இடைவெளிக்குப் பின், இப்போது விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார். ‘பாய்ஸ்’ மணிகண்டனும் அதில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘காந்தாரா’ படத்தின் மூலம் தமிழில் கவனம் பெற்றாலும் கன்னடத்தில் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளராக இருக்கும் அஜனீஷ் தான், நித்திலன் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இன்னொரு தகவல், ‘குரங்கு பொம்மை’ மூலம்தான் அஜனீஷ், தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.