கட்டுரைகள்
Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி

இயக்குநர் கரு.பழனியப்பனின் பெற்றோருக்கு 75 வயது நிறைவிற்கான விழா காரைக்குடியில் நடந்தது. பெரும் திரளாக சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜய்யின் நண்பர்கள் முயற்சியால் ஒரு சந்திப்பு அரங்கேறியிருக்கிறது. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபாவோடு சந்திப்பை ‘வாரிசு' பாடல் வெளியீட்டில் அவரின் நண்பர்கள் திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள். இதை விஜய் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். அப்பா, அம்மா மீது கடும் மன வருத்தத்தில் இருந்தார். அதனால் ஏற்கெனவே எடுக்கப்பட்ட சந்திப்பிற்கான முயற்சிகளுக்கு விஜய் ஆதரவளிக்கவில்லை. அப்படியும் நண்பர்கள் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்களாம். அம்மாவிடம் ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொண்டார், எதுவும் பேசவில்லை. அப்பா அவரைக் கட்டிப்பிடிக்கக் கையை நீட்ட, சின்னதாக ஒரு அணைப்பு கொடுத்துவிட்டு அடுத்தடுத்து விருந்தினர்களைச் சந்திக்கப் போய்விட்டார். இது இணையப்பரப்பில் ரசிகர்கள் மத்தியில் மனத்தாங்கலை ஏற்படுத்தியிருக்கிறதாம். சில நிமிடங்களாவது அம்மாவோடு பேசியிருக்க வேண்டும் என்பது பெரும் ஆதங்கமாக ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அநேகமாக பொங்கல் சமயத்தில் அம்மா, அப்பாவோடு கட்டாயம் மறு சந்திப்பு நடக்கும் எனப் பேசிக்கொள்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

‘விஜய் 67' படத்தின் டயலாக்குகளை ரொம்பவே கூர்மையாகத் தீட்டிவருகிறார் லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர்', ‘விக்ரம்' படங்களுக்கு அவருடன் இணைந்துள்ளார் ‘ஆடை' இயக்குநர் ரத்னகுமார். இந்தக் கூட்டணியுடன் சித்தார்த்தின் ‘ஜில் ஜங் ஜக்' படத்தின் இயக்குநரான தீரஜ் வைத்தியும் சேர்ந்துகொள்ள, டயலாக்குகள் செம ஷார்ப்பாகிவருகின்றனவாம்.

சிம்புவிற்குப் பெண் தேடும் படலத்தில் மிகவும் தீவிரமாக இருக்கிறார் அப்பா டி.ராஜேந்தர். நாலாபக்கமும் சொந்தக்காரர்களை அனுப்பிப் பெண் தேடுகிறார்கள். தன் சமூகத்திலேயே பெண் தேடுவதில் தீர்மானமாக இருக்கிறார் டி.ஆர். காதல் திருமணத்திற்கு வாய்ப்பில்லை என தந்தையிடம் சிம்பு சொல்லிவிட்டதால், மயிலாடுதுறை பக்கமாக டி.ஆரும், உஷா ராஜேந்தரும் தொடர்ந்து பெண் பார்த்துவருகிறார்கள். ஆக, வரும் வருடத்தில் டி.ஆர் வீட்டில் கெட்டிமேளம் கேட்கும் என்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

குடும்பத்தினரோடு ஸ்பெயினில் ரிலாக்ஸ் ட்ரிப் அடித்து வந்திருக்கிறார் கார்த்தி. வந்த வேகத்தில் ‘ஜப்பான்' படப்பிடிப்புக்கும் கிளம்பிவிட்டார். சென்னைத் தீவுத்திடலில் அரங்கம் அமைத்து, படப்பிடிப்பு நடந்துவருகிறது. பொங்கலுக்கு அங்கே பொருட்காட்சி வரவிருப்பதால், அதற்குள் அங்கே படப்பிடிப்பை முடித்துவிடத் திட்டமிட்டு வருகிறார்கள். இதனையடுத்து அந்தமான் பறக்கிறது படக்குழு. அங்கேயும் சுற்றியுள்ள தீவுகளுக்குக் குடும்பத்தினருடன் விசிட் அடிக்கலாமா எனவும் யோசித்துவருகிறார் கார்த்தி.

இயக்குநர் கரு.பழனியப்பனின் பெற்றோருக்கு 75 வயது நிறைவிற்கான விழா காரைக்குடியில் நடந்தது. பெரும் திரளாக சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். செட்டிநாட்டு மரபுப்படி விருந்துகள் அமர்க்களப்பட்டன. பெருவாரியான அமைச்சர்களும் கலந்துகொண்டார்கள். சென்னையிலிருந்து உதயநிதி இதற்காகவே காரைக்குடிக்கு வருகைபுரிந்தார்.

கோலிவுட் ஸ்பைடர்

கரு.பழனியப்பன் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்காகச் செய்த பிரசாரம் நினைவுகூரப்பட்டது. அனேகமாக அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலோகரு.பழனியப்பன் தி.மு.க சார்பாக நிறுத்தப்படுவார் என்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர்

சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஆர்வமாக இருக்கிறார் கோவை சரளா. ‘செம்பி' அவருக்கு 800-வது படமாகும். தனது ஆன்மிகப் பயணத்தின் ஒரு பகுதியாக இப்போது இமயமலை சென்று வந்திருக்கிறார். ‘‘இந்தப் பயணம் ரொம்பவே கடினமான பயிற்சியாகவும் இருந்தது. ஈசன் கொடுத்த வாய்ப்பாகவும் பார்க்கறேன். அதிலும் பஞ்ச கேதார ஸ்தலங்களையும் தரிசித்து வந்தது மறக்க முடியாத அனுபவம்...'' என பக்தியில் உருகுகிறார் கோவை சரளா.