Published:Updated:

குலசாமி விமர்சனம்: பாலியல் வன்கொடுமை பற்றிய இந்தப் பொறுப்பற்ற சித்திரிப்பு அவசியம்தானா?

விமல்

நாடகத்தன்மை கொண்ட வசனங்கள், காட்சிகள் கோர்வையாக இல்லாததது, கதாபாத்திரங்கள் அழுத்தமாக எழுதப்படாதது என மொத்த படமும் எங்குமே ஒட்டவில்லை. கொடூர கொலைகளைக் காட்சிப்படுத்துகிறேன் என்ற பெயரில், அங்கும் முகம் சுளிக்க வைக்கிறார் இயக்குநர்.

Published:Updated:

குலசாமி விமர்சனம்: பாலியல் வன்கொடுமை பற்றிய இந்தப் பொறுப்பற்ற சித்திரிப்பு அவசியம்தானா?

நாடகத்தன்மை கொண்ட வசனங்கள், காட்சிகள் கோர்வையாக இல்லாததது, கதாபாத்திரங்கள் அழுத்தமாக எழுதப்படாதது என மொத்த படமும் எங்குமே ஒட்டவில்லை. கொடூர கொலைகளைக் காட்சிப்படுத்துகிறேன் என்ற பெயரில், அங்கும் முகம் சுளிக்க வைக்கிறார் இயக்குநர்.

விமல்
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைத் தண்டிக்கச் சட்டம் போதாது, அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்வதே தீர்வு எனச் சொல்கிறான் இந்த `குலசாமி'.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார் ஆட்டோ ஓட்டுநர் சூரசங்குவின் தங்கையான மருத்துவக் கல்லூரி மாணவி கலை. குற்றவாளியை நீதிமன்றத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்கிறார் ஒரு மர்ம நபர். அந்த மர்ம நபர் சூரசங்காக இருக்கலாம் எனச் சந்தேகித்து, அவரைக் கைது செய்கிறது காவல்துறை. போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவரை நிரபராதி என விடுதலை செய்கிறது. அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் வரிசையாகக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்தக் கொலைகளைச் செய்வது யார், அந்தக் கொலையாளிக்கும் சூரசங்குவிற்கும் உள்ள தொடர்பு என்ன, சூரசங்குவின் தங்கையைக் கொன்றது யார் போன்ற கேள்விகளுக்கு, த்ரில்லிங்கான திரைக்கதையால் பதிலளிக்கிறேன் என்ற பெயரில் பார்வையாளர்களைச் சோதித்திருக்கிறார் இயக்குநர் 'குட்டிப்புலி' ஷரவணஷக்தி.

குலசாமி விமர்சனம்
குலசாமி விமர்சனம்

முதன்முதலாக ஆக்‌ஷன் - த்ரில்லர் படத்தில் நடித்திருக்கிறார் விமல். அவர் ஏற்றிருக்கும் ஆட்டோ ஓட்டுநர் சூரசங்கு கதாபாத்திரம் எந்நேரமும் போதையிலேயே இருப்பது, கோபம் வந்தால் மிகையாகக் கத்துவது, சில நேரம் விம்மி விம்மி அழுவது, மற்ற நேரங்களில், என்ன செய்வது எனத் தெரியாமல் முழிப்பது என மல்டிபிள் பர்சனாலிட்டிகளோடு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் எந்த பர்சனாலிட்டியும் நம்மை ஈர்க்கவில்லை.

கதாநாயகனைக் காதலிப்பது, அவரைத் திருத்துவது, வில்லன்களிடம் மாட்டிக்கொள்வது, எதிரிகளைப் பழிவாங்கக் கதாநாயகனுக்கு உத்வேகம் தருவது, இறுதிக் காட்சி வரும்போது, க்ளைமாக்ஸ் சண்டைக்காக மீண்டும் வில்லன்களிடம் மாட்டிக்கொள்வது, எப்படியும் ஹீரோ வந்துதான் நம்மைக் காப்பாற்றுவார் எனத் தெரிந்தும், தப்பிக்க முயல்வது போல நடிப்பது எனக் கதாநாயகி தான்யா ஹோப்பிற்கு படு `வழக்கமான' நாயகி வேடம். இத்தனை சம்பவங்களுக்கு இடையிலும், மருத்துவக் கல்லூரியில் படித்து, தேர்வில் அவர் பாஸ் ஆவது, படிப்பின் மீதான அவரின் ஆர்வத்தையே காட்டுகிறது.

மருத்துவக் கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் வினோதினி, பாதிக்கப்படும் மருத்துவக் கல்லூரி மாணவியாக வரும் லாவண்யா மாணிக்கம், விமலின் தங்கையாக நடித்திருக்கும் கீர்த்தனா, காவல்துறை உயர் அதிகாரியாக வந்து படம் முழுதும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் போஸ் வெங்கட், கதாநாயகனின் மாமாவாக வரும் இயக்குநர் ஷரவணஷக்தி, கொடூர வில்லனாக நடித்திருக்கும் இயக்குநரின் மகன் சூர்யா என அனைவரும் 'போதும்... இதுக்கு போதும்...' எனக் கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார்கள். இவர்களில் லாவண்யா மாணிக்கம் மட்டும் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்.

குலசாமி விமர்சனம்
குலசாமி விமர்சனம்

'குலசாமி' என்ற சினிமாவை முடிந்தமட்டும் 'சீரியல்' ஆக்க, ஒளிப்பதிவாளர் 'ஒய்ட் ஆங்கிள்' ரவியும், படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணனும் போட்டிப் போட்டுப் பங்காற்றியிருக்கிறார்கள். முதற்பாதியில், காவல்துறையோடு சேர்ந்து நம்மையும் சுற்றலில் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர். வி.எம்.மகாலிங்கத்தின் பாடல்களிலும், பின்னணியிசையிலும் எந்தப் புதுமையில் இல்லாததால், ஓரிடத்தில் கூட ரசிக்க வைக்கவில்லை. வா.கருப்பனின் வரிகளில் வரும் டைட்டில் பாடல் மட்டும் கொஞ்சம் ஆறுதல். சண்டைக்காட்சிகளில் சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனும் நம்மைச் சோதிக்கிறார். விமலைப் 'பறந்து பறந்து' சண்டை போடவைத்திருக்கிறார். ஆனால், சுமாரான காட்சியாக்கத்தால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நடிகர் விஜய் சேதுபதியின் வசனமும் படத்திற்கு எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லை.

பார்வையாளர்களாக நாம், தொடர் கொடூர கொலைகளைப் பின்தொடர வேண்டுமா அல்லது கதாநாயகனான விமலைப் பின்தொடர வேண்டுமா என்ற குழப்பம் படத்தின் தொடக்கத்திலியே ஆரம்பித்து விடுகிறது. அதற்கேற்றார் போல, விமல் கதாபாத்திரம் இடையிடையே காணாமல் போய்விடுகிறது. எதற்கு வம்பு என நம் தூக்கத்தைத் தொடர வைக்கிறது திரைக்கதை.

நாடகத்தன்மை கொண்ட வசனங்கள், காட்சிகள் கோர்வையாக இல்லாததது, கதாபாத்திரங்கள் அழுத்தமாக எழுதப்படாதது என மொத்த படமும் எங்குமே ஒட்டவில்லை. கொடூர கொலைகளைக் காட்சிப்படுத்துகிறேன் என்ற பெயரில், அங்கும் முகம் சுளிக்க வைக்கிறார் இயக்குநர்.

குலசாமி விமர்சனம்
குலசாமி விமர்சனம்

மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் பாலியல் சுரண்டலைக் கதையின் மையமாக வைத்திருக்கிறார்கள். உண்மைச் சம்பவத்தை, ஒரு சமூகப் பிரச்னையை கமர்ஷியல் படத்தில் புகுத்தியது பாராட்டத்தக்கதே! ஆனால், அதில் எதிலுமே நம்பத்தன்மை இல்லை என்பதுதான் பிரச்னை. பாலியல் வன்கொடுமை காட்சிகளைக் காட்சிப்படுத்திய விதமும் அபத்தத்தின் உச்சமாக உள்ளது. இரண்டாம் பாதியில் வரும் பின்கதையிலும், பாலியல் வன்கொடுமைகளைப் பொறுப்பற்று, வக்கிரமாகக் காட்சிப்படுத்துவதால் அந்தக் கதையும் மனதில் நிற்கவில்லை.

மூக்கில் தையல் போட்டவரைச் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து, உயிருக்குப் போராடும் நோயாளியின் பக்கத்துப் படுக்கையில் அட்மிட் செய்வதும், மருத்துவக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்துக்குக் கதாநாயகன் எந்தத் தடையுமில்லாமல் சாதாரணமாக வந்து சுற்றிப் பார்ப்பதும், பறந்து பறந்து சண்டையிட்டுவிட்டு, டியூஷன் முடித்துவிட்டுப் போகும் பத்தாம் வகுப்பு பையன் போல கேஷ்வலாக வெளியே போவதும் என ஒரு கட்டத்தில், த்ரில்லர் படம் ஸ்பூஃப் காமெடி படமாக மாறிவிடுகிறது.

இந்த `குலசாமி' யாரையும் காக்கவில்லை. சோதிக்க மட்டுமே செய்கிறார்.