
இரண்டாம் பாதியில் நோய் குறித்தான பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளி, இழந்த பணத்தை மீட்கும் சாதாரண காமெடி டிராமாவாகப் படம் மாறிவிடுகிறது
மது அருந்தாமலே போதையாகும் விநோத நோயால் நாயகன் சந்திக்கும் பிரச்னைகளை காமெடியாகச் சொல்கிறான் இந்த ‘குடிமகான்.'
நாயகன் மதிக்கு ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் வேலை. மனைவி, இரண்டு குழந்தைகள், தன் தந்தையுடன் ஒரு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். ஆனால், மது அருந்தாமலே போதையாகும் விநோத நோயால் அவர் தன் வேலையை இழக்க நேரிடுகிறது, குடும்பமும் பல அவமானங்களைச் சந்திக்கிறது. இதிலிருந்து மீள நாயகன் எடுக்கும் முயற்சிகளும் அவருக்குத் துணையாக இருக்கும் நண்பர்களின் கலாட்டாவும்தான் கதை.

மதியாக வரும் அறிமுக நடிகர் விஜய் சிவன், அதீத பணிச்சுமை, ஸ்ட்ரிக்ட்டான உயரதிகாரி, நடுவில் இந்த விநோத நோய் என எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்கப் பாடுபடுகையில் நம் பரிதாபத்தையும் சம்பாதித்துக்கொள்கிறார். அவரின் மனைவியாக வரும் சாந்தினி தமிழரசன், யதார்த்தமான குடும்பத்தலைவி வேடத்தைக் குறையில்லாமல் செய்திருக்கிறார். முதல் பாதியில் இவர்களைத் தாண்டி அதிகம் ஈர்ப்பது குடிகார அப்பாவாக வரும் சுரேஷ் சக்கரவர்த்திதான். குடித்துவிட்டுச் செய்யும் அலப்பறைகள், பக்கத்து வீட்டுக்காரர்களை டீல் செய்யும் விதம் எனப் பல காட்சிகளைக் கலகலப்பாக மாற்றியிருக்கிறார். பிற்பாதியில் வரும் நமோ நாராயணன், ஹானஸ்ட் ராஜ், கதிரவன் ஆகியோர் அடங்கிய நகைச்சுவைக் கூட்டணி இந்தக் கலகலப்பு மீட்டரைக் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.
தனூஜ் மேனன் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும், அந்த மதுபான விடுதி பாடல் ஸ்பீடு பிரேக்கர். பின்னணி இசையில் காமெடிக் காட்சிகளுக்கு இன்னும் உயிரூட்டியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கதைக்குத் தேவையானதை மட்டும் செய்திருக்கிறார்.

ஏ.டி.எம் பணம் நிரப்பும் நடைமுறைகள், அரிய நோய் எனப் பல விஷயங்களைப் படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் டி.பிரகாஷ். பிறந்த நாள் பார்ட்டி தொடங்கி சில இடங்களில் முதல் பாதி தொய்வைத் தந்தாலும், விநோத நோயால் நாயகன் சந்திக்கும் பிரச்னைகள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. ஆனால், இரண்டாம் பாதியில் நோய் குறித்தான பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளி, இழந்த பணத்தை மீட்கும் சாதாரண காமெடி டிராமாவாகப் படம் மாறிவிடுகிறது. அதில் பல காமெடிகள் சிரிக்க வைத்தாலும், சில இடங்கள் ஓவர்டோஸ்! குறிப்பாக, டெலிவரி பாயுடனான அந்த நீளமான எபிசோடைப் படத்தொகுப்பாளர் ஷிபு நீல் பி.ஆர் சற்றே கவனித்துக் கத்தரித்திருக்கலாம். அந்த ஏ.டி.எம் கொள்ளைக்காரனின் கதாபாத்திரமும் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே வந்துபோகிறது.
மென்சோகம், வலிந்து சொல்லப்படும் கருத்து போன்றவற்றைத் தவிர்த்து நகைச்சுவையே பிரதானம் எனக் களமிறங்கியவர்கள், இரண்டாம் பாதியில் இன்னும் லாஜிக்குடன் சிரிக்கவைத்திருந்தால் இந்த ‘குடிமகான்' இன்னும் அலப்பறை செய்திருப்பான்.