
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2' படத்தின் வெளியீட்டு தேதியை ஏப்ரல் 28 என அதிகாரபூர்வமாக அறிவித்ததன் பின்னணி, படத்திற்கான கிராஃபிக்ஸ் வேலைகள் நிறைவடையும் கட்டத்தில் இருந்ததுதானாம்
தேனிலவை ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ஹன்சிகா. இதற்காக தன் கைவசமிருந்த படங்களை எல்லாம் முடித்துக்கொடுத்துவிட்டே சென்றிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் தாய்லாந்திலும், வரலட்சுமி ஸ்பெயினிலும், மாளவிகா மோகனன் உத்ராஞ்சல் மாநிலத்திலும் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். முன்னதாக விஜய் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக இம்முறை லண்டன் பறக்காமல் பாங்காக்கில் கொண்டாடியிருக்கிறார். கூடவே அவரின் நண்பர்களும் சென்று திரும்பியிருக்கிறார்கள்.
தேடி வந்த இரண்டு மூன்று படங்களையும் தள்ளி வைத்துவிட்டுத்தான் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, ரஜினியின் படத்திற்காகக் காத்திருந்தாராம். அவர் கதை சொன்னபோது, ரஜினி ரசித்த விதத்தையும், அதைக் கேட்டு முடித்த பிறகு அவர் பாராட்டித் தட்டிக்கொடுத்ததையும் இயக்குநரால் இன்னமும் மறக்கவே முடியவில்லையாம். அப்படியெல்லாம் கேட்டுவிட்டு இப்போது கொஞ்சம் பொறுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டதால் இயக்குநர் அப்செட்டாகிவிட்டார். இயக்குநருக்காகக் காத்திருந்த நடிகர்களும் இப்போது வேறு வேறு புராஜெக்ட்களில் செட்டிலாகிவிட்டதால் உடனே ஆரம்பிக்க ‘நோ' சொல்லிவிட்டார்களாம். தெலுங்குப் பக்கம் அழைப்பு இருப்பதால் போய் விடலாமா என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார் தேசிங்கு. தெலுங்கு நடிகர் நானியின் அழைப்பும் அதில் ஒன்றாம்.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2' படத்தின் வெளியீட்டு தேதியை ஏப்ரல் 28 என அதிகாரபூர்வமாக அறிவித்ததன் பின்னணி, படத்திற்கான கிராஃபிக்ஸ் வேலைகள் நிறைவடையும் கட்டத்தில் இருந்ததுதானாம். இப்போது டப்பிங் வேலைகளைத் தொடக்கியிருக்கிறார்கள். சின்னச் சின்ன ரோலில் உள்ளவர்கள் டப்பிங் பேசிவிட்டார்கள். பெரிய நடிகர்களிடம் தேதிகள் ஒதுக்கிக் கேட்டுள்ளனர். அவர்களின் தேதிகளைப் பொறுத்தே, டப்பிங்கை வைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ஜெயம் ரவி இப்போது இரண்டு படங்களில் நடித்துவருகிறார். த்ரிஷா, விஜய் படப்பிடிப்பில் இருக்கிறார், விக்ரம் ‘தங்கலான்' படத்திலும், கார்த்தி ‘ஜப்பான்' படத்திலுமாக பிஸியாகிவிட்டதால் ஹீரோக்களின் வசதியைப் பொறுத்து டப்பிங்கை வைத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கிறார் மணிரத்னம்.
‘‘கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைந்தால் கண்டிப்பாகப் பண்ண ரெடி’' என ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட்டில் பேட்டி கொடுத்ததற்கு பலனாக ‘சாத்ரிவளி' அமைந்துவிட்டது. அதில் அவர் ஆசிரியையாக நடித்திருக்கிறார். அந்தப் படம் ஜனவரி 20-ல் வெளியாக இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, ரகுலுக்கு சின்ன சந்தோஷமும் உண்டு. அவர் நடித்திருந்த ‘இந்தியன் 2', ‘அயலான்', ‘அக்டோபர் 31st லேடீஸ் நைட்' படங்கள் எதுவும் சென்ற ஆண்டு வெளியாகவில்லை. ஆனால், அவை எல்லாம் இவ்வாண்டு அடுத்தடுத்து வெளியாக இருப்பதுதான் அந்த சந்தோஷத்திற்குக் காரணம். அதிலும் ‘இந்தியன் 2' முதலில் வெளியாகும் என்பதால், இதற்கு அடுத்தே, தமிழில் கமிட் ஆக முடிவு செய்திருக்கிறார் ரகுல்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சீக்கிரம் கட்டடத்தைக் கட்டி முடித்து தீபாவளிக்குள் திறக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டார்களாம். விஷால் கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறார். கார்த்தியும், பூச்சி முருகனும், நாசரும் இணைந்து வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். வங்கிக்கடனைத் திருப்பித் தருவதற்கான பேங்க் விண்ணப்பத்தில் இவர்கள் மூன்று பேர் மட்டும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். கடந்த ஒரு வாரமாகக் கட்டட வேலைகளில் முன்பு படிந்த துரு போன்றவற்றை எடுத்துவிட்டு நூறு பேருக்கு மேல் தொழிலாளர்கள் இறங்கி வேலை செய்கிறார்கள். சுத்தம் செய்த பிறகு, இறுதிக் கட்டுமானம் வங்கிக்கடன் வந்தவுடன் தொடங்குமாம். அதன் பின்னர், வருகிற வருமானத்தை வைத்து இரண்டே வருடங்களில் வங்கிக்கடனை அடைத்துவிடலாம் என்கிறார்கள்.
காதலில் விழுந்து விழுந்து படம் எடுத்த டைரக்டர் இப்போது தொழிலில் ஒன்றாமல் இருந்துவருகிறாராம். அடிக்கடி கோபம் வந்து எந்த ஒரு சாதாரண பிரச்னைக்கும் கொதித்து எழுகிறாராம். அதனால் தற்காலிகமாக அவரது பட வேலைகளை நிறுத்திவிட்டு அவரை அமைதிப்படுத்த முயற்சி நடக்கிறதாம். அவ்வளவு பிஸியிலும் தம்பி நடிகர், அண்ணன் வீட்டிற்குப் போய் அவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினாராம். ‘‘இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு நானே ஒரு படம் தருகிறேன், கவலைப்படாதே அண்ணே’’ என்று தட்டிக்கொடுத்துவிட்டு வந்ததாகக் கேள்வி. ‘இனிமேல் அடுக்கடுக்காக ட்வீட் போடமாட்டேன்’ என்ற உறுதிமொழி கேட்டு வாங்கிவிட்டுத்தான் வந்தாராம் தம்பி. இனிமேல் பிரச்னை இருக்காது என்ற நிம்மதியில் இருக்கிறார்கள்.