
80-களின் காட்சியமைப்பைத் தன் தேர்ந்த ஒளிப்பதிவில் கொண்டு வந்திருக்கிறார் செழியன். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை த்ரில்லருக்கான டெம்போவைக் கூட்டுகிறது
ஓர் எளிய குடும்பத்தின் பேராசை எந்த எல்லைக்குக் கொண்டு செல்கிறது என்பதை அதிர்ச்சியோடு சொல்வதுதான் ‘கொன்றால் பாவம்.'
காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் தர்மபுரி மாவட்ட எல்லையில் இருக்கும் ஒரு பழைமையான வீட்டில் 80-களில் வசிக்கிறார்கள் சார்லி, அவர் மனைவி ஈஸ்வரி ராவ் மற்றும் ஒரே மகள் வரலெட்சுமி. அந்த வனாந்தர கிராமத்தில் வாங்கிய கடனுக்காக நிலத்தை விற்று அந்நிலத்திலேயே கூலியாக கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்கள். வறுமையால் வரலெட்சுமிக்கு கல்யாண வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. அந்த ஏக்கமும் கவலையும் மூவரிடமும் இருக்கும் சூழலில், பட்டணத்து இளைஞரான சந்தோஷ் பிரதாப், டிப்-டாப் உடையில் கையில் பெட்டியுடன் வீட்டிற்கு வருகிறார். இருட்டத் தொடங்கியிருப்பதால் ஒரு நாள் இரவு மட்டும் தங்கிவிட்டுச் செல்ல அனுமதிக்கும்படி கேட்கிறார். பலத்த யோசனைக்குப் பிறகு அவரைத் தங்க அனுமதிக்கிறார்கள். சந்தோஷ் பிரதாப்பின் பெட்டியில் நகையும் பணமும் இருப்பதைப் பார்க்கும் வரலெட்சுமி, அவரைத் தீர்த்துக் கட்டிவிட்டு அதை அபகரிக்க முடிவெடுக்கிறார். இந்தத் திட்டத்துக்கு பெற்றோரும் ஒப்புக்கொள்ள... அன்று இரவு என்ன நடக்கிறது என்பதுதான் அதிர்ச்சி கலந்த க்ளைமாக்ஸ்.

சார்லி, ஈஸ்வரி ராவ், வரலெட்சுமி மூவரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் வரலெட்சுமிக்குக் கூடுதல் வாய்ப்பாய் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் கேரக்டர். அதை அனாயாசமாகச் செய்திருப்பதன் மூலம் கவனிக்க வைக்கிறார் வரு. சந்தோஷ் பிரதாப் கொடுத்த பாத்திரத்தில் நச்செனப் பொருந்தி, பரிதாபத்தை அள்ளுகிறார். பிரதான கேரக்டர்கள் தவிர கதாகலாட்சேபம் செய்யும் மனோபாலா, பார்வையற்றவராய் வரும் சென்றாயன், கள்ளுக்கடை ஓனராய் வரும் சுப்ரமணியம் சிவா, போலீஸ்காரர்கள் கவிதா பாரதி, தங்கதுரை என பரிச்சயமான முகங்கள் அந்தப் பாத்திரங்களாகவே திரையில் தென்படுவது சிறப்பு.

கன்னட சினிமாவில் 18 படங்களை இயக்கி தனக்கெனத் தனித்த அடையாளத்தைப் பெற்ற தமிழரான தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வந்திருக்கும் தமிழ்ப்படம் இது. 2018-ல் அவர் இயக்கத்தில் வந்த ‘ஆ கரால ராத்ரி'யைத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார். ஓர் அழகான சிறுகதையையும், அதன் இறுதித் திருப்பத்தையும் மட்டுமே நம்பி அதிக கேரக்டர்களைச் சேர்த்துக் கொள்ளாமல் நறுக்கெனத் திரைக்கதை அமைத்து கவனிக்க வைக்கிறார் தயாள் பத்மநாபன்.
80-களின் காட்சியமைப்பைத் தன் தேர்ந்த ஒளிப்பதிவில் கொண்டு வந்திருக்கிறார் செழியன். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை த்ரில்லருக்கான டெம்போவைக் கூட்டுகிறது. ஒரு வீட்டிற்குள் அதிகம் நகரும் கதை என்றாலும் ப்ரீத்தி பாபுவின் எடிட்டிங் திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பலம் சேர்த்திருக்கிறது.
இத்தனை இருந்தும் ஒரே துறுத்தலாய் இருப்பது கதை நடக்கும் வீடும், அந்தச் சூழலும் நம் மண்சார்ந்ததாக இல்லாமல் அந்நியத் தன்மையோடு இருப்பதுதான். இதனாலேயே பல இடங்களில் நாடகம் பார்த்த உணர்வை நமக்குத் தருவது மட்டும் பலவீனம்.