
நவீன இலக்கியப் பரிச்சயமற்ற பார்வையாளர்களுக்கு இந்தப் படம் அந்நியத்தன்மையை ஏற்படுத்தும் என்பதே பெரும் பலவீனம்.
தர்க்கத்தைத் தாண்டி நீளும் மேஜிக்கல் ரியலிசம் இந்தக் ‘குதிரைவால்.’
கனவில் ஒரு வாலற்ற குதிரையைப் பார்த்து, தூக்கத்திலிருந்து விழிக்கும் கலையரசனுக்குத் திடீரென முளைத்திருக்கிறது ஒரு குதிரைவால். எப்படி அந்த வால் முளைத்தது என்று கனவுக்கு விளக்கம் சொல்லும் மூதாட்டி, கணித ஆசிரியர், ஜோதிடர் என மூவரை அணுகும்போது வெவ்வேறு காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. பிராய்ட், லக்கான் எனக் கோட்பாட்டாளர்கள் தொடங்கி எம்.ஜி.ஆர் வரையிலான மேஜிக்கல் ரியலிசப் பயணத்தில் வாலுக்கான காரணத்தைக் கலையரசன் கண்டறிவதே கதை என்றும் சொல்லலாம். ஏனெனில், இதுதான் கதை என்று சொல்ல முடியாதபடி பல்வேறு சாத்தியங்களைப் பார்வையாளர்கள் முன் அடுக்குவதே இந்தப் படத்தின் தனித்துவம்.
கலைடாஸ்கோப் பிம்பங்களைப்போல் சிதறிக்கிடக்கும் கதையின் வடிவங்களைப் பிரதிபலிக்க கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆனந்த்சாமி, ஆறுமுகவேல் என திரையில் தோன்றும் அனைவருமே பங்களித்திருக்கிறார்கள்.
சிறுபத்திரிகைகளில் மட்டுமே பரிசோதிக்கப்பட்ட நவீன இலக்கிய முயற்சிகளைத் திரைவடிவமாக்கப்படுவதற்காகத் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதிய கதாசிரியர் ஜி.ராஜேஷ், ஓர் இலக்கியத்தை அனுபவிக்கும் அதே மனநிலையுடன் காட்சிச் சித்திரங்களாக்கிய இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

கோவையற்ற, கோணங்களற்ற கனவின் கதையைக் காட்சியாகக் கடத்தவும் முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார். ‘ஒழுங்கற்றவையின் ஒழுங்கு’ எனச் சொல்லும்வகையில் கவனம் ஈர்க்கிறது கிரிதரனின் படக்கோவை. பல்லியின் விளிப்பு தொடங்கி கேணிக்குள் கேட்கும் சின்னஞ்சிறு பூச்சிகளின் சலனம், நமக்குள்ளே ஓடும் குழப்பங்களின் பேரிரைச்சல் என ஒலி வடிவமைப்பில் மிரட்டுகிறார் ஆண்டனி ரூபன். வீட்டின் பல்கோண வடிவமைப்பு தொடங்கி குட்டிக் குட்டிப் படங்கள், பொம்மைகள் வரை தெரிகிறது கலை இயக்குநர் ராமு தங்கராஜின் உழைப்பு. பரீட்சார்த்த படம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கான வெளியைக் கொஞ்சமும் சிதைக்காமல் அவற்றினூடே சன்னமாய்க் கசிகிறது பிரதீப்குமார் - மார்ட்டின் விஸ்ஸர் இணையின் இசைக்கோப்பு.
நவீன இலக்கியப் பரிச்சயமற்ற பார்வையாளர்களுக்கு இந்தப் படம் அந்நியத்தன்மையை ஏற்படுத்தும் என்பதே பெரும் பலவீனம். ஆனால் தயக்கங்களைத் தள்ளிவைத்துவிட்டுத் துணிச்சலுடன் தமிழ்சினிமாவில் புதிய வாசலைத் திறந்து படரும் இந்தக் குதிரைவாலைக் கொண்டாடலாம்.