Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: பாலா படத்தில் சூர்யாவின் புது கெட்டப்; கைகோக்கும் வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன்!

கோலிவுட் ஸ்பைடர்

ஒன்றுகூடும் இளையராஜா - கங்கை அமரன் குடும்பங்கள்; பாலா - சூர்யா பட அப்டேட்; கமல் vs விஜய் சேதுபதி; ஷங்கர் - மணிரத்னம் தயாரிக்கும் படம்; விறுவிறு மோடில் AK 61... இந்த வாரம் கோலிவுட் ஸ்பைடரில் என்ன ஸ்பெஷல்?

Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: பாலா படத்தில் சூர்யாவின் புது கெட்டப்; கைகோக்கும் வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன்!

ஒன்றுகூடும் இளையராஜா - கங்கை அமரன் குடும்பங்கள்; பாலா - சூர்யா பட அப்டேட்; கமல் vs விஜய் சேதுபதி; ஷங்கர் - மணிரத்னம் தயாரிக்கும் படம்; விறுவிறு மோடில் AK 61... இந்த வாரம் கோலிவுட் ஸ்பைடரில் என்ன ஸ்பெஷல்?

கோலிவுட் ஸ்பைடர்

இளையராஜாவும் கங்கை அமரனும் சந்தித்தது வைரலாக, அடுத்து அவர்கள் குடும்பங்களிலும் சந்தோஷம் பெருகியிருக்கிறது. இந்தப் பெரிய சந்திப்பிற்குப் பிறகு இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு கூடலுக்கு ஏற்பாடு செய்யலாமா என்று கேட்க சகோதரர்கள் இருவருமே ஓகே சொல்லிவிட்டார்கள். இந்த மாதக் கடைசியில் எல்லோரும் ஒரே இடத்தில் குழுமி சந்தித்துப் பேசி, இத்தனை நாள் இடைவெளியைக் குறைக்கத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். கிழக்கு கடற்கரைச் சாலையில்தான் அந்தச் சந்திப்பு நடக்க இருக்கிறது. அதனால் இந்த மாதத்தின் கடைசி மூன்று நாள்களை ஃப்ரீயாக வைத்திருக்கச் சொல்லிவிட்டார்களாம். வாரிசுகள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். விரைவில் ஒரு முழுமையான குடும்பப் படம் எடுங்க!

இளையராஜா - கங்கை அமரன்
இளையராஜா - கங்கை அமரன்

இயக்குநர் சங்கத் தேர்தல் கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல், லாக்டௌன் காரணமாக அந்தத் தேர்தலை தள்ளி வைத்தனர். இப்போது மீண்டும் அதற்கான தேதியை அறிவித்துவிட்டனர். இம்மாதம் 27ம் தேதி சென்னையில் உள்ள சங்கத்தில் தேர்தல் நடக்கிறது. 'புது வசந்தம்' அணி சார்பில் தலைவராக ஆர்.கே.செல்வமணியும், 'இமயம்' அணி சார்பில் தலைவராக கே.பாக்யராஜும் போட்டியிடுகின்றனர். இதில் செல்வமணிக்கு தனது ஆதரவை தெரிவித்த இயக்குநர் விக்ரமனிடம் பலரும் "நீங்களே மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டிருக்கலாமே" எனக் கேட்க... "இப்படி ஒரு அன்போடு ஒதுங்கறதுதான் நல்லதுனு நினைக்கறேன்" எனப் புன்னகையோடு சொல்லிவிட்டாராம் விக்ரமன். அலெக்ஸா ப்ளே 'நட்சத்திர ஜன்னலில்' சாங்...

இயக்குநர் பாலா நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யாவை வைத்து ஸ்கிரிப்ட் தயார் செய்து மேலோட்டமாக அது ஓகே ஆகியிருந்தது. இப்போது முழு ஸ்கிரிப்டையும் சொல்லி சூர்யாவை சந்தோஷப்படுத்தி விட்டார் பாலா. ஆனால், போடவேண்டிய கெட்டப்பிற்காகக் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார் சூர்யா. இந்தப் புது கெட்டப் மிரட்டலாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதேசமயம், படம் துரித காலத் தயாரிப்பாக இருந்தால் நல்லது என ஹீரோ அபிப்ராயப்பட, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் பாலா. ஆறு மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பாலா 2.0!

விஜய் சேதுபதி - கமல்ஹாசன்
விஜய் சேதுபதி - கமல்ஹாசன்

'விக்ரம்' படத்தில் கமலுடன் சரிக்கு சரி மோதும் வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. சரியான வில்லன் வேடம் என்கிறார்கள். முதல் நாளே வசனங்களைக் கொடுத்து அனுப்பினால் ஏகப்பட்ட பாவனையில் பேசிக்காட்டி நடிக்கிறாராம். கமல் - விஜய் சேதுபதி நடித்த ஏழெட்டு நாள்களில் ஷூட்டிங் பார்க்க வரும் யூனிட்காரர்களின் நெரிசலைத் தாங்க முடியவில்லையாம். படத்தின் ஹைலைட்டாக இவர்களின் காட்சிகள் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள். விக்ரம் vs வேதா!

ஷங்கர், மணிரத்னம் மற்றும் பிற இயக்குநர்கள்
ஷங்கர், மணிரத்னம் மற்றும் பிற இயக்குநர்கள்
File Photo

ஷங்கர், மணிரத்னம் தலைமையில் இரு மாதத்திற்கு ஒரு முறை 20 பேர் கொண்ட முன்னணி இயக்குநர்கள் கூடுகிறார்கள். அவர்களின் 'Rain on Films' பேனரில், அடுத்தடுத்து சிறு படங்கள் செய்வது குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படங்களுக்கான ஸ்கிரிப்ட் சரி பார்ப்பது, முடிவு செய்வது, படப்பிடிப்பைக் கண்காணித்து செலவுகளைக் கட்டுப்படுத்துவது என இயக்குநர்களை பிரித்து இருக்கிறார்கள். ஜூலையில் முதல் படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். கௌரவ ஆலோசகர்களாக ஷங்கர், மணிரத்னம் இருவரும் பங்குபெறுகிறார்கள். இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் முறைப்படி வரும் என்கிறார்கள். மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசான்கள்!

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் 'காட் ஃபாதர்', மலையாள 'லூசிபர்' படத்தின் ரீமேக் என்பது தெரிந்த விஷயம். அங்கே மஞ்சு வாரியர் நடித்த ரோலில், தெலுங்கில் நயன்தாரா நடித்துள்ளார். சமீபத்தில் அவரது போர்ஷன்களுக்கான ஷூட் நிறைவடைந்திருக்கிறது. இது மோகன்ராஜாவின் இயக்கத்தில் நயனுக்கு இது மூன்றாவது படம். இதற்கு முன் அவரது இயக்கத்தில் 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளதால், சிரஞ்சீவியின் படத்திற்கு நயனை நடிக்கக் கேட்டதும் உடனே அவர் தனது கால்ஷீட்களை ஒதுக்கி கொடுத்துவிட்டார். நயனின் போர்ஷன் முடிந்தாலும் இன்னும் 'காட் ஃபாதர்' ஷூட் இன்னும் ஒரு ஷெட்யூல் இருக்கிறது. மெகா ஸ்டாரும், லேடி சூப்பர்ஸ்டாரும்!

நயன்தாரா
நயன்தாரா

'மாநாடு'க்குப் பிறகு வெங்கட் பிரபுவின் கிரேஸ் தாறுமாறாக எகிறியுள்ளது. இப்போது அசோக் செல்வனை வைத்து 'மன்மதலீலை'யை எடுத்திருக்கும் அவர், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்குகிறார். சிவாவின் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. சிவா, இப்போது தெலுங்கு - தமிழ் பைலிங்குவலில் நடித்து வரும் படத்தை முடித்த பின், வெங்கட் பிரபுவின் படத்தில் இணைகிறார். எ வெங்கட் பிரபு ப்ராஜெக்ட்!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

இன்னும் சில வாரங்களில் விஜயகாந்தை மேற்சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல உள்ளனராம். இப்போது எழுந்து நிற்கவே சிரமப்பட்டுவருவதாக அவரது வட்டாரத்தினர் சொல்கின்றனர். அரசியலைவிட இனி அவர் பழையபடி வீரநடை போட்டு எழுந்து நடந்து வருவதுதான் நமக்கு முக்கியம் என அவரது வீட்டினர் இப்பொழுது கருதுகின்றனராம். சீக்கிரமே சிங்கநடை போடுங்க கேப்டன்!

எப்போதும் ஒரு படத்தின் ஷூட்டிங், டப்பிங், முதல் காப்பி பார்க்கிற வரைக்கும்தான் அஜித் சென்னையில் இருப்பார். அப்புறம் சத்தம் காட்டாமல் அமெரிக்காவிற்குப் பறந்து விடுவார். இந்தத் தடவை ஏற்கெனவே 'வலிமை' ரிலீஸாவது தாமதமாகிவிட்டதால் அடுத்த மாதமே 'AK 61' படப்பிடிப்பை ஹைதராபாத்தில் ஆரம்பிக்கிறார்கள். எதிலும் தலையிடாமல் இயக்குநர் வினோத்திடம் எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டார் அஜித். அதிக அக்கறையில் நடிகர்களைத் தேர்வு செய்வதில் முனைப்பாக இருக்கிறார் இயக்குநர். தபுவுக்கு முக்கிய வேடம் என்றாலும், ஹீரோயின் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை என்கிறார்கள். 'வலிமை'யான அடுத்த இன்னிங்ஸ்!

வலிமை அஜித்
வலிமை அஜித்

இப்போது அண்ணன் படத்தில் நடித்து வரும் நடிகரின் இன்னொரு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அதில் மலையாள வரவுதான் ஹீரோயின். முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அந்தப் படத்தில் நடித்துவந்த நாயகி, படத்திலிருந்து விலகிவிட்டாராம். ஒரு கசப்பான அனுபவத்தினால்தான் அவர் அதில் இருந்து விலகிவிட்டதாகவும், இப்போது நடிகையிடம் மீண்டும் சமாதான தூதுவிட்டு நடிக்கக் கேட்டு வருவதாகவும் தெலுங்குப் பட உலகில் சொல்கிறார்கள்.