Published:Updated:

குருதிப்புனல்: இப்படியொரு போலீஸ் படம் இனிமேல் எடுக்க முடியுமா? கமல் - பி.சி.ஸ்ரீராம் செய்த மேஜிக்!

குருதிப்புனல்

'குருதிப்புனல்' படத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சியும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத குழுவைச் சேர்ந்த யுவன் சாகும் காட்சியை உதாரணத்திற்குச் சொல்லலாம்.

Published:Updated:

குருதிப்புனல்: இப்படியொரு போலீஸ் படம் இனிமேல் எடுக்க முடியுமா? கமல் - பி.சி.ஸ்ரீராம் செய்த மேஜிக்!

'குருதிப்புனல்' படத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சியும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத குழுவைச் சேர்ந்த யுவன் சாகும் காட்சியை உதாரணத்திற்குச் சொல்லலாம்.

குருதிப்புனல்
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'குருதிப்புனல்’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

இது கமல்ஹாசனின் பிறந்த நாள் வாரம் என்பதால், அவருடைய முக்கியமான திரைப்படம் ஒன்றை நினைவுகூரலாம். ஒருவர் தன்னையும் முன்னகர்த்திக் கொண்டு தான் சார்ந்த துறையையும் இணைத்து நகர்த்திக் கொண்டு சென்றால் அவரை அத்துறையின் முன்னோடி எனலாம். அப்படியாகத் தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர் கமல். பல்வேறு நுட்பங்களைத் தமிழிற்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தியவர்.

அப்படியான நுட்பங்களில் ஒன்றைத் தமிழிற்கு அறிமுகம் செய்த ‘குருதிப்புனல்’ திரைப்படத்தைப் பற்றி இந்த வாரம் பார்க்கலாம். ஆம், 1995-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதியன்று வெளியான இந்தத் திரைப்படத்தில்தான் தமிழில் முதன்முறையாக டால்பி ஒலிநுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குருதிப்புனல் ஷூட்டிங்கில்...
குருதிப்புனல் ஷூட்டிங்கில்...

இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் சித்திரிக்கப்பட்ட விதம் தங்களை மிகவும் பாதித்ததாக இயக்குநர்கள் கௌதம் மேனனும் ஏ.ஆர்.முருகதாஸூம் சொல்லியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் என்றல்ல, ஒட்டுமொத்த திரைப்படமுமே, ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகரான ஸ்டைல் மற்றும் மேக்கிங்குடன் இருக்கும். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மூன்று திரைப்படங்களில் ‘குருதிப்புனல்’ முக்கியமானது.

கோவிந்த் நிஹ்லானி இயக்கத்தில் 1994-ல் வெளிவந்த ‘துரோக்கால்’ என்கிற இந்தித் திரைப்படத்தின் ரீமேக் இது. ‘என்னுடைய உருவாக்கத்தை விடவும் தமிழ் வடிவம் சிறப்பாக உள்ளது’ என்று கோவிந்த் நிஹ்லானியே பாராட்டியிருப்பதை இதற்குக் கிடைத்த வெற்றி எனலாம். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஒரு நாவலின் தலைப்பு, ‘குருதிப்புனல்’. அனுமதி பெற்று கமல் வைத்த இந்த டைட்டில், படத்தின் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமானது.

‘ஆபரேஷன் தனுஷ்’ – ஆதிநாராயணனும் அப்பாஸூம்

ஆதி நாராயணன் மற்றும் அப்பாஸ் ஆகிய இருவரும் நேர்மையான புலனாய்வுத் துறை அதிகாரிகள். நெருங்கிய நண்பர்களும் கூட! ‘பத்ரி’ என்பவரின் தலைமையில் இயங்கும் ஒரு பயங்கரவாதக் குழுவை ஒழிப்பதற்காக ‘ஆபரேஷன் தனுஷ்’ என்கிற திட்டம் இவர்களால் ரகசியமாக ஆரம்பிக்கப்படுகிறது. பயங்கரவாத குழுவிற்குள் ஊடுருவி உளவு அறிவதற்காக விஜய், ஆனந்த் என்று இரு இளம் காவல் அதிகாரிகளை இவர்கள் அனுப்புகிறார்கள்.

புலனாய்வுத் துறையில் என்னதான் ஜாக்கிரதையாகத் திட்டம் வகுத்தாலும் அது குறித்தான தகவல் உடனே பயங்கரவாதக் குழுவிற்குச் சென்று விடுகிறது. காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடு யார் என்று தெரியாமல் ஆதி குழம்புகிறார். அதே சமயத்தில் தங்களின் கூட்டத்தில் புகுந்துள்ள போலீஸ்காரன் ‘தனுஷ்’ யாரென்று அறிய பத்ரி கொலைவெறியாக இருக்கிறார்.

குருதிப்புனல்
குருதிப்புனல்

ஒன்றையொன்று விழுங்க முயலும் இரட்டைத் தலை பாம்புகள் போல, காவல் அதிகாரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடக்கும் இந்தப் போரில் யார் ஜெயித்தது? பயங்கரவாதிகள் உருவாவதின் சமூகக் காரணங்கள் என்ன? காவல்துறையில் சிலர் கறுப்பு ஆடுகளாக மாறுவதற்குப் பணம் மட்டும்தான் காரணமா... அல்லது தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்து விடுவோம் என்கிற உளவியல் அச்சத்தில் விழுந்து விடுகிறார்களா?

விடை காண முடியாத பல கேள்விகளை முன்வைப்பதோடு படம் நிறைகிறது. அதற்குள் பல மரணங்கள், ரத்தக் களரிகள் நிகழ்ந்து விடுகின்றன.

‘வீரம்ன்னா என்ன தெரியுமா?’

படத்தின் திரைக்கதை – வசனத்தை எழுதியவர் கமல்ஹாசன். ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளனின் முழுமையான கவனத்தைக் கோருகிற வகையில் இறுக்கமான மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதியிருந்தார். ஒவ்வொரு வசனமும் ‘நச்’சென்று ஆழமான அரசியல் பார்வையுடன் காத்திரமாக இருந்தன. “வீரம்ன்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது” என்று இதில் வருகிற பன்ச் வசனம் புகழ்பெற்றது.

ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய இரண்டு பொறுப்புகளையும் ஏற்று அசத்தினார் பி.சி.ஸ்ரீராம். உள்ளடக்கத்தின் தொனி எங்குமே ஒழுங்கு கலையாமல் சீரான தொடர்ச்சியோடும் லயத்தோடும் காட்சிகளை உருவாக்கியிருந்தார் ஸ்ரீராம். ‘இப்படியொரு மேக்கிங்கா?’ என்று பார்வையாளர்கள் மட்டுமன்றி, திரைத்துறையில் உள்ளவர்களே ஆச்சர்யப்படும்படி இந்தப் படம் அமைந்திருந்தது; பல விதங்களில் முன்னோடியான திரைப்படமாகவும் இருந்தது. இதில் வரும் விசாரணைக் காட்சிகளை போலீஸ் அகாடமி அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த பிறகு அமைத்திருக்கிறார்கள்.

குருதிப்புனல்
குருதிப்புனல்

DCP ஆதிநாராயணன், தனது உயர் அதிகாரிக்கு எழுதும் கடிதத்துடன் படம் ஆரம்பிக்கும். அதன் வழியாகத்தான் முழு திரைப்படமும் விரியும். ‘நான் எனது போலீஸ் அங்கியைக் களைந்து வைத்து விட்டு உணர்வுகளைக் களையாமல் எழுதும் கடிதம். அரசியலும் வன்முறையும் ஒப்பந்தம் செய்து கொண்டு அக்னி சாட்சியாக ஜோடி சேர்ந்து விட்டன..’. என்கிற ஆழமான சொற்களுடன் தொடங்கும் அந்தக் கடிதத்தின் வாய்ஸ் ஓவர், ஒரு கட்டத்தில் உயர் அதிகாரியிடமிருந்து விலகி கமல்ஹாசனின் குரலாக மாறும். படத்தின் ஆரம்பத்தில் தெரியும் இது போன்ற பல நுணுக்கங்களும் மெனக்கெடல்களும் படம் முழுவதும் தொடர்ந்து கொண்டேயிருப்பதை ரசிக்கலாம்.

‘என் நோ்மையை சந்தேகிக்காதீங்க. எனக்கு அது பிடிக்காது’

ஆதிநாராயணனாக அசத்தியிருந்தார் கமல். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’ என்று வெறித்தனமாக மிரட்டும் போலீஸ் அல்ல இவர். தேர்ட் டிகிரி விசாரணையில் நம்பிக்கையில்லாதவர். நிதானமான உரையாடலின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து உண்மைகளை வரவழைக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். ‘என் நேர்மையைச் சந்தேகிக்காதே. எனக்கு அது பிடிக்காது’ என்று தான் அணிந்திருக்கும் சீருடை மீது மிகுந்த விஸ்வாசம் கொண்டவர். அதே சமயத்தில் குற்றவாளிகளின் மீது கரிசனம் உள்ளவர். வன்முறையில் நம்பிக்கையில்லாதவர். இப்படியொரு முதிர்ச்சியான காவல்துறை அதிகாரியாக கமலின் கேரக்டர் ஸ்கெட்ச் திறமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

குருதிப்புனல்
குருதிப்புனல்

கமல் எழுதிய அபாரமான வசனங்களைப் படம் முழுவதும் வியக்க முடியும். ‘குழந்தைகளுக்குக் கண்டதை கத்துத் தராதீங்க’ என்னும் மனைவியிடம் “நான் சொல்லலைன்னாலும் சேட்டிலைட் சேனல் கத்துக் கொடுத்துடும்’ என்கிற வசனம் இன்று எத்தனை நிதர்சனமாகியிருக்கிறது பாருங்கள்! "எல்லாத்துக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கு” என்பது இன்னொரு அருமையான வசனம்.

பயங்கரவாதிகளின் நாசக்கார செயலில் பள்ளிக்குழந்தைகள் இறந்ததைப் பற்றி விசாரணை செய்யும் போது “யாருக்குத் தெரியும்? செத்துப் போன குழந்தைகள்ல ஒண்ணு ரெண்டு தீவிரவாதியா கூட வரலாம்’ என்பதெல்லாம் அதிரடியான வசனம்.

‘துப்பாக்கில பிறக்கிற புரட்சி துப்பாக்கியால சாகும்’

கமல், நாசர் ஆகிய இருவரும் தோன்றும் காட்சிகளில் எல்லாம் தீப்பொறி பறக்கும். ‘தன்னுடைய திரைப்படங்களின் பல காட்சிகளில் தானே முன் நிற்க கமல் விரும்புவார்’ என்று அவருடைய தன்முனைப்பு பற்றி விமர்சனம் செய்யப்படுகிறது. ஆனால் நாயகனுக்கு நிகரான வலிமையுடன் எதிர் நாயகனும் (antagonist) இருந்தால்தான் படம் சோபிக்கும் என்பதில் நம்பிக்கைக் கொண்டவர் கமல். 'தேவர் மகன்' முதற்கொண்டு தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். அந்த வகையில் நாசர் நடித்திருக்கும் ‘பத்ரி’ என்கிற கேரக்டருக்கு ஹீரோவிற்குக் குறைவில்லாத வகையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். பயங்கரவாதியாக நாசரின் நடிப்பு அட்டகாசமாக அமைந்திருந்தது.

பொறுமை இழந்த கணத்தில் நாசரை என்கவுன்ட்டர் செய்ய கமல் அழைத்துச் செல்லும் போது இருவருக்கும் இடையில் நடக்கும் விவாதத்தை இந்தப் படத்தின் மையம் எனலாம். “துப்பாக்கியால பிறக்கற புரட்சி துப்பாக்கியாலதான் சாகும். காட்டுக்குள்ள என்ன பண்றீங்க? நாட்டுக்கு வா... சேவை பண்ணு...” என்று கமல் வெடிக்க “செய்ய விடுவாங்களா உங்க முதலாளிங்க?” என்று நாசர் பதிலடி தர “அரசியல்வாதிகளைத் துரத்தக் குச்சி போதும். எங்க கிட்ட மோதுங்க. சாகத் தயாரா இருக்கோம். அப்பாவி மக்களை ஏன் கொல்லணும்?” என்று எதிர்வாதம் செய்வார் கமல்.

குருதிப்புனல்
குருதிப்புனல்

“நான் எந்த உறுத்தலும் இல்லாம உன்னைக் கொல்ல முடியும். ஆனா உன்னால முடியாது. உதவாக்கரை சட்டமும் மிடில்கிளாஸ் மனசாட்சியும் உன்னை உறுத்தியே சாகடிச்சிடும்...” என்கிற நாசர், “இப்பத் தெரியுதா... ஒருத்தனை அவனோட பொறுமையோட எல்லைக்கே கொண்டு போனா தீவிரவாதியா மாறிடறான்” என்றதும் சட்டென்று நிதானத்திற்கு வந்து நன்றி சொல்வார் கமல். முதல் விசாரணையின் போது “யாரு நேர்மையான கொம்பன்?” என்று நடக்கும் உரையாடலும் முக்கியமானது.

யார் அந்த ‘சின்ன சுவாமிஜி?’

நிழல்கள் ரவி ரயில்வே ஸ்டேஷனுக்குள் தப்பித்து விடும் காட்சி, ராக்கெட் லான்ச்சர் மூலம் அமைச்சர் கொல்லப்படுவது, பிறகு நடக்கும் அதிரடி ஆக்ஷன் என்று ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கும். டிரைவராக பிடிபட்ட ஆசாமிதான், குழுவின் தலைவன் என்பது வெளிப்படும் காட்சியும் ஒரு நல்ல ட்விஸ்ட்.

‘சின்ன சுவாமிஜி’ என்று சங்கேத மொழியில் அறியப்படும் இயக்குநர் கே.விஸ்வநாத்தின் நடிப்பும் சிறப்பானது. இவர் ஆதியின் வீட்டில் உணவருந்தும் போது, டெலிபோன் அழைப்பு வரும். அதை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கும், போது அவருடைய எச்சில் கை, ஆதி - அப்பாஸ் இருக்கும் புகைப்படத்தின் மீது தற்செயலாகப் படப்போகும் போது சட்டென்று கையை விலக்கிக் கொள்வார். மிக நுட்பமான காட்சி இது. இவரை சி.பி.ஐ.யிடம் பிடித்துத் தருவதற்கு முன்னால் “அதுக்கு முன்னால் உங்க முகத்தைப் பார்க்க விரும்பினேன். அதுல கொஞ்சமாச்சும் நேர்மை இருக்கான்னு பார்க்கணும்னு தோணுச்சு” என்று கமல் விரக்தியுடன் சொல்ல “கண்ணாடில போய் உன் முகத்தைப் பாரு. அதுல இருக்கு நேர்மை” என்று குற்றவுணர்வுடன் விஸ்வநாத் சொல்லும் காட்சியில் அவரது நடிப்பு அருமை. அவர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் தோட்டா பின் மண்டையில் பாய்வது தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

குருதிப்புனல்
குருதிப்புனல்

குருவாகவும் நேர்மையின் பிம்பமாகவும் தான் கருதியவரே துரோகம் செய்ததை எண்ணி வருந்தும் கமல், பிறகு அதற்கான காரணத்தை அறிவதும் பிறகு தானே அந்த இக்கட்டான நிலைக்குப் பயணிக்க நேர்வதை எண்ணி கலக்கமுறுவதும் சிறப்பான காட்சி. “நான் தோத்துட்டு இருக்கேன்” என்று மனைவி கௌதமியிடம் சொல்லி கமல் கலங்குவது இந்தப் படத்தின் அருமையான காட்சிகளுள் ஒன்று. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்பாஸ் என்னும் நோ்மையான அதிகாரி

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பயங்கரவாதிகளாகவும் கடத்தல்காரர்களாகவும் சித்திரிக்கும் ஆபத்தான விஷயத்தை இந்திய சினிமா நீண்ட காலமாக பின்பற்றுகிறது என்கிற விமர்சனம் உள்ளது. ஆனால் கமலின் சில படங்களை விதிவிலக்காகச் சொல்லலாம். ‘ஹேராம்’ திரைப்படத்தில் இஸ்லாமியராக வரும் ஷாரூக்கான்தான் வன்முறையை பின்பற்றாதவராக இருப்பார். 'குருதிப் புனல்' திரைப்படத்திலும் அப்படியே. நோ்மையைக் கடைசி வரைக்கும் இழக்காத, தன் உயிரையும் அதற்காக இழக்கிற பாத்திரத்தில் அர்ஜுன் சிறப்பாக நடித்திருந்தார். குடும்பத்திற்காக தன் நேர்மையிலிருந்து பிறழ்கிற கட்டாயத்திற்கு ‘ஆதி நாராயணன்’ உள்ளாகும் போது ‘அப்பாஸ்’ துளி கூட மாறாதது சிறப்பு. இந்த நோக்கில் திரைக்கதையை எழுதிய கமல் பாராட்டுக்குரியவர்.

குருதிப்புனல்
குருதிப்புனல்
நாசரின் வலதுகரமாக வரும் ‘நரசிம்மன்’ பாத்திரத்தில் நடித்தவர் சாப் ஜான். இவர் திரைக்கதையாசிரியரும் கூட. ‘குணா’ படத்திற்கு எழுதியவர். இவரின் பாத்திரத்துக்கு டப்பிங் பேசியவர் நடிகர் விக்ரம். உளவறிய அனுப்பப்படும் ‘சிவா’ (தனுஷ்) என்கிற இளைஞன், ஸ்ரீராமின் உதவியாளர் அரவிந்த் கிருஷ்ணா. பிறகு சிறந்த ஒளிப்பதிவாளராக மாறினார்.

இதில் சித்திரிக்கப்படும் ஒவ்வொரு காட்சிகளும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத குழுவைச் சேர்ந்த யுவன் சாகும் காட்சியை உதாரணத்திற்குச் சொல்லலாம். சோதனைக்காக கமல் வரும் போது பாதுகாப்பிற்கு நிற்கும் போலீஸ்காரர், சட்டென்று துப்பாக்கியை நீட்டி விடுவார். ‘புள்ள குட்டி இருக்கா... அதான் இத்தனை ஜாக்கிரதையா இருக்கே” என்பார் கமல். அடுத்து நிகழப் போகும் விபத்தையொட்டி இந்த முன்னோட்டத்தை உருவாக்கியது திரைக்கதையின் மேதமைக்குச் சான்று.

குருதிப்புனல்
குருதிப்புனல்

சுடப்பட்ட பதற்றத்தில் இருக்கும் கமலின் மகன் “எனக்குப் பயமா இருக்கு. சாமிப் படம் எல்லாம் வேணாம். எனக்குத் துப்பாக்கி கொடுங்க” என்பது, எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்டு பொம்மை துப்பாக்கியையே தன்னிச்சையாக கமல் தூக்கி நிற்பது என்று பல காட்சிகள் சுவாரஸ்யமானவை. பெண் பித்தனான சுரேந்தரின் பார்வை, அர்ஜுனின் பதினைந்து வயது மகள் மீது படியும் போது “என்னை எடுத்துக்க” என்று மன்றாடும் காட்சியில் கௌதமியின் நடிப்பு கலங்கடிப்பதாக இருக்கும். பணத்திற்காக பயங்கரவாதக் குழுவில் ஆயுதம் தூக்கும் பாத்திரத்தில் அஜய் ரத்தினம் சிறப்பாக நடித்திருந்தார்.

நோக்கம் ஒன்று – பாதைகள் வேறு

இந்தத் திரைப்படம் அரச பயங்கரவாதத்தை ஆதரித்தும் நக்ஸல்களை கீழ்மையாகச் சித்திரித்தும் எடுக்கப்பட்ட படம் என்கிற விமர்சனங்கள் எழுந்தன. சுரேந்தர் பாத்திரம் பெண் பித்தனாக காட்டப்பட்டதையொட்டி எழுந்த குரல் இது. அனைத்து அமைப்புகளிலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். ஒரு பாத்திரத்தின் தன்மையை மட்டும் வைத்து ஒட்டு மொத்த திரைப்படத்திற்கும் முத்திரை குத்துவது அபத்தம். காவல்துறையின் ஜீப்பிற்கு குறி வைக்கப்பட்ட வெடிகுண்டில் பள்ளிக்கூட குழந்தைகளின் வேன் சிக்க நேரும் போது “இப்ப ஸ்டாப் பண்ண முடியாதா” என்று ஒரு பயங்கரவாதியின் பாத்திரம் பதறித் தலையில் அடித்துக் கொள்ளும். “எங்களுக்கு வீணான உயிர்ப்பலி மேல நம்பிக்கையில்ல” என்னும் நாசரின் பாத்திரம் தன்னுடைய கொள்கையில் மிக உறுதியாக நிற்பது பல காட்சிகளில் வரும்.

குருதிப்புனல்
குருதிப்புனல்

‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் பாடல்கள் இல்லாதது ஒரு அவசியமான முடிவு. காட்சிகளுக்குப் பொருத்தமாக ஒலிக்கும் பின்னணி இசையை உருவாக்கிக் கவர்ந்தவர் மகேஷ். ‘ஆஸ்கர்’ விருதிற்காக இந்தியாவின் சார்பில் அனுப்புவதற்கு தேர்வான படம் இது. சிறந்த நடிகருக்கான ‘பிலிம்போ்’ விருதை கமல் பெற்றார்.

ஒரு கொள்கையில் தீவிரப்பிடிப்பு உள்ளவர்களும் சமூக நலனிற்காகப் போராடுகிறார்கள். நேர்மையான காவல் அதிகாரிகளும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல தியாகங்களைச் செய்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு தரப்பின் பாதை என்பது எதிரெதிரானது. இடையில் குளிர்காயும் அரசியல்வாதிகள், கறுப்பு ஆடுகள் போன்றவர்களால்தான் ரத்த ஆறுகள் ஓடுகின்றன. அதன் சாட்சியங்களுள் ஒன்றுதான் இந்த ‘குருதிப்புனல்’.