Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு - சமாதானம் பேச மறுத்த பிரபலம்; ராகவா லாரன்ஸின் ரொமான்ஸ் ரூட்!

கோலிவுட் ஸ்பைடர்

இந்த வாரம் கோலிவுட்ல என்ன ஸ்பெஷல்? பரபர அப்டேட்ஸ், உங்க ஃபேவரைட் செலிபிரெட்டியோட அடுத்தடுத்த திட்டங்கள் என நிறைய தகவல்கள் சும்மா நச்சுன்னு நாலே வரில... வாங்க பார்க்கலாம்!

Published:Updated:

கோலிவுட் ஸ்பைடர்: தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு - சமாதானம் பேச மறுத்த பிரபலம்; ராகவா லாரன்ஸின் ரொமான்ஸ் ரூட்!

இந்த வாரம் கோலிவுட்ல என்ன ஸ்பெஷல்? பரபர அப்டேட்ஸ், உங்க ஃபேவரைட் செலிபிரெட்டியோட அடுத்தடுத்த திட்டங்கள் என நிறைய தகவல்கள் சும்மா நச்சுன்னு நாலே வரில... வாங்க பார்க்கலாம்!

கோலிவுட் ஸ்பைடர்

* கன்னடத்து பிசி ஹீரோயின் ராகினி திவேதி, தமிழில் ஜெயம் ரவியின் 'நிமிர்ந்து நில்'லில் வந்து நின்றார். அதன் பின், மீண்டும் சாண்டல்வுட் பக்கமே திரும்பினார். கடந்த 2020-ம் ஆண்டு சாண்டல்வுட்டில் பரபரத்த டிரக் ராக்கெட் கேஸில் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டு 140 நாள்களைச் சிறையில் கழித்தார். பின்னர் பிணை பெற்று வெளியே வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழில் மீண்டும் நடிக்க வருகிறார். த்ரிஷாவை வைத்து 'பரமபத விளையாட்டு'வை தயாரித்து இயக்கிய திருஞானம், அடுத்து சுந்தர்.சி.யை வைத்து இயக்கி வரும் 'ஒன் 2 ஒன்'னில் ராகினிதான் அழகு மோகினி.

மீரா ஜாஸ்மின்
மீரா ஜாஸ்மின்

* தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ரெடியாகிவிட்டார் மீரா ஜாஸ்மின். 'ரன்' மீராவை விட, இன்னும் இளமையாக மாறியவர், இப்போது இன்ஸ்டாவில் அக்கவுண்ட், மலையாளத்தில் கைவசம் படம் என வியக்க வைக்கிறார். அவரின் சமீபத்திய போட்டோஷூட்டும் செம வைரல். இப்போது மீரா, ரிலாக்ஸ் ட்ரிப்பாக ஐரோப்பிய டூரில் இருக்கிறார். அங்கிருந்து சென்னை திரும்பியதும் விரைவில் தமிழில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். அவர் கமிட்டாகி இருப்பதும் ஒரு டாப் ஹீரோ படம்தானாம். 'ரன்' பார்ட் 2 வருமா?!

* முனி, காஞ்சனா என அடுத்தடுத்து அதிரடி காட்டி, ஒரு பிரான்சைஸாகத் தமிழ் சினிமா ரசிகர்களைக் கடந்த 15 வருடங்களாகக் கட்டிப்போட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். 'காஞ்சனா' படத் தொடரில் வெளியான கடைசி படத்துக்கு விமர்சகர்கள் சிவப்புக் கொடி காட்டினாலும் படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இதன் மூலம் நூறு கோடி க்ளப்பில் இணைந்த ராகவா லாரன்ஸ், அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து ஹாரர் ஹிட்களாகக் கொடுத்து வந்தவர், வேறு ஜானருக்கும் வண்டியைவிட தயாராகி இருக்கிறார். முதல் கட்டமாக, ரொமாண்ட்டிக் லுக்கில் அசத்த விரும்பி, கௌதம் மேனன் படத்தில் கமிட்டாகி உள்ளாராம். இங்கிலீஷ்ல பன்ச் பேசுவாரோ?!

கௌதம் மேனன், ராகவா லாரன்ஸ்
கௌதம் மேனன், ராகவா லாரன்ஸ்

* தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்த செய்தி வெளியே வந்த பிறகு அவர்களின் நண்பர்களிடமிருந்து இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கச் சொல்லி ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்குச் செய்தி வந்ததாம். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சூப்பர் ஸ்டாரும் கைகாட்டி விட்டாராம். ஆனால், "ஐயா, இதில் நான் தலையிடுவதோ, அறிவுரை சொல்வதோ எனது நடைமுறைக்குக் கொஞ்சமும் ஏற்பாகாது. அதை அவர்கள் இருவருமே தீர்த்துக் கொள்வதே நல்லது" என மறுத்துவிட்டாராம் ஆண்டவர். செய்தியும் சொல்லப்பட்டு விட்டதாம். பிக் பாஸ் சொல்வது நியாயம்தானே!

* டாக்டர் பட்டம், இரண்டு டிஜிட்டுக்கு உயர்ந்த சம்பளம் எனப் படு உற்சாகமாக இருக்கிறார் 'ஆத்மன்' எஸ்.டி.ஆர் என்னும் சிலம்பரசன். கைவசம் 'பத்து தல', 'கொரோனா குமார்' படங்களை வைத்திருப்பவர் அடுத்து 'ஓ மை கடவுளே' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் இணைவது தெரிந்த செய்திதான். இந்த பாசிட்டிவ் வைபுக்குக் காரணம் ஒரு கார் சென்டிமென்ட் என்று நம்புகிறார் சிம்பு. ஆம், 'மாநாடு'க்கு முன் சிம்புவுக்கு அவரது அம்மா உயர் ரக காரான மினி கூப்பர் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அதிலிருந்துதான் தனக்கு நல்லது நடப்பதாகச் சிலாகிக்கிறார் சிம்பு. "எல்லாம் கார் வந்த ராசி... தொட்டதெல்லாம் ஒர்க் அவுட் ஆகிறது" என தன் நெருங்கியவர்களிடம் சொல்லி மகிழ்கிறாராம் சிம்பு. நல்ல காலம் பொறந்தாச்சு!

சிம்பு
சிம்பு

* தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் வருகிற 25ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆர்.கே.செல்வமணி, கே.பாக்யராஜ் அணியினர் மும்முரமாக ஓட்டு வேட்டை ஆடி வந்தனர். அதையொட்டி சில சர்ச்சைகளும், உட்கட்சி பூசலுமே வழக்கம்போல எட்டிப் பார்த்தது. ஆனால், இப்போது அடுத்த ட்விஸ்ட்டாக தேர்தலுக்கே சிக்கல் வந்திருக்கிறது. ஆம், கொரோனா தொற்று பரவல் காரணமாகச் சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் தேர்தலுக்கு அனுமதி மறுத்திருக்கிறது. இப்போது வேறு வழியில்லாமல் தேர்தலைத் தள்ளி வைத்துவிட்டு பிரசாரத்துக்கும் லீவு விட்டுள்ளனர். தேர்தல்னா ஒரு பரபரப்பு இல்லாமலா?!

* இயக்குநர் அமீர் அடுத்து டைரக்ட் செய்யும் படத்தில் வித்தியாசமான வேடத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்கிறார். அதே சமயம், வெற்றிமாறனின் 'விடுதலை', அமீரின் இந்தப் படம் ஆகியவற்றுக்குப் பிறகு வேறு எந்த ஹீரோ வேடங்களையும் ஒப்புக் கொள்வதில்லை என முடிவெடுத்து விட்டார் சூரி. காரணம், வெற்றிமாறன் படத்துக்காகவே எட்டுப் படங்களை சூரி செய்ய முடியாமல் போயிருக்கிறது. நல்ல முடிவுதானா?!

சசிகுமார்
சசிகுமார்

* பாலாவின் படம் சரியாகப் போகாததால் கடனில் வீழ்ந்தார் சசிகுமார். இப்போது தொடர்ந்து நடித்து கடன்களைக் கிட்டத்தட்ட அடைத்து சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டார். அதனால் மீண்டும் இயக்குநர் நாற்காலியில் அமரலாம் என்று முடிவு செய்திருக்கிறார். இப்போதுதான் உட்கார்ந்து 'ஈசன்' படத்துக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படத்திற்கான வேலைகளில் மூழ்கியிருக்கிறார். இயக்குநர் சசிகுமாருக்கு வெல்கம்!

* 'பீஸ்ட்' கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டது. படமாகி வந்த விதத்திலேயே விஜய்க்கு நெல்சன் மேல் மிகுந்த ஈடுபாடு வந்துவிட்டது. அட்லி போல இவருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புத் தரும் முடிவில் இருக்கிறாராம். விரைவில் அதற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் தொடங்க இருக்கின்றன. இதனால் டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் நெல்சன். 'பீஸ்ட்' மோடு ஆன்!