
`மாவீரன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமியின் படத்திற்காக ரெடியாகிவிட்டார் சிவகார்த்திகேயன்.
சூர்யாவின் `வாடிவாசல்' படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார் வெற்றிமாறன். படத்தில் நுணுக்கமான அனிமேஷன் காட்சிகள் அதிகம் இருப்பதால், அதை வடிவமைக்க லண்டன் பறந்திருக்கிறார். சூர்யாவின் `கங்குவா' அனிமேஷன் மோஷன் போஸ்டர் வீடியோ போல, `வாடிவாசல்' டைட்டிலை அறிவிக்கவும், ஜல்லிக்கட்டு வரலாற்றைப் படத்தில் அனிமேஷனாக விளக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் வெற்றி.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவார் எனப் பேச்சு இருந்தது. ஆனால், அதற்கான வேலைகள் எதுவும் டேக் ஆஃப் ஆகவில்லை. அடுத்து, விஷாலை இயக்குகிறார் என்றார்கள். ஆனால், விஷாலோ ஹரியின் படத்திற்குச் சென்று விட்டார். இந்நிலையில், அல்லு அர்ஜுனைச் சந்தித்திருக்கும் முருகதாஸ், அவருக்கு பக்கா ஆக்ஷன் கதை ஒன்றையும் சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம்.
`மாவீரன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமியின் படத்திற்காக ரெடியாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அது, ராணுவம் தொடர்பான கதை என்பதால், மும்பை சென்று மிலிட்டரி டிரெயினிங்கை ஒரு கை பார்த்து வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். படப்பிடிப்புக்காக மொத்த யூனிட்டும் விரைவில் காஷ்மீர் பறக்கவிருக்கிறது.

சரத்குமார், இப்போது நடித்துவரும் `த ஸ்மைல் மேன்', அவரின் 150--வது படம். கைவசம் நான்கைந்து படங்களுடன் பிஸியாக இருக்கும் சரத், ``நாயகனாக நடித்த காலத்தைவிட, இப்போது அதிக படங்கள் நடித்துவருகிறேன். வெப் சீரிஸ், பிறமொழிப் படங்கள் என பம்பரமாகச் சுழன்றுவருகிறேன். அரசியல் பற்றி நிறைய கேள்விகளும் வருகின்றன. 2026-ல் அதுபற்றி மாஸான அறிவிப்பு வரும்'' என்கிறார்.
நீண்ட வருட இடைவெளிக்குப்பின் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கவிருக்கிறார் அனுஷ்கா. சமீபத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய் சொன்ன கதை பிடித்து, கமிட் ஆகியிருக்கிறார். அனுஷின் `இஞ்சி இடுப்பழகி' படத்திற்குப் பின் அதிகரித்த அவரது உடல் எடையைக் குறைக்க பல வருடங்களாகவே தீவிர முயற்சி செய்துவரும் அவர், உடல் எடையைக் குறைத்த பின்பே, விஜய்யின் படத்திற்கு வருவார் என்கிறார்கள்.

`லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன், அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். தன்னுடைய உதவியாளர் இயக்கும் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். இதுவரை நான்கு கதைகள் ஓகே செய்து வைத்திருக்கும் பிரதீப், அவரிடம் கதை சொல்லவரும் இயக்குநர்களிடம் ``ஒரு வருஷம் வெயிட் பண்ணுங்க பிரதர்'' என்பதால், அந்த இயக்குநர்கள் கவின் பக்கம் சாய்வதாகப் பேச்சு.