
விக்ரம் - பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’ படப்பிடிப்பைச் சென்னையில் உள்ள பிலிம் சிட்டி ஒன்றில் மும்முரமாக எடுத்து வருகிறார்கள்
கமல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட தி.மு.க கூட்டணியோடு இணைவது உறுதியாகிவிட்டது. அதோடு தமிழகம் முழுவதும் சென்று கூட்டணிக்குத் தேர்தல் பிரசாரம் செய்யவும் அவரிடம் கேட்கப் போகிறார்களாம். அதனால் இந்த வருடத்துக்கான திட்டங்களைக் கச்சிதமாக முடித்துக்கொண்டு தேர்தலுக்குத் தயாராகப்போகிறார் கமல். ‘இந்தியன் - 2' படத்தைத் துரிதமாக முடிக்கும்படி ஷங்கரை முடுக்கி விட்டிருக்கிறார் கமல். வரும் செப்டம்பருக்குள் ‘இந்தியன் -2'ன் எல்லா வேலைகளையும் முடித்துக்கொள்ள ஆயத்தமாகிவிட்டார். தங்கள் தயாரிப்பில் இருக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான பணிகளையும் விறுவிறுப்பாகச் செய்வதற்கும், அவற்றைப் பிரித்துப் பார்த்துக்கொள்வதற்கும் தனித்தனி டீம்களை உருவாக்கவும் யோசித்துவருகிறார்.

தமிழ்நாட்டிலிருந்து பாதிக்கும் மேல் ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள் தற்காலிகமாக ஹைதராபாத்தில் குடிபுகுந்து இருக்கிறார்கள். அஞ்சலி நிரந்தரமாகவே ஹைதராபாத்தில் வீடு வாங்கிவிட்டார். வெங்கட் பிரபு செய்துகொண்டிருக்கும் படத்திற்கு மேலாக அடுத்த படமும் கிடைத்திருக்கிறதாம். அதனால் அங்கேயே வீடு ஒன்று வாங்கிவிடலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதே மாதிரி கே.வி.குகன் மாதிரியான ஏழெட்டு ஒளிப்பதிவாளர்களும் அங்கேயே படங்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். திட்டமிட்ட படப்பிடிப்பு, தாராளமான சம்பளம் ஆகியவைதான் காரணம் என்கிறார்கள்.

விஜய் தன் மகனுக்கு இப்போது நடனப் பயிற்சியும் அளிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்காக அவர் நண்பர் ஒருவர், மும்பையில் இருந்து நுட்பமான ஸ்டெப்களைச் சொல்லித் தரும் மாஸ்டர் ஒருவரை வரவழைத்திருக்கிறாராம். சனி, ஞாயிறு இரண்டு நாள்களிலும் காலையில் இந்தப் பயிற்சி நடக்கிறதாம். அதோடு தமிழ் உச்சரிப்பைப் புலவர்களை வைத்துத் தெளிவாக்கவும் பயிற்சி நடக்கிறது. வெளிநாட்டில் மகன் படித்து வந்ததால் அதிகமும் ஆங்கிலம் பேசி வருவதால் இந்தச் சிறப்புப் பயிற்சி நடக்கிறது. மகன் ஒவ்வொரு பயிற்சியிலும் மேம்பட்டுவருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய். இத்தகைய அவரது முயற்சிகள் அப்பா சந்திரசேகர் அவருக்குப் பயிற்சி கொடுத்ததுபோல் இருக்கிறது என்று அவரின் நண்பர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு விஜய், தனுஷ் வாரிசுகள் ரெடியாவதுதான் உண்மை.

கமலின் ‘விக்ரம்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டின் தாறுமாறான வெற்றிக்குக் காரணம், அவை மல்டி ஸ்டார் படங்கள் என்பதால்தான் என்பதை ‘ஜெயிலர்’ டீம் நன்கு உணர்ந்திருக்கும்போல... இந்த லாஜிக்கையே தயாரிப்பாளர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் நெல்சன். அப்படித்தான் ‘ஜெயிலரி’ல் சிவராஜ்குமார், மோகன்லால், ‘புஷ்பா’ சுனில் எனத் தென்னிந்திய நடிகர்கள் ஆன் போர்டு வந்திருக்கிறார்கள். அடுத்து பாலிவுட் நடிகர்களும் படத்தில் இணையவிருக்கிறார்கள் என்கிறார்கள். அனேகமாக சஞ்சய் தத் அல்லது ஜாக்கி ஷெராப் இருவரில் ஒருவர் இணையலாம் என்றும் சொல்கிறார்கள்.
அப்பாவாகியிருக்கும் டைரக்டர் இன்னும் அஜித் படத்தை இயக்குவதற்கான முழுத் தயாரிப்பில் இல்லையாம். நடிகரிடம் ஒன்லைன் மற்றும் சில பகுதிகளை மட்டும் விவரித்துவிட்டே சம்மதம் வாங்கி விட்டாராம். அவசர அவசரமாக இப்போதுதான் ஸ்கிரிப்ட்டை இறுதி செய்யும் வேலையில் பரபரப்பாக இருக்கிறார் டைரக்டர். அவர் இதற்கு முன் சூர்யா, சேதுபதியோடு செய்த படங்கள் பெரும் பொருட்செலவில் செய்யப்பட்டாலும் கையை பயங்கரமாகக் கடித்துவிட்டன. இம்முறை அப்படி ஆகிவிடக்கூடாது என்பதால், பக்காவாக எல்லாவற்றையும் ரெடி செய்துகொண்டு ஷூட்டிங் போகலாம் என்று சொல்லிவிட்டதாம் லண்டன் நிறுவனம். அதனால் நடுவில் ஒரு பைக் ட்ரிப் போய்விட்டு வந்துவிடலாமா என்று அஜித்குமார் தீவிர யோசனையில் இருக்கிறாராம்.

விக்ரம் - பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’ படப்பிடிப்பைச் சென்னையில் உள்ள பிலிம் சிட்டி ஒன்றில் மும்முரமாக எடுத்து வருகிறார்கள். அங்கே, குடிசைகள் நிறைந்த ஒரு பழங்கால கிராமத்தையே செட் போட்டுள்ளனர். படத்தின் கதைக்களமான 19-ம் நூற்றாண்டு தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டு நடித்துவருகிறார் மாளவிகா மோகனன். சென்ற மாதத்தில் திருவண்ணாமலை ஏரியாவில் நடந்துவந்த படப்பிடிப்பு, பின்னர் சென்னையில் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், பொங்கலுக்காக படப்பிடிப்பு பிரேக் விடப்பட்டு, இப்போது அதே லொகேஷனில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.