
ஹாலிவுட்டில் ஹிட்டடித்த Prison Break வகை சினிமா பாணியில் 2018-ல் வெளிவந்த ‘ஸ்வதந்திரியம் அர்த்தராத்திரியில்' என்ற மலையாள சினிமாவைத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் பிருந்தா.
தப்பிக்க வாய்ப்பே இல்லாத கொடூரமான சிறையிலிருந்து சிலர் திட்டம்போட்டுத் தப்பித்தால்..? அவர்கள்தான் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்!'
எஸ்கேப் பிளானின் மாஸ்டர் பிரெய்னாக சேது எனும் பாத்திரத்தில் தமிழில் அறிமுகமாகியிருக்கும் ஹிருது ஹாரூனுக்கு ஒரு பொக்கே. ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். கோபத்தால் சிறைக்கு வந்து, கோபத்தின் பின்னணியைச் சொல்லி அதே கெத்தோடு வலம்வரும் பாபி சிம்ஹா ஆக்ஷனில் அதகளம் பண்ணியிருக்கிறார். டெரரான ஜெயில் கண்காணிப்பாளராக ஆர்.கே சுரேஷ், பி.பி மாத்திரையை மறந்து கோபத்தில் கத்துவதைப் போல படம் முழுவதும் கத்துகிறார். நாயகனிடம் காதல் வயப்படுவதைத் தாண்டி நாயகியான அனஸ்வரா ராஜனுக்குப் பெரிய வேலையில்லை. முனீஸ் காந்த், கல்கி ராஜா, அப்பாணி சரத், இரட்டையர்கள் அருண்-அரவிந்த், தேனப்பன் என நிறைய முகங்கள். இதில் காமெடியில் முனீஸ் காந்த் தனித்துத் தெரிகிறார்.

ஹாலிவுட்டில் ஹிட்டடித்த Prison Break வகை சினிமா பாணியில் 2018-ல் வெளிவந்த ‘ஸ்வதந்திரியம் அர்த்தராத்திரியில்' என்ற மலையாள சினிமாவைத் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் பிருந்தா. ஒரிஜினலைத் தாண்டி பின்கதைகளை இணைத்து ஆக்ஷன் படமாகத் தந்து கவனம் ஈர்க்கிறார் பிருந்தா.
‘Prison Break' சினிமாக்களின் பலமே சிறையில் இருப்பவர்களின் ‘எப்படியாவது தப்பித்தே ஆகவேண்டும்’ என்ற பதற்றம், பார்க்கும் நமக்கும் தொற்றிக்கொள்ளுமாறு திரைக்கதை இருப்பதுதான். இந்தப் படத்தில் அது இல்லை. பிரதான கேரக்டர்கள் சிறைக்கு வந்த கதையைச் சொல்லும் ஐடியா நன்றாக இருந்தாலும், ஆக்ஷனைத் தாண்டி அதில் எதுவும் சொல்லாததால் அந்தக் காட்சிகள் மனதில் நிற்கவில்லை.
தப்பிப்பதற்காகப் போடும் திட்டத்தில் புதுமைகள் எதுவும் இல்லை. அதனாலேயே ‘எப்படியாச்சும் தப்பிச்சிப் போங்கடா!' என்று சொல்வதற்குப் பதில், ‘அட போங்கடா!' எனச் சொல்லத் தோன்றுகிறது. இத்தனை குறைகளைத் தாண்டி நம்மை இருக்கை நுனியில் கட்டிப்போடுவது படத்தின் மேக்கிங்தான். ஒளிப்பதிவாளர் ப்ரியேஷ் குருசாமியும், படத்தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனியும் போட்டி போட்டு பகல்-இரவு காட்சிகளில் உழைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு செம தீனி கொடுத்திருப்பது ஸ்டன்ட் கொரியோகிராபர்களான ராஜசேகர் மற்றும் பீனிக்ஸ் பிரபு இருவரும்தான். இந்த நால்வர் அணியால் ஒவ்வொரு ஆக்ஷன் சீனும் தெறிக்கிறது.

இன்னொரு முக்கிய ப்ளஸ் திரையிலிருக்கும் பரபரப்பை நமக்குக் கடத்தும் சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை.
தப்பித்தே ஆக வேண்டும் என்ற காரணத்தை இன்னும் அழுத்தமாகச் சொல்லி, கொஞ்சம் புத்திசாலித்தனமான எஸ்கேப் பிளானுடன் வந்திருந்தால் குமரியையும் தாண்டி இந்த தக்ஸ், ‘பெஞ்ச் மார்க் சினிமா'வாகக் கொடி நாட்டியிருக்கும்!