
‘லவ் டுடே' இந்தியில் ரீமேக் ஆகிறது. அதன் கதாநாயகி இவானா ரோலில் அங்கு சாரா அலிகான் நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அஜித் - லைகா இணையும் ‘ஏகே 62' படத்தின் இயக்குநராக பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மகிழ்திருமேனி ஒப்பந்தமாகிவிட்டார். அஜித்திடம் அவர் இரண்டு ஒன்லைன் கதைகள் சொன்னதில், இரண்டுமே அஜித்திற்குப் பிடித்திருக்கிறது. லைகா தரப்பில் மகிழுக்குத் தனி அலுவலகம் அமைத்துக் கொடுத்துவிட்டார்கள். அந்த அலுவலக பூஜைதான் ‘படத்திற்கான பூஜை’ எனச் செய்திகளாக உலா வந்தது. முழுக்கதை ரெடியானதும்... அதாவது, அடுத்த மாதம் முதல் வாரத்தில் ‘ஏகே 62' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் இவர்கள் வரிசையில் ஆண்ட்ரியாவும் இணைந்துவிட்டார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முதலிடம் கொடுத்து வரும் அவர், ‘பிசாசு 2', ‘மாளிகை', ‘கா' என மூன்று படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். அடுத்து அவர் தினேஷ் செல்வராஜ், பாபி ஆண்டனியின் இயக்கத்தில் படங்கள் நடிக்கிறார். அந்தப் படங்களும் ஹீரோயின் சென்ட்ரிக்தானாம்.
கார்த்தியின் ‘ஜப்பான்' படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, அடுத்து சென்னையில் நடக்கிறது. இதற்கடுத்து அவர் நலன் குமாரசாமி, மற்றும் ‘96' பிரேம்குமார் படங்களில் நடிக்கிறார். இதில் நலனின் பட பூஜை விரைவில் நடைபெறும் என்றும், ஒரு சில வாரங்களில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார் நலன் என்றும் தகவல்.
மிஷ்கினின் ‘பிசாசு 2' கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. படத்தை வருகிற மே மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுவருகிறார்கள். இதற்கிடையே மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ‘டெவில்' படத்திற்கும் இசையமைத்து முடித்துவிட்டதால், நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்' படத்தை அடுத்து விஜய்யின் ‘லியோ'விலும் நடித்துவருகிறார். இதற்காக விரைவில் காஷ்மீர் பறக்கிறார் அவர்.

‘லவ் டுடே' இந்தியில் ரீமேக் ஆகிறது. அதன் கதாநாயகி இவானா ரோலில் அங்கு சாரா அலிகான் நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், நிறைய பட வாய்ப்புகள் இவானாவைத் தேடிச் செல்கின்றன. இப்போது தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்' படத்தில் நடித்து வரும் இவானா, அடுத்து நான்கைந்து கதைகள் கேட்டு வைத்திருக்கிறார். கூடுதல் தகவல்: ‘எல்.ஜி.எம்.' படத்துக்குப் பிறகு தமிழில் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறது தோனியின் நிறுவனம்.

பாலாவின் ‘வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகி, பின் அதர்வா அதில் நடிப்பதாகத் தகவல்கள் பரவின. ஆனால், மீண்டும் பாலாவிடம் சிக்கிக்கொள்ள விரும்பாத அதர்வா, ‘கைவசம் பல படங்கள் இருக்கின்றன' எனச் சொல்லி ஒதுங்கிவிட்டார். இப்போது அருண்விஜய்யிடம் பேசிவருகிறார் பாலா. அருண்விஜய் இப்போது ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில், ‘அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்துவருகிறார். இதனை முடித்துக் கொடுத்துவிட்டு, பாலாவின் ‘வணங்கான்' படத்துக்குச் செல்வார் என்ற பேச்சும் உள்ளது. இதற்கிடையே மகிழ்திருமேனியின் நண்பரான அருண்விஜய், அஜித்தின் ‘ஏகே 62'-ல் நடிக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.