தமிழ் சினிமாவில் 90-களில் சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. 2010-ம் ஆண்டு முதல் அரசியல் கட்சிகளில் செயல்பட்டு வரும் இவர் பா.ஜ.கவில் இணைந்தார். அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இவர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 8 வயதிலேயே தான் தனது அப்பாவால் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக, அதிர்ச்சித் தகவலை அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

`வீ தி வுமன்’ என்ற நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் பர்கா தத் உடனான உரையாடலின்போது இது பற்றி பேசிய நடிகை குஷ்பூ, ``சிறுவனோ, சிறுமியோ... ஒரு குழந்தை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் அந்த தாக்கம் குழந்தையை வாழ்க்கை முழுவதும் பயமுறுத்திக் கொண்டே இருக்கும். என் அம்மாவுக்கு மிகவும் மோசமான திருமண வாழ்க்கையே அமைந்தது. தன் மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்ப தலைவர்தான் அவருக்கு அமைந்தார்.
எனக்கு எட்டு வயது இருக்கும்போது என் அப்பாவால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் அவருக்கு எதிராக என்னால் பேசமுடியவில்லை. இதை வெளியில் சொன்னால் என் அம்மாவும் என்னை நம்பவில்லை எனில் என்ன செய்வது, இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் பிரச்னை வருமோ என்ற அச்சம் என்னுள் இருந்தது. கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே என் அம்மா வாழ்ந்து வந்தார்.

இனியும் தாங்க முடியாது என முடிவு செய்து என் 15 வயதில் அப்பாவுக்கு எதிராகப் பேசத் தொடங்கினேன். எனக்கு16 வயதுகூட இருக்காது. அதற்குள் அவர் எங்களை விட்டுச் சென்றார். அடுத்த வேளை உணவுக்குக்கூட என்ன செய்வது எனத் தெரியாமல் நாங்கள் தவித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ``என் குழந்தைப் பருவம் மிக மோசமானதாகப் பல பிரச்னைகளைக் கொண்டதாக இருந்துள்ளது. ஆனாலும் கூடவே நான் அதை எதிர்த்துப் போராடும் தைரியமும் நம்பிக்கையும் பெற்றேன்’’ எனக் கூறியுள்ளார்.