சினிமா
Published:Updated:

கதைக்கு வால் முளைச்சாச்சு!

‘குதிரைவால்’ படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
‘குதிரைவால்’ படத்தில்

வங்கியில் வேலை செய்யும் ஒருவனுக்குத் திடீரென்று வால் முளைத்துவிடுகிறது

குதிரைவால்’ டீசரே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படத்தின் இரட்டை இயக்குநர்கள் மனோஜ் - ஷியாம் விரிவாக உரையாடுகிறார்கள்.

“ஒரு சினிமா தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இது மேஜிக்கல் ரியலிசப் படம் என்றாலும் எல்லோரும் உணரக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில்தான் குதிரைவால் இருக்கும்” என்றவர்களிடம் அடுத்தடுத்த கேள்விகளை முன்வைத்தேன்.

கதைக்கு வால் முளைச்சாச்சு!
கதைக்கு வால் முளைச்சாச்சு!

“வால் முளைத்த இளைஞன் என்பது வரை டீசரில் புரிகிறது. வேறு என்னவெல்லாம் தனித்துவம்?”

“இது ஒரு கதைக்கரு. அதிலிருந்து மனித உணர்வுகளையும் மதிப்பீடுகளையும் பற்றிப் படம் பேசும். படம் பார்க்கும் அத்தனை பேருமே ‘அட இது என் கதை’ன்னு இனம் காணமுடியும். ஜி.ராஜேஷ் என்கிற எங்களின் நண்பர் இந்தக் கதையைக் கொண்டுவந்தார். நிறைய சவால்களுக்கு இடமளித்து, இந்தப் படத்தை எடுக்க முடிந்தால் இது ஒரு முக்கியமான படமாக இருக்க முடியும் என்று தோன்றியது. நாங்கள் முன்பு இயக்கிய குறும்படங்களைப் பார்த்துவிட்டுத்தான் இந்தக் கதையை இரஞ்சித் கேட்டார். அது பிடித்துப்போய்த்தான் இந்தப் படத்தை ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ மூலம் வெளியிடுகிறார். விக்னேஷ் என்ற நண்பர் யாழி புரொடக்‌ஷன் மூலமாக வந்து இணைந்தார். படம் வேகமாக வளர்ந்து இப்போது ரிலீஸுக்கு ரெடியாக இருக்கு!”

“இன்னும் ‘குதிரைவால்’ எப்படியிருக்கும்னு சொல்லி விடுங்களேன்?”

“வங்கியில் வேலை செய்யும் ஒருவனுக்குத் திடீரென்று வால் முளைத்துவிடுகிறது. அது அவன் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது, உலகம் அதை எப்படி அணுகுகிறது என்பதுதான் ‘குதிரைவால்.’ புதிரும் தொன்மமும் நிறைந்த விஷயத்தில் இருந்து எதார்த்தத்தை அணுகுவதுதான் மேஜிக்கல் ரியலிசம். இதை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் பல படைப்புகள் உருவாகியிருக்கு. மேஜிக்கல் ரியலிசம் மூலம் ஆழமான விஷயங்களை சுவாரஸ்யமா சொல்ல முடியும். நிச்சயம் எல்லோருக்குமே இந்தப் படம் பிடிக்கும்.”

கதைக்கு வால் முளைச்சாச்சு!
கதைக்கு வால் முளைச்சாச்சு!

“இதில் நடிக்கிறது கஷ்டமாச்சே?”

“இதில் கலையரசனின் உழைப்பு பற்றிச் சொல்லியே ஆகணும். இதில் நடிக்கிற எல்லோரையும் வச்சு ஒர்க் ஷாப் நடத்தினோம். வால் வச்சிருக்கும்போது அது உடம்பை எப்படி மாற்றும் என்பதில் தொடங்கிப் பல விஷயங்களைப் பயிற்சி எடுத்தோம். வால் தனியாகத் துடிச்சிட்டு இருக்கும்போது அதுக்கு ஏத்த மாதிரி நடிகரின் உடல்மொழியும் மாறணும். வால் முளைத்த இளைஞனின் பாத்திரத்தைக் கலையரசன் நல்லா உள்வாங்கி நடிச்சிருக்கார்.

அஞ்சலி பாட்டீல் நடிச்சிருக்காங்க. அவங்க கலையரசனுக்கு அறிமுகமாவதே கனவில்தான். கனவில் வந்தவங்க நிஜத்தில் வந்தால் எப்படி இருக்கும், அப்ப கனவு எது நிஜம் எது என்ற கேள்வி வருமில்லையா... அப்படி நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கு.”

மனோஜ்
மனோஜ்
ஷியாம்
ஷியாம்

“முதல்படமே வித்தியாசமான படம்தான் பண்ணவேண்டும் என்னும் முடிவில் இருந்தீங்களா?’’

“ஆமா. முதல் படமே புதுசா செய்யணும்னு நினைச்சதுதான். உளவியல், ஆழ்மனக் கற்பனைகள், மேஜிக்கல் ரியலிசம், சயின்ஸ் பிக்‌ஷன் கூறுகள் எல்லாம் கலந்திருக்கும். ஆனால் அதற்காக படம் புரியாமல்போயிடாது. எல்லோரும் புரிஞ்சு ரசிக்கிறமாதிரிதான் இருக்கும்.

இவ்வளவு வித்தியாசமான படத்திற்குப் பிரதீப், மார்ட்டின் விசர் மியூசிக் பண்ணியிருக்காங்க. ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமாரின் விஷுவல்களுக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கு. ‘வலிமை', ‘எதற்கும் துணிந்தவன்'னு பெரிய ஹீரோக்கள் படங்கள் வரும்போது நாங்களும் கதையை நம்பித் துணிச்சலாகக் களமிறங்குகிறோம்.”